10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

10. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்
விருத்தாசலமும் நண்பர் வீரபாண்டியன் திருமணமும்
டப்பா அடிப்பது பற்றி உங்களுக்குத்தெரியுமா ?
பத்தாம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு ப்ளஸ் ஒன்னில் ஆங்கில வகுப்பில் அதுவும் சயின்ஸ் க்ரூப்பில் சேர்ந்து நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹெட் மாஸ்டருக்கும் எனக்கும் எழாம் பொருத்தம் . நீ பெயில் ஆவே பெட் கட்றேன் என எல்லோர் முன்பும் என்னை அவர் அவமானப்படுத்தியபோது நான் பாஸ் ஆகி காட்றேன் சார் என அவரிடம் சவால் விட்டேன் . அப்போது அனைத்து பிராக்டிகல் மார்க்கிலும் நான் பெயில் ஆகியிருந்தேன். அவருக்கு நான் அப்படி எதிர்த்துப் பேசியது பிடிக்கவில்லை. காதைப் பிடித்து தரதரவென இழுத்து வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தார். நீ மட்டும் பாஸ் ஆயிடு ஒரு பக்கம் மீசையை நான் வழிச்சுக்கறேன் என்றார். அந்த அவமானம் தாங்காமல் பரீட்சைக்கு முந்தையை இருபது நாள் படிப்பு விடுமுறையில் வைராக்கியத்துடன் டப்பா அடித்தேன் . டப்பா என்பது அர்த்தமே தெரியாமல் பக்கம் பக்கமாக உருப்போடுவது . இறுதியில் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. நான் 1200 க்கு 515 எடுத்து. பாஸ் என் வாழ்க்கையில் இன்று வரை அன்றைய நாளுக்கு ஈடான மகிழ்ச்சியை அனுபவித்ததில்லை . இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையை பற்றி கவலையே எனக்கு நீங்கி ஒரு துணீச்சல் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது அன்றைய தினத்தில்தான் ].
இதற்கு மூல காரண்மாக இருந்தவர் நான் ப்ளச் டூ படித்த செங்கல்பட்டு துய கொலம்பா பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜார்ஜ் அவர்கள்
அன்று நானும் முத்துக்குமாரும் காம்ராஜும் காஞ்சீபுரத்திலிருந்து சென்னை திரும்ப செங்கல்பட்டு பேருந்தில் வரும்பும் போது எனக்கு முன் சீட்டில் ஒரு நரைத்த தலை ஒன்றைப் பார்த்6து சந்தேகத்துடன் முன்னால் செ3ன்று பார்த்தேன் என கடந்த வாரம் முடித்திருந்தேன் அல்லவா . அவர் வேறு யாருமில்லை மேற் சொன்ன என் ப்ளஸ்டூ தலைமை ஆசிரியர் ஜார்ஜ் தான். .
அவரை பார்த்த மகிழ்ச்சியில் என்னை அவரிடம் ஞாபகப்படுத்தி எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தியதும் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை இப்போது ரிடையர்ட் ஆகி மிகவும் தளர்ந்திருந்தார் . பழைய மிடுக்கு சுத்தமாக இல்லை சோர்ந்திருந்த அவரது கண்களில் என்னை அரிமுகப்படுத்திக்கொண்டதும் ஒரு பிரகாசம் . சட்டென மனைவியிடம் திரும்பி ஏய் இங்க பாத்தியா என் ஸ்டூடண்ட் சினிமாவுல இருக்கானாம்.. அசிஸ்டண்ட் டைரக்டர் அதுவரை இறுக்கமாக இருந்த அவர் மனைவி என்னை ஏற இறங்க பார்க்க
”என்ன படம்பா சொன்னே ?
”லவ்டுடே சார்,ல் விஜய் நடிச்ச படம் போன வருஷம் வந்தது”.,
”எனக்கு தெரியாதுப்பா இவதான் டிவில்லாம் பாப்பா ,
என்னைப் பார்த்த அந்த அம்மை முகத்தில் லேசாக சிறு புன்னகை எட்டிப் பார்த்து சட்டென மறைந்தது. ஆனால் ஜார்ஜ் மாஸ்டரோ குழந்தைபோல மகிழ்ச்சிமுகத்தில் அலையடித்தது.
ஆசிரியர்களுக்கு தங்களிடம் படித்த மாணவன் பொது இடத்தில் குடும்பத்தினர் முன் மரியதை செய்யும் போது குழந்தையாகவே மாறிவிடுவதன் பின்னால் இருக்கும். உணர்வெழுச்சி என்னை பலவாறாக பிற்பாடு யோசிக்க வைத்தது . இப்படியாக முத்துக்குமாருடன் முதல் முறையாக சென்ற அந்த காஞ்சீபுரம் பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை நிரப்பிக்கொண்டது.
முத்துக்குமாரின் கவிதைகள் எனக்கு பிடித்திருந்தாலும் நான் அவ்வளவாக அதை அவனிடம் வியந்தோதியதில்லை. .காரணம் ஏற்கனவே அது சுஜாதா, பாலு மகேந்திரா , பாரதிராஜா போன்ற ஜாம்பவான்களால் புகழப்பெற்று ஒரு அங்கீகாரத்தை அடைந்துவிட்டது. மேலும் எனது கவிதை ரசனை நகுலன். பிரமிள். ஆத்மாநாம் என நவீன இலக்கிய கவிஞர்களோடு ஐக்கிய மாகியிருந்ததால் முத்துக்குமாரை முழு மனத்தோடு பாரட்ட மனம் இடம் கொடுக்கவில்லை .. மேலும் கவிஞர்கள் மன நிலை நன்கு அறிந்தவன் நான். கொஞ்சம் பாரட்டிவிட்டால் அப்புறம் சட்டென அவர்கள் தலை ஒட்டகச்சிவிங்கியாய் உயர்ந்து அதன் பின் நாம் அண்னாந்து பார்க்கும் நிலைக்கு போய்விடும் . முத்துக்குமார் அப்படிப்பட்டவன் அல்ல என்றாலும் ஆரம்ப கால படைப்பாளிக்கு புகழைப்போல நண்பனும் இல்லை பகைவனும் இல்லை. .. இதை என் வாழ்நாளில் கண்கூடாக பலரிடம் பார்த்திருந்தேன் என்பதால் அவன் கவிதை குறித்து நான் பெரிதாக வாய் திறக்காமைக்கு காரணம் . கூடிய விரைவில் அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது
ஒரு நாள் நான் வெளியேபோய் விட்டு மேன்ஷன் அறைக்கு திரும்பிய போது விருத்தாசலத்திலிருந்து ஒரு பையன் எனக்காக காத்திருந்தான் . விசாரித்த போது முத்துக்குமார் இங்கே அடிக்கடி வருவதாக ஊரில் எனது நண்பர் தண்டபாணியின் தம்பி கார்த்தி மூலம் கேள்விப் பட்டதாகவும் தான் அவனோடு காஞ்சீபுரத்தில் ஒன்றாக படித்தவன் என்றும் சென்னைக்கு ஒரு வேலையாக வந்த கையோடு அவனை பார்த்துவிட்டுப் போகலாம் என வந்திருப்பதகவும் கூறினார் . நான் உடனே முத்துக்குமாருக்கு பேஜரில் தகவல் அனுப்பி வரச்சொன்னேன். அவனும் வந்தான் பள்ளி நண்பன் ஒருவன் இப்போது புகழடைந்த கவிஞனாக இருப்பது அந்த நண்பனுக்கு பெருமை பிடிபடவில்லை .அவன் கவிதைகளை பாலுமகேந்திரா சுஜாதா பாரட்டியது பற்றி செய்திகளில் படித்து மகிழ்ச்சியைடைந்தாகவும் விருத்தாசலத்தில் அவன் கவிதைகளுக்கு விமர்சனக் கூட்டம் ஒன்று நடத்த விரும்புவதாகவும் கூறினான். கையோடு என்னையும் அழைத்து நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முத்துக்குமாரை பாரட்டிப் பேச வேண்டும் எனக்கூற நானும் அப்போதைக்கு ஒத்துக்கொண்டேன்
அந்த நேரம் பார்த்து எனக்கும் முத்துக்குமாருக்கும் நெருங்கிய நண்பரான இயக்குனர் வீரபண்டியனுக்கு விருத்தாசலத்தில் திருமணம் ஏற்பாடகியிருந்தது. சரி அந்த திருமனத்துக்கு வரும் போது அப்படியே கூட்டத்தையும் நடத்திக்கொள்ளல்லாம் என முடிவாக அந்த நண்பரும் உற்சாகத்துடன் விருத்தாசலம் திரும்பினார்

காஞ்சிபுரம் போல விருத்தாசலமும் ஒரு தொன்மையான நகரம் . புதுமைப்பித்தன் சொந்தப்பெயர் . அவருடைய அப்பா கடலூரில் தாசில்தாரக பணிபுரிந்த காலத்தில் அவர் பிறந்ததால் விருத்தாசலம் என பெயர் சூட்டியிருந்தார். மட்டுமல்லாமல் சிறு வயதிலிருந்தே சில ஊர்களின் பெயர்கள் சம்பந்தமே இல்லமால் மனதில் அடிக்கடி தோன்றும் .சிதம்பரம் கோவில்பட்டி மார்த்தாண்டம் . அந்த ஊர்களின் அமைப்பு தெருக்கள் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்ப்பேன் . அதில் ஒன்று விருத்தாசலம் ..மேலும் என் கல்லூரி வாழ்க்கையில் தொடர்புடைய பெயரும் கூட என்பதால் அந்த ஊரின் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு
தமிழ்நாட்டில் சினிமா வெறித்தனம் அதிகமிருக்கும் ஊர் என்றால் மதுரை என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் .. ஆனால் அதைவிடவும் அதிகமிருக்கும் ஊர் விருத்தாசலம் என்பது பலரும் அறியாதது . .இல்லாவிட்டால் மதுரை மைந்தன் விஜய்காந்த் சட்டமன்றதேர்தலில் முதல் முறையாக எடுத்த எடுப்பில் களமிறங்க விருத்தாசலத்தை தேர்வு செய்திருப்பாரா .? இத்தனைக்கும் பாமக கோட்டை அது. அந்த அளவுக்கு அம்மக்களுக்கு சினிமாவின் மீது அளப்பரிய காதல் . விஜயகாந்தின் டப்பா படம் கூட 40 நாள் ஓடி லாபம் கொடுக்கும் ஊர்.
அப்படிப்பட்ட ஊரில் சினிமாக்காரன் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும். வீரபாண்டியன் நடத்தியது திருமணமல்ல திருவிழாதான் சபீதா பேலஸ் ஐநூறு இருக்கைகள் கொண்ட அந்த மண்டபத்தில் 5000ம் பேர் கூடிவிட்டனர். திரைப்பட இயக்குனர்கள் அகத்தியன் தங்கர்பச்சான் .பாவலர் அறிவுமதி ஆகியோருடன் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். வழியெங்கும் அவர்களுக்கு பதாகைகள் சுவரொட்டிகள் உடன் முத்துக்குமாருக்கும் எனக்கும் கூட வரவேற்பு பேனர்கள் மண்டப வாசலில் வைக்கப்பட்டன. அனேகமாய் உதவி இயக்குனருக்கு வரவேற்பு பேனர் வைக்கும் ஒரே ஊர் விருத்தாசலம் தான் . மேலும் எனக்கு பேனர் வ் வைத்த முதல் வைபவமும் அதுதான் இடத்தில் நண்பர் வீர்பாண்டியனைப்பற்றிச் சொல்லவேண்டும் . எனது உதவியாளராக இருந்த நண்பர் ரவிச்சந்திரன் மூலமாகத்தான் வீரபண்டியன் அறிமுகம் என்றாலும் பிற்பாடு எனக்கும் முத்துக்குமாருக்கும் நெருங்கிய நண்பராகிவிட்டார்.
காதல் கோட்டை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு அப்போது அவரும் இயக்குனராக வாய்ப்புதேடிக்கொண்டிருந்தார் . அவரது காதல் கதையும் ஆச்சர்யம் போல காதல் கோட்டைபோல கண்கள்லால் பார்க்காமல் பல நாட்கள் கடிதம் மூலமாக வளர்ந்து காதலில் முடிந்த கதை ஒருவகையில் காதல் கோட்டைக்கு இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லலாம் எப்போதும் மக்கள் நலனில் தீவிர அக்கறை கொண்டவர். சதா யாருக்காவது உதவி செய்ய ஓடிக்கொண்டேயிருப்பார் . கோடம்பாக்கத்தில் நான் பார்த்த அரிய சில சிறந்த மனிதர்களுல் அவரும் ஒருவர். சிறந்த நடிகை .ஐஸ்வர்யா ராஜேஷை திரையுலகிற்கு அறிமுகம் செய்த அவர்களும் இவர்களும் படத்தின் இயக்குனர் . இப்போது அவர் விருத்தாசலத்தை அடுத்த கோமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு அங்கு பல சமூகநலப்பணிகளுடன் அரசியல் சினிமா என இரட்டை சவாரி செய்து வருகிறார்.
இது போல நற்குணம் நிரம்பிய வீரபண்டியன் அவர்களின் திருமணத்தில் கூட்டத்தில் சிக்கி திக்குமுக்காடி ஒருவழியாக அன்று மதியம் முத்துக்குமாரின் நண்பர் ஒருங்கினைத்த பட்டாம்பூச்சிகள் விமர்சன கூட்டத்துக்கு வந்துசேர்ந்தோம் . காஞ்சீபுரம் இலக்கியவட்டம் போல அமைப்பாக இல்லாவிட்டாலும் அந்த ஊருக்கு சற்றும் சளைக்காதவகையில் எண்ணிறந்த கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நிரம்பிய ஊர் அது . நடவு களம் போன்ர சிறு பத்ரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கதா விருது பெற்ற கவிஞர் கரிகாலன், இரத்தின புகழேந்தி . பட்டி சு செங்குட்டுவன் போன்ற கவிஞர்களும் இன்று புகழ்பெற்ற எழுத்தாளர்களாக விளங்கும் இமையம் , கண்மணி குனசேகரன் போன்றவர்களையும் உருவாக்கிய ஊர் அது . அன்றைய கூட்டத்துக்கு இதில் பெரும்பலோர் பங்கேற்றனர் . அனைவரும் சொல்லி வைத்தார் போல முத்துக்குமாரின் கவிதைகளுக்கு மகுடம் சூட்டினர் . உண்மையில் அந்த அவனது முதல் தொகுப்பு எல்லாவிதமான பாரட்டுக்கும் தகுதியுடையது தான் என்றாலும் எனக்குள் இருக்கும் கறார் கந்தசாமி விழித்துக்கொண்டான் .
அட நாமும் பாரட்டிவிட்டால் என்னாவது என நினைத்து கூட்டம் நடக்கும் போதே விமர்சனக் கட்டுரை மனதுக்குள் எழுத ஆரம்பித்துவிட்டேன்
என்முறை வந்த போது எடுத்த எடுப்பிலேயே படிமம் இல்லாத கவிதையை நான் கவிதை என்றே கணக்கில் எடுப்பதில்லை எனத்துவங்கி கவிதை என்பது அருவி போல கொட்டவேண்டும் பம்புசெட் போல இறைக்கக்கூடாது எனச் சொல்லி வழக்கமான என் கவிதை ரசனையோடு ஒப்பிட்டு முத்துக்குமார் இன்னும் சிறப்பாக எழுட்ர்ஹ வேண்டும் என்ற ரேஞ்சில் பெச அவன் முகத்திலோ ஈயாடவில்லை
ஒரு வழியாக கூட்டம் முடிந்து அனைவரும் வெளியில் வந்தோம். ஊருக்குப் போவது வரை நம்மோடு சண்டை போடப்போகிறான் என நினைத்து நான் முன்னே நடக்க வழக்கம் போல வேகமாக என் பின்னால் வந்த அந்த மெலிந்த கை என் தோளில் விழுந்தது.
பாலா அசத்திட்டீங்க செமையா இருந்தது ஸ்பீச் நல்லா எழுதறேன்னு சுஜாதாவே சொல்லிட்டாரே எல்லாரும் அதையே சொல்ல கேக்க எனக்கே போரடிச்சிடுச்சி என அவன் சொல்ல எனக்கோ பொசுக்கென ஆகிவிட்டது. என்னடா இவனை கடுப்பேத்தலாம்னு பாத்தா விட மாட்டேங்கிறானே என மனதுக்குள் சொல்லிக்கொண்டு அவனிடம் சிரித்து சமாளித்து மழுப்பினேன்.
உண்மையில் நானோ அல்லது வேறு யாரோ அந்த இடத்திலிருந்தால் நிச்சயம் நட்பு முறிந்திருக்கும் அல்லது குறைந்த பட்சம் மனக்கசப்பாவது உண்டாகியிருக்கும் .ஆனால் அவனது அணுகு முறையே வேறு
அவன் கவிதைகளை விமர்சனம் பண்ணிய என்னை வைத்தே அவனை பாரட்டி முன்னுரை எழுதவைத்ததுதான் அவன் வெற்றி. அவனது மூன்றாம் தொகுப்பு நியூட்டனின் மூன்றாம் விதி யின் முன்னுரையை நான என்னிடமே எழுதக்கொடுத்தான் . பிரபலமான கவிஞனுக்கு முன்னுரை எழுதும் உணர்வெழுச்சியில் நானும் அவன் கவிதைகளை பாரட்டி எழுதினேன் . அதுதான் முத்துக்குமாரின் புத்திசாலித்தனம் .
ஒருவனுடைய அசாத்திய வெற்றிக்குப்பின்னால் திறமை உழைப்பு இதைத்தாண்டி விமர்சங்களை ஏற்கும் மனநிலை அதை கையாலும் பக்குவம் ஆகியவையும் வேண்டும் என்பதை முத்துக்குமாரிடம் நானும் கற்றுக்கொண்டேன் உங்களுக்கும் அதை சொல்லிக்கொள்கிறேன் .
(தொடரும்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *