8. நா. முத்துக்குமார் நட்பின் பேரிலக்கணம்

(கடந்த 7ம் பகுதியின் தொடர்ச்சி)

அன்று நான் கேட்ட மூன்றே கேள்விகள் முனியப்பராஜின் வாழ்வை மாற்றியது. அந்த வயதில் பதிலே சொல்ல முடியாத கேள்விகள் அவை என்பதோடு கேள்விகளுக்கு போகாமல் விட்டுவிடுகிறேன் .. அதன் பிறகு முனியப்பராஜ் சினிமா பக்கமே வரவில்லை . ஏழு வருடங்களுக்குபின் 2006 அல்லது 2007 வாக்கில் சென்னை பிலிம் சேம்பரில் கலைஞர் பிறந்த நாளுக்கு 100 கவிஞர்கள் ஒன்றாக கவிதை வாசிக்க ஒன்றுகூடிய கூட்டத்திற்கு நான் சென்றிருந்த போது வாசலில் வந்து நின்ற காரில் ஜூனியர்கள் புடைசூழ முனியப்பராஜ் அட்டகாசமாக வந்திறங்கினான். .பல வருடம் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் கட்டியணைத்துக்கொண்டோம். அண்ணே தம்பி இப்போ பப்ளிக் பிராசிக்யூட்ர்னே ஹை கோர்ட்டே மிரளுது என்றான்.
நல்லவேளைண்ணே அன்னிக்கே எனக்கு வக்கீல் தொழில்தன் ஒத்து வரும்னு சொல்லி மூணே கேள்வி கேட்டு என் வாழ்க்கையை திருப்பி விட்டீங்க இல்லாட்டி கவர்மண்ட் ப்ளீடரா . இவ்ளோ சின்ன வயசுல இந்ததுறையில் ஜெயிச்சிருக்க முடியாது. என மகிழ்ச்சி பொங்கக் கூறினான் .
அன்று துவங்கி தொடர்ந்து அடிக்கடி சந்தித்து வருகிறோம். மட்டுமல்லாமல் தொடர்ந்து தெய்வத்திருமகள், மனிதன் உட்பட நான் பணிபுரியும் சட்டம் தொடர்பான படங்களில் எனக்கு ஆலோசனைகளும் அவனே . அவன் வர முடியாவிட்டாலும் உதவியாளர்களை கதை விவாதத்துக்கு அனுப்பி வைப்பான். மட்டுமல்லாமல் இன்று வரை அவனது வாழ்வில் நிகழும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்காமல் விட்டதில்லை. எனது சட்டம் தொடர்பான சிக்கல்களுக்கு அவனே ஆலோசகர் . பாலுமகேந்திரா நூலகத்தை சங்கமாக பதிவுசெய்த போது கூடவே ஒரு ஜூனியரை அனுப்பி அனைத்து காரியங்களையும் அவனே செய்து கொடுத்தான் . அதற்கான செலவுத்தொகையும் அவனே ஏற்றுக்கொண்டான்.
.ஒருவேளை அன்று முத்துக்குமார் என்னிடம் ஆதங்கத்துடன் அவனுக்கு அறிவுரை சொல்லும்படி நிந்திக்காவிட்டால் நானும் அந்த மூன்று கேள்விகளை கேட்காமல் இருந்திருந்தால் முனியப்பராஜும் சினிமாவை நம்பி வக்கீல் தொழிலில் கோட்டை விட்டிருந்திருப்பான் . சினிமாவில் வந்திருந்தால் கூட அவன் ஜெயித்திருப்பான் .ஆனால் வக்கீல் தொழில் அடைந்த உச்சத்தை தொட்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே .
பத்து வருடங்களுக்குப்பின் முனியப்பராஜின் திருமணம் நண்பர்களை மீண்டும் இனைத்தது.. காமராஜர் ஹாலில் விமரிசையாக நடந்த வரவேற்புக்கு முத்துக்குமார் மட்டும் சென்றான். அன்று நான் சேலத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு முன்பே ஒத்துக்கொண்டிருந்ததால் செல்ல முடியவில்லை. .ஒரு நல்ல இதயத்தின் கோபம் வருத்தம் ஆதங்கம் கூட பிற்காலத்தின் ஒரு நன்மை காரணமாகத்தான் அமையும் என்பதை முனியப்பராஜுடனான முத்துக்குமார் நட்பு எனக்கு உணர்த்தியது .
இதில் இப்போது யோசித்தால் இன்னும் கூட காலத்தின் கணக்கு ஒன்று இருப்பதை உணரமுடிகிறது. . முத்துக்குமாரின் பட்டாம் பூச்சி வீற்பவன் நூல் உருவாக்கம் முதல் வெளியீட்டுவிழா வரை முனியப்பராஜ் கூடவே சக்கரம் போல இருந்தான் . காலம் பதிலுக்கு முத்துக்குமாரின் வழி முனியப்பராஜின் எதிர் காலத்தை செதுக்கிக்கொடுத்தது .
எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி நடக்குமா தெரியாது. ஆனால் சமூகத்தில் முக்கிய பங்களிப்பு செய்யும் படைப்பாளிகள் அரசியல்வாதிகள் கலைஞர்கள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருப்பது கண்கூடு.
நான் தங்கியிருந்த பால் சுகந்தி மேன்ஷனில் என் அறை எண் 54 அறையில் என்னைத் தவிர மூன்று பேருக்கு அனுமதி . கூடுமானவரை சினிமா அல்லாத ஆட்களாக பார்த்து சேர்த்துக்கொள்வேன். . இல்லாவிட்டல் மாசாமாசம் வாடகைக்கு பிரச்னை வந்துவிடும்.
காலையில் மற்ற அறைவாசிகள் வேலைக்கு வெளிக்கிளம்பும் முன்பே என்னைத்தேடி ஆட்கள் அறைக்கு வந்துவிடுவார்கள் . என் உதவியாளர்களாக ரவி ஜெயக்குமார் செந்தில் என மூவர் அப்போது என்னுடனிருந்தனர். அவர்கள் போக அவ்வப்போது சக உதவி இயக்குனர் நண்பர்கள் நடிக்க வாய்ப்பு தேடுபவர்கள் என அறைக்கு ஆட்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். மட்டுமல்லாமல் இலக்கிய நண்பர்கள் செம்பூர் ஜெயராஜ் , ராஜன் அரவிந்தன் யூமாவாசுகி , சங்கரராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம் என பலரும் அவ்வபோது வந்து செல்வார்கள். அதனால் நான் இல்லாதபோது யாரும் என்னை பார்க்க வந்து திரும்பி போய்விடக்கூடாது என்பதற்காக பெரும்பாலும் கதவை பூட்டியதே இல்லை. அப்படியே பூட்டினாலும் சாவி கதவுக்கு மேல் நிலையில் தான் இருக்கும் . ரெகுலராக வரும் நண்பர்களுக்குத் தெரியும் என்பதால் தேடி எடுத்து கதவைத் திறந்து கொள்வார்கள்.
முத்துக்குமார் ஒவ்வொருமுறை வரும் போதும் புதிய நபரை அழைத்து வருவான் . காஞ்சீபுரத்தில் சென்னையில் வேலைகிடைத்து தினசரி ஊருக்கு போய் வரும் நண்பர்களிடம் ”எதுக்கு டெய்லி பஸ்ல அலையறீங்க? மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலயே அட்டகாசமான மேன்ஷன்ல அஜயன் பாலா ரூம் இருக்கு,நம்ம ரூம் மாதிரி அங்க தங்கிக்கலாம் ‘. என என் அனுமதியில்லாமல் உத்தரவாதம் கொடுத்துவிடுவான்.
அப்படித்தான் ராஜ ராஜன் என்பவரை அழைத்து வந்து “ பாலா இவரை ரூம் மேட்ட சேத்துக்குங்க என் கிளாஸ் மேட் இவங்க அப்பா தான் அருண்மொழி படத்தோட ப்ரொட்யூசர்.அவரு மூலமாதான் சினிமாவுக்கே வந்தேன், நல்ல பையன். ஒழுங்கா வாடகைல்லாம் குடுத்துடுவான் என சொல்லி வழக்கம் போல ஒரு சிரிப்பு சிரிப்பான் ஏற்கனவே படுக்க இடமில்லாமல் நெருக்கடி அதை சொல்லவோ மறுப்பு சொல்லவோ அவனிடம் வாய்ப்பு இருக்காது . அவன் சொல்லிவிட்டால் நான் கேட்டுவிட வேண்டும் . அவனுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அதன் பின் அவன் சொல்படிதான் அவர்கள் நடக்க வேண்டும்
பின் கொஞ்ச நாள் கழித்து நான் அறைக்கு வந்த போது கைலி முண்டாபனியனுடன் ஒருவர் புத்தகம் படித்தபடி அமர்ந்திருந்தார். அறைக்கு வந்த என்னைப்பார்த்து அவ்ர் “உங்களுக்கு யார் வேணும்”? எனக் கேட்க எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் ஒரு நிமிடம் வெளியே போய் எட்டிப்பார்த்தேன் 54 என் அறைதான். மீண்டும் அவரிடம் நீங்க யாரு எனக்கேட்க அவரோ “ அஜயன்பாலா ப்ரெண்டு, அவர் வெளியில போயிருக்காரு, யாரவது வந்தா பேர் கேட்டு வச்சிக்க சொன்னாரு”. எனச் சொல்ல எனக்கு சிரிப்பு வந்தது .
வழக்கமாக நான் வெளியே போயிருக்கும்போது என்னை பார்க்க வருபவர்களின் பேரைக்கெட்டு குறித்து வைக்கும் படி அறையிலிருப்பவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்வேன் . சரி யாரோ நமக்குத்தெரிந்த ஒருவருடைய நண்பர்தான் என்பது தெரிந்த உடன் நான் அவரிடம் நாந்தான் அஜயன்பாலா எனச்சொல்ல, அவர் உடனே பதட்டத்துடன் எழுந்து நான் முத்துக்குமார் பிரெண்டு காமராஜ் அவந்தான் யாரவது வந்தா பேர் கேட்டு எழுதிவைக்க சொல்லிட்டு இப்ப வந்துட்றேன்னு கீழப் போனான் எனக்கூற, நான் அவரை சமாதான்ப்படுத்தி அமர வைத்தேன்.
அவர்தான் புல்வெளி காமராஜ்.. புல்வெளி அவர் நடத்தி வந்த சிற்றிதழ். காஞ்சீபுரத்தில் தனது நெருங்கிய சகா என முத்துக்குமார் முன்பே இவரைப்பற்றி அதிகம் சொல்லியிருக்கிறான். அவருக்கு சென்னையில் கல்லூரி ஆசிரியப்பணி கிடைத்து அவசரமாக சென்னைக்கு பஸ் ஏறி தன் ஆத்ம நண்பன் முத்துக்குமாரைப் பார்க்க அவன் கையோடு வழக்கம் போல என் அறைக்கு அழைத்து வந்திருக்கிறான்.
முத்துக்குமார் திரும்ப வருவத்ற்குள் நாங்கள் நெருங்கிய நண்பர்களகிவிட்டோம். நவீன இலக்கியம் இருவருக்கும் பசை போட்டது. காமராஜுக்கு இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் நன்றாக சாப்பிடுவது . அதுவும் காரசாரமாக . முத்துக்குமாரும் கிட்டத்தட்ட அப்படித்தான். காஞ்சீபுரத்தில் மாலை நேரமானால் இருவருக்கும் வேலையே ஓட்டல்; ஓட்டலாக செல்வதுதான் . இருவருமே பிரியாணி பிரியர்கள்.
அதனால் சென்னையில் வேலை கிடைத்தது காமராஜைவிட முத்துக்குமாருக்குத்தான் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது . வெளியே போயிருந்த அவன் திரும்ப வந்த உடனேயே என்னையும் எழுப்பி பாலா வாங்க வாங்க காமராஜ் வந்துட்டாப்படி இன்னைக்கு மத்தியானம் லஞ்ச் காமராஜ் தான் என உற்சாக்மாக என்னையும் வலுக்கட்டயமாக அழைக்க மூவரும் ஒன்றாக அறையை விட்டுகீழே இறங்கினோம் . கீழே போகும் போதே இனி காமராஜை வச்சி மெட்றாஸ்ல இருக்க எல்லா என்.வி ஓட்டலையும் ஒரு கை பாத்துட வேண்டியதுதான் என படிகட்டில் அவர் தோளை இருகைகளாலும் தள்ளிக்கொண்டே உற்சாகமானான். காமராஜ் தொடர்ந்து மூன்றுமாதம் இருந்தார் மூன்று மாதமும் அவன் தினசரி மாலை வந்துவிடுவான். .
இருவருடனும் முதல் முறையாக காஞ்சீபுரம் சென்றது வாழ்க்கையின் என் மறக்கமுடியா அனுபவம். நான் பிறந்தது காஞ்சீபுரம் என்றாலும் படித்ததும் வளர்ந்ததும் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் தான் எப்போதவாது காஞ்சீபுரத்துக்கு திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்து போனதோடு சரி. அதோடு கல்லூரி படிக்கும் போது என் சி சி முகாமில் கலந்துகொள்ள ஒருமுறை வந்து ஊருக்கு வெளியே பாலிடெக்னிக் மைதானத்தில் பத்துநாள் காம்பில் கலந்துகொண்டதோடு சரி . அப்போதும் பெரிதாக ஊரைச் சுற்றி பார்த்ததில்லை .மட்டுமல்லாமல் சென்னைக்கு வந்தபின் முதல் முறையாக பல வருடங்களுக்குப்பின் நான் பிறந்த மண்ணுக்கு போவதால் ஒரு மகிழ்ச்சி என்னை தொற்றிக்கொண்டது
காஞ்சீபுரம் ஒரு தீரா வசீகரமான நகரம் . அதன் பழமையும் தொன்மையும் திண்ணைகளுடன் கூடிய ஓட்டு வீடுகளும் எப்போதுமே நினனவுகளின் ஆழத்தில் என்னை இழுத்துக்கொண்டேயிருக்கும்
காஞ்சீபுரத்தில் தேரடி அருகே புகழ்பெற்ற ஒரு பாரம்பர்ய உணவு விடுதி ஒன்று உண்டு செங்கல்பட்டிலிருந்து செல்பவர்கள் அதன் காபியை புகழ்ந்துகொண்டிருப்பார்கள் . .மர நாற்காலிகளும் மேசையுமாக ஒரு புராதன செவ்வியல் குணம் அதன் விசேஷம் .இப்போது ரொம்பவே மாறிவிட்டது வேறு விஷயம்
பிற்பாடு பலமுறை நானும் அவனும் காரில் காஞ்சீபுரம் சென்றிருந்த போதும் அந்த முதல் அதிகாலை பேருந்து பயணம் உண்டாக்கிய மகிழ்ச்சி அலை இப்பவும் நினைவில் தளும்புகிறது.
காஞ்சீபுரத்தில் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்கத்தான் நாங்கள் வந்திருந்தோம். கூட்டம் துவங்க இன்னும் நேரமிருந்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் முதல் வேளையாக அவன் படித்த ஆண்டர்சன் பள்ளிக்கு அழைத்துப் போய் ஒவ்வொரு இடமாக காண்பித்து அவன் பள்ளி அனுபவங்களை சிறுவனைப்போல, விவரித்து கூறினான்.
அதில் முக்கியமானது கவிதைக்காக அவன் பள்ளி நிர்வாகத்தால் தண்டனை பெற்றது. படிக்கும் போதே அவன் கவிதை எழுதி தூசிகள் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருந்தான் அந்த புத்தகம் தான் அவனுக்கு பிரச்னை ‘பள்ளியைப் பற்றியும் அதில் ஒரு ஆசிரியர் பற்றியும் அவன் எழுதிய கவிதை பள்ளியில் புயலைக்கிளப்பியது ஒரு ஆசிரியர் அவனை பள்ளியை விட்டே துரத்த வேண்டும் என பிடிவாதமாக் இருந்தார் . த்லைமை ஆசிரியரும் அதற்கு சம்மதிக்கும் மன நிலைக்கு வந்துவிட்டார்
அதே நேரம் இன்னொரு ஆசிரியர் அவனுக்கு பக்கபலமாக உறுதுணையாக நின்றார். காரணம் அவரும் ஒரு சிறுகதை எழுத்தாளர்
அன்று அவர் தலைமை ஆசிரியரிடம் சொன்னார் இந்த விதை நாளை விருட்சமாகி நம் பள்ளிக்கு பேர் வாங்கித்தரும் தயவு செய்து அனுமதியுங்கள் என்றார். அது அப்படியே பலிக்கவும் செய்தது.
அந்த ஆசிரியர் நுகம் எனும் சிறுகதை தொகுப்பு மூலம் தமிழ் இலக்கியத்துக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தன்.
( தொடரும்)Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *