9 நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

இலக்கிய வட்டம் நாராயணன்

அன்று காலை காஞ்சீபுரத்தில் இறங்கியதும் தான் படித்த ஆண்டர்சன் பள்ளிக்கு அழைத்துச்சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முத்துக்குமார் உடன் கவிதை எழுதியதற்காக பள்ளியில் எதிர்கொண்ட பிரச்னையையும் இறுதியில் ஆசிரியர் எக்பர்ட் சச்சிதானந்தன் மூலமாக தான் காப்பாற்றப்பட்ட விதத்தையும் விவரித்த முத்துக்குமார் அடுத்ததாக பேருந்து நிலையம் அருகிலிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்றான்.
வழக்கமான பிராமண வீடுதான் அது. பொதுவாக பிராமண வீட்டுக்குள் நுழைந்தாலே ஒரு அலர்ஜி .. மரியாதைக்காக அவர்கள் டீ , காபி தண்ணீர் கொடுத்தால் எனக்கு பதட்டமாகிவிடும். லோட்டவைத் தூக்கி குடிக்கச் சொல்லி சின்ன வயதில் நண்பன் வீட்டுக்குப்போகும் போது கட்டயப்படுத்தியதும் சட்டை முழுக்க காபி கொட்டிக்கொண்டதும் வழக்கம் போல ஞாபகத்தில் எட்டிப் பார்த்தது.
இங்கு எதற்கு அழைத்து வந்தான் என யோசிக்கும்போதே வாங்க வனக்க என அழைத்துக்கொண்டே எதிர் வந்தார் ஒருவர். நெற்றியில் சூரணம் கண்களில் பளிச் வெளிச்சம் . முன்பக்கமாக தூக்கியிருந்த தெத்து பற்களுடன் வாய் சிரிப்பில் கூடுதலாய் 70 எம் எம். காட்ட மகிழ்ச்சி சினிமாஸ்கோப்பாய் விரிந்தது
இவர்தான் எங்க நாராயணன் என அவன் சொன்னதுமே தெரிந்துவிட்டது. ஏற்கனவே பரிச்சயமான பெயர் . . இலக்கிய வட்டம் நாராயணன் என்றால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தெரியாத இலக்கியவாதியே இருக்க முடியாது. இலக்கியச் சிந்தனை இனியவனுக்குப் பிறகு எங்கள் மாவட்டத்தில் இலக்கிய சேவைக்கு பேர் போனவர் அவரது மனைவி அதற்குள் காபி போட்டுக்கொண்டு வந்து இருவரிடமும் நீட்ட நான் மறுத்தும் கேட்காமல் ஒரு காபி குடிச்சா ஒண்னும் ஆயிடாது என கையில் திணித்துவிட்டார் . நான் வழக்கம் போல கைக்கும் வாய்க்குமாக தடுமாற வாய் வச்சே குடிங்க என நாராயணன் தைரியம் கொடுத்தார் .
நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டதால் உடனே வீட்டை விட்டு புறப்பட்டு வழக்கமாக இலக்கிய வட்டம் நிகழ்வு நடக்கும் புன்னமை தியாகராய வன்னியர் சங்க பள்ளிக்கு வந்துவிட்டோம் ,
திருக்கழுக்குன்றத்தில் நான் நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்ததும் இதே புன்னமை தியாகராய வன்னியர் சங்க நடுநிலைப்பள்ளி என்பதால் அந்த பெயரை முழுதாக எழுதுவதில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி. ( தமிழகத்தின் மிகச்சிறந்த பள்ளிகளில் அதுவும் ஒன்று நான் இன்று ஒரு கலை இலக்கிய வாதியாக உருவாக படி அமைத்துக்கொடுத்தது அந்த பள்ளிக்கூடம்தான் என பெருமையுடன் சொல்லிக்கொள்வேன்) .
இலக்கிய வட்டம் நிகழ்வுகள் குறித்தும் நாராயணன் குறித்தும் கொஞ்சம் விரிவாக சொல்லாமல் போனால் முத்துக்குமாரின் வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியை மறைத்த பாவத்துக்கு நான் ஆளாக நேரிடும் .
காஞ்சீபுரம் இலக்கிய வட்டம் நிகழ்ச்சிகளின் சிறப்பே அதற்காக அவர் அச்சடிக்கும் அழைப்பிதழ்கள்தான் . அவை ஒவ்வொன்றும் அழைப்பிதழ் அல்ல சிரிப்பிதழ். .கொனஷ்டை கோக்கு மாக்கு நக்கல் நையாண்டி என அங்கதச்சுவைக்கு என்ன என்ன பெயர் இருக்கிறதோ அத்தனையும் பயன் படுத்தலாம்.
ஒவ்வொரு கூட்டத்தின் அழைப்பிதழும் வித்தியாசமாக இருக்க மெனக்கெடுவார் .. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் மட்டுமல்லாது கலந்துகொள்ளும் முக்கிய உறுப்பினர்கள் அனைவரது பெயருக்கும் அவராக ஒரு பட்டப்பெயர் இணைத்து அச்சடிப்பார் . ஒவ்வொரு கூட்டமும் காரசாரமாக விவாதம் களைகட்டும்.
வெளியூரிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு கூட்டத்தின் பாதியிலேயே கை கால் நடுங்க ஆரம்பிக்கும் . ஒழுங்கா வீடு போய் சேருவோமா என லேசாக பயம் தட்டும். சு.ரா முதல் லாசரா வரை கூச்சல் கலாட்டா இல்லாமல் ஊர் திரும்பியவர்கள் குறைவு . இதுகுறித்து பல விமர்சனங்களும் இலக்கியச்சூழலில் அப்போது அடிக்கடி எழும் . வழக்கமாக இது மாதிரி கூட்டங்கள் எல்லை மீறும் போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களுக்குத்தான் தலைவலி
ஆனால் நாராயணன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் காரணம் அதை சிண்டு முடிந்து துவக்கி வைப்பவரே அவர்தான் . கூட்டம் முடிந்து சிலரிடம் அவரே போய் .. ஏன்ப்பா நீயெல்லாம் சண்டை போடுவேன்னு நம்பித்தான் கூட்டமே ஏற்பாடு பண்றோம் இப்படி எதுவுமே பேசாம சாது சாம்பிரானியா உட்கார்ந்திருந்தா என்னை நம்பி கூட்டத்துக்கு வரவங்க கதை என்னாவது என்பார். சில சமயங்களில் அவருக்கே மாத்து விழும். என்ன சொல்லப் போறே பாப்பான்னு திட்டுவே திட்டு என அவரே எடுத்தும் கொடுப்பார் . அந்த விதத்தில் அவரிடம் கொள்கை கட்சி எந்த பாரபட்சமும் கிடையாது .
இலக்கிய வட்டத்தின் சிறப்பே அதுதான் அங்கு கம்யூனிஸ்டு கள் அம்பேத்காரிஸ்டுகள் பெரியாரிஸ்டுகள் , பாரதியாரிஸ்டுகள் காலச்சுவடுஸ்டுகள் நிறப்பிரிகையிஸ்டுகள் என சகலரும் கூடும் இடமாக அதை வடிவமைத்து ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் விடாமல் கூட்டம் நடத்தி வந்தார் .
ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஐம்பது முதல் நூறுபேர் வரை கூடுவர் . சிறப்பு அழைப்பாளர்களுக்கு பசியை வெளிக்காட்டாமல் கமுக்கமாக அமர்ந்திருக்க இரண்டு மணிக்கு விவாதம் உச்ச கட்டம் எட்டும் . கடைசியில் விருந்தினரை அழைத்துப்போய் உணவருந்த வைத்து பயணப்படி கொடுத்து பேருந்து ஏற்றுவது வரை விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கும் . அவரோடு இலக்கிய வட்டத்தின் முக்கிய தூண்களாக காஞ்சி அமுத கீதன் தரும..இரத்தினக்குமார் ஆசிரியர் எக்பர்ட் சச்சிதானந்தன் , புல்வெளி காமராஜ் , உத்திரமேரூர் விமல் , தமுஎகச சுந்தா ஆகியோர் இலக்கிய வட்டம் கூட்டத்தை வழி நடத்துவதில் முக்கிய பங்காற்றி வந்தனர். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொருவர் பொறுப்பில் விடப்பட்டு அவர்களையே அனைத்தையும் தீர்மானிக்க வைப்பார் .
(இதில் தரும. இரத்தினக்குமார் இயக்குனர் ஆர். கே செல்வமணியின் சகோதரர். செல்வமணி அவர்களின் சொந்த ஊர் திருமுக்கூடல் . காஞ்சீபுரத்துக்கு அருகில் பாலாற்றங்கரையில் இருந்தது .முத்துகுமாரின் ஆரம்பகால கவிதை ஈடுபாட்டை உரையடல் மூலம் வளர்த்ததில் இவருக்கும் அமுதகீதனுக்கும் முக்கிய பங்குண்டு )
வெறுமனே கூட்டம் நடத்துவது மட்டுமல்லாமல் புத்தக விற்பைனையும் நாராயணன் நடத்தி வந்தார் . பிற்பாடு அவருக்கு இதுவே கடன் சுமையும் உருவாக்கியது .
பிற்பாடு நான் அடிக்கடி இலக்கிய வட்டம் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டு தனியாகவும் முத்துக்குமாருடனும் அடிக்கடி கலந்துகொண்டேன். என்னைக்கேட்காமலே புத்தகங்களை தபாலில் அனுப்பிவிட்டு பில்லையும் அனுப்பி வயிற்றில் புளியை கரைப்பார். . முத்துக்குமாரின் திருமணம் ஆதவன் முதலாவது பிறந்த நாள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்னையில் தன் சகாக்கள் அமுதகீதன் தரும .இரத்தினக்குமாருடன் கலந்துகொள்வார் . ஒருநாள் கல்கத்தா பயணத்தில் அவர் மரணித்த அதிர்ச்சி சேதியை முத்துக்குமார் கூறியபோது மிகவும் உடைந்து போனேன். . காஞ்சீபுரத்தில் இலக்கியவட்டம் உருவாக்கிய அலையும் அவரோடு ஓய்ந்தது. ,.
அன்று முதல் முறையாக இலக்கிய வடட்ம் நிகழ்ச்சிக்குப்போன எனக்கு புது அனுபவமாக இருந்தது. பின் வழக்கம் போல கூட்டம் முடிந்ததும் நானும் முத்துக்குமாரும் தரும ரத்தின குமார் , அமுதகீதன் புல்வெளி காமராஜ் மற்றும் இன்னும் யார் யார் என நினைவிலில்லை கூட்டமாக தொன்மையும் பாரம்பரயமும் பல்லவர் கால கட்டிடக்கலைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் கைலாச நாதர் கோவிலை பார்க்கச் சென்றோம். பல வகைகளில் அது என் வாழ்வின் மறக்க முடியாத நினைவு .
முன்பு சமண கோவிலாக இருந்து பின் சைவக்கோவிலாக மாற்றப்பட்ட அதன் வரலாறும் அப்போது எனக்கு பெரும் வியப்பை உண்டாக்கியது . அதன் பிறகே எனக்கு சைவ சமண மதங்களுக்கிடையில் நடந்த அனல் புனல் வாதங்களும் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட சங்கதிகளும் பெரும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் உண்டாக்கியது . பிற்பாடு தொடர்ந்து இது குறித்து வாசிக்கும் ஆவலுக்கும் அந்த நாள் துவக்கப் புள்ளியாக அமைந்தது.
அந்த பயணத்தில் என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு நபர் புல்வெளி காமராஜ் அவர்களின் அப்பா . தீவிர தமிழ் சினிமா ரசிகரான அவர் பட்டுத்தறி நெசவாளி . பொதுவாக நெசவாளர்கள் அனைவரது வாழ்விலும் அக்காலத்தில் ரேடியோ வும் இக்காலத்தில் டிவியும் உற்ற நண்பர்கள் . தறிக்குழியில் கால் அசைத்தபடியே தமிழ் சினிமாவை இண்டு இடுக்காக அறிந்து வைத்து ஆச்சர்யப்படுத்தினார் அவர் . நான் காஞ்சிபுரம் போகும் பேதெல்லாம் என்னிடம் தமிழ் சினிமா இதுவரை வந்த படங்களின் பட்டியலை கெட்டுக்கொண்டேயிருந்தார் . ஆனால் அப்போது என்னிடம் அது கிடைக்கவில்லை . இன்று இணையம் வந்தபிறகு கொடுக்க அவர் இல்லை
இப்படியாக அந்த முத்துக்குமாருடன் காஞ்சி சென்ற அந்த முதல் பயணமே எனக்கு பல வித வித்யாசமான மனிதர்களையும் சம்பவங்களையும் தொகுத்து நினைவில் அழியாத தடமாக பதித்துக்கொண்டது
அன்று மாலை நானும் முத்துக்குமார் காமராஜ் மூவரும் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து பெரு நகர ரயில் வழியாக சென்னை வந்தடைய ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தோம்
நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் வரிசையில் தலை முழுவதும் வெள்ளையாக ஒருவர் அமர்ந்திருந்தார் . இந்த த்லையை எங்கோ பார்த்திருக்கிறோமே என ஒரு சந்தேகத்தில் முன்பக்கமாக் எழுந்து போய் பார்க்க அட அந்த உருவம் என்னை வியக்க வைத்தது. ,
( தொடரும்)
Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *