7. நா. முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்

ஆற்றாமை
ஒரு பாறை கால் முளைத்து தினமும் நடந்து மோதி பலரையும் சந்தித்து சிலரது வெறுப்பில் அடிவாங்கி சிலரது அன்பால் செதுக்கப்பட்டு கடைசியில் ஒரு சிற்பமாக தன்னைத்தானே கண்டடைய சினிமாவில் சில வருடங்கள் ஆகும்
ஆனால் நான் அவசரப்பட்டேன் முழுசாக இரண்டு படம் உதவி இயக்குனராக வேலை செய்யும் முன்பே இயக்குனராக முடிவெடுத்தேன்
காரணம் நான் வேலை செய்த இரண்டாவது படம் பெரிய ஹிட்
இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் பாலசேகரனின் லவ்டுடே தான் அந்த திரைப்படம்
அப்போது நான் மேற்கு மாம்பலம் பால் சுகந்தி மேன்ஷனில் குடியேறியிருந்தேன் .எனக்கு முன்னால் இயக்குனர் ஏ வெங்கடேஷ் பாலாஜி சக்திவேல் ஆகியோர் தங்கியிருந்த அறை . என அதற்கு ஒரு வரலாறு உண்டு .
உதவி இயக்குனராக இருந்து இனி இயக்குனராக மாறுவது என அப்போது முடிவெடுத்ததால் வாழ்வில் பல மாறுதல்கள் . என் நடவடிக்கைகளில் பல மாற்றம் முகத்தில் அடர்த்தியகா தாடி முளைத்துக்கொண்டது. எப்போதும் ஒரு இறுக்கம் . வழக்கமாக செல்லும் பிலிம் சேம்பர் நண்பர்கள் அறை டீக்கடை விவாதங்கள் என அனைத்திலுமிருந்தும் என்னை துண்டித்துக்கொண்டேன் . திரைக்கதை எழுதவேண்டி அறைக்குள்ளே தவம் இருப்பது என அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறியது. ஒரு இயக்குனருக்கான் முகமூடிக்குள் நான் முழுமையக பொருந்திக்கொண்டேன்
இப்போது யோசித்தால் காமடியாக இருக்கிறது .ஆனாலும் அந்த நேரத்தில் தயாரிப்பாளர் எனும் தேவதூதர் நம் வாழ்க்கைக்குள் வர மகாசித்தி பெற்றவனாக மாறினால் மட்டுமே முடியும் என்பது போன்ற கற்பிதம் இருந்த காரணத்தால் இது போன்ற காமடிகள் பல உதவி இயக்குனர்களிடமிருந்தது . சிலருக்கு பலிக்கவும் செய்தது . எதிரே பேரழகி ஒருத்தி கடந்தால் கூட சைட் அடிப்பதை தவிர்ப்பேன் எங்கே ப்ரொட்யூசர் அட்ரஸ் மாறி போய்விடுவாரோ எனும் பயம் .
ஒருநாள் முத்துக்குமாரே என்னைத் தேடி அறைக்கு வந்தான்
கையில் அழைப்பிதழ் முகத்தில் பிரகாசம்
பட்டாம்பூச்சி விற்பவன் வெளியீட்டு விழா. .பாலா அவசியம் வந்துடுங்க
ஆழ்வார்பேட்டை மனோரமா அரங்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆசான் பாலுமகேந்திரா உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் மேடையை அலங்கரிக்க பாவலர் அறிவுமதியின் சாரல் பதிப்ப்கம் வெளியிட விழா நடந்தேறியது . பாரதிராஜா அவர்களின் பேச்சு ஹைலைட் சிருஷ்டி அமைப்பின் நண்பர்கள் தங்கள் விழா போல அதை நடத்தினர் . . இன்று பிரபல வழக்கறிஞராக இருக்கும் முனியப்பராஜ் அன்று சிருஷ்டி ஒருங்கிணைப்பாளர் . அன்று மேடையில் அவர்தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். அவரோடு சேர்த்து அந்த நிகழ்வில் முத்துக்குமாரின் பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள் .
நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வாசலில் பேசிக்கொண்டிருக்கும் போது முத்துக்குமார் அனைவரிடமும் அஜயன் பாலா தெரியும்ல லவ் டுடே அசோசியேட் அடுத்து படம் பண்ண போறாரு பெருமையும் மகீழ்ச்சியுமாக அறிமுகப்படுத்த நானும் அதை மெயிண்டெயின் பண்ணும் வகையில் சிரித்தும் சிரிகிகாமலும் தலையாட்டி கைகுலுக்கிக்கொண்டேன்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முத்துக்குமாரும் முனியப்பராஜுவும் என் அறைக்கு வந்தார்கள் .
“ பாலா நான் பாலு மகேந்திரா சார் கிட்டருந்து நின்னுட்டேன் பாட்டு எழுதலாம்னு இருக்கேன் ,இப்ப நான் அறிவுமதி அண்ணன் படத்துக்கு மியூசிக் பன்றாருல்ல சாந்தகுமார் அவர்கிட்ட மெட்டுக்கு பயிற்சி எடுத்துகிட்ருக்கன் ”, என சொன்னான்
அதன்பிறகு தினமும் காலையில் முத்துக்குமாரும் முனியப்பராஜும் சைக்கிளில் காலையில் என் மேன்ஷனுக்கு வந்து விடுவார்கள் . காலை டிபன் கூட அருகிலிருக்கும் சிறிய கடையில்தான் .
தோளில் இருபக்கமும் மாட்டுகிறார் போல ஒரு பை இருக்கும் . அதில் அப்போது அவன் படிக்கும் புத்தகம் ஒன்றிரண்டுடன் டைரி ஒன்றும் இருக்கும் . அவ்வபோது தோணும் கவிதைகளை எழுதிக்கொள்ளவும் அன்றாட அலுவல்களை திட்டமிடவும் அது அவனுக்கு உதவியது..
அங்கிருந்து தான் அவனுடன் அன்றய நாள் துவங்கும் . அன்று பார்க்க வேண்டியவர்களை பார்த்துவிட்டு மதியம் என் அறையில் உறங்கிவிட்டு திரும்ப மாலை சினிமாவுக்கோ இலக்கிய நிகழ்ச்சிக்கோ செல்வான் .
முத்துக்குமார் அறைக்கு வந்தால் அவன்தான் அதிகம் பேசுவான். அவன் படித்த புத்தகம் பார்த்த பழகிய நண்பர்கள் என எதையாவ்து சொல்லிக்கொண்டேயிருப்பான் .. நானும் அவனைப்போல இயல்பில் ஒரு ப்ரெண்ட்ஷிப் மெட்டீரியல் . சோறு தண்ணிகூட ரெண்டாவதுதான் . இதனாலேயே ரெண்டுபேருக்கும் ஒத்துப்போனது அதே சமயம் அதுவே எனக்கு ஒரு ப்ரச்னையாகவும் இருந்தது.
அவனால் நான் இயக்குனராவதற்கு உருவாக்கி வைத்த தவம் இறுக்கம் எல்லாம் அடிக்கடி சேதாரம் ஆகியது.
பாலா ஏன் இவ்ளோ சீரியசா இருக்கீங்க படம் பண்ணும்போது பண்ணலாம் லைஃபை பாருங்க கீழ இறங்கி ரோட்டுக்கு வாங்க தமிழ் நாடே பிகருங்களை சைட் அடிக்க மாம்பலம் வருது நீங்க என்னாடன்னா மாம்பலத்துல இருந்துகிட்டு ரூம்லயே அடைஞ்சுகிடக்கிறீங்க என கலாய்ப்பான் இதனால் வேறு வழியில்லாமல் அவனுடன் மீண்டும் சினிமா இலக்கிய நிகழ்வுகளுக்கு சுற்ற ஆரம்பித்தேன் .
அறையில் நான் இல்லாத போது என் உதவியாளர்கள் அல்லது அறை நண்பர்கள் இருந்தால் .. இன்ன உங்க டைரகடர் ஓவரா சீன் போடறாரு போல இருக்கு இருங்க வரட்டும் கலாய்க்கறேன் என மூக்கை தடவிக்கொண்டே ஒல்லி உடம்பால் குலுங்கி சிரிப்பான் . சிரிக்கும் போது மூக்கை பிடிப்பது அவன் இயல்பு .
நான் முன்பே சொன்ன சட்டக்கல்லூரி மாணவன் முனியப்பராஜ் தான் அவனுடைய நெருங்கிய சகா
ஒருமுறை எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களை பார்க்க பழவந்தாங்கல் வரை சென்ற போது என்னுடன் முத்துக்குமாரும் முனியப்ப்ராஜும் வந்தனர் ட்ரெயினிலிருந்து உள்ளே வெகு தூரம் நடக்கவேண்டும் மூவரும் கால்வலிக்க பேசிக்கொண்டே நடந்து திரும்பியது இன்னும் பசுமையான ஞாபகம் .
ஒருநாள் மிக இறுக்கமாக இருந்தவன் . பாலா இனி இந்த முனியப்பராஜ் வந்தா கண்டுக்காதீங்க என கோவமாக சொன்னான்
என்னடா ஆச்சு உங்களுக்குள்ள ஒண்னாதான சுத்துவுவீங்க
அதில்லை பாலா அவன் லா காலேஜ் படிக்கிறான்
இன்னும் இரண்டு வருஷத்துல வக்கீல் ஆவப்போறான் ]எதுக்கு தேவையில்லாம நம்ம கூட சுத்தி கெட்டுபோவனும்
சினிமாவை நம்பி பொழைப்பை கெடுத்துட்டு கடைசியில நம்மளை குத்தம் சொல்லக்கூடாது பாரு
அவன் பேச்சில் ஒரு அக்கறை நியாயம் தெரிந்தாலும் இதில் வேறு எதுவோ ஒரு விஷயம் இருப்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடிந்தது
பிறகுதான் அவனிடம் போட்டு வாங்கி உண்மையான கோவத்துக்கான காரணங்களை அவனிடமிருந்தே பிடுங்கினேன்
அண்ணன் அறிவுமதி அப்போது எங்காவது வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்றால் அன்று அவருடன் யார் அப்போது நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களை உடன் அழைத்துச்செல்வது வழக்கம். அக்காலகட்டத்தில் முத்துக்குமார் அவருக்கு செல்லப்பிள்ளை ஆகையால் அவனைத்தான் அழைத்து செல்வார்.
அன்று ஏதோ அவசர நிகழ்சிக்காக அவர் கும்பகோணம் புறப்படும் போது முனியப்பராஜ் அவரை சந்திக்க 73, அபிபுல்லா சாலை செல்ல அன்று வாய்ப்பு அவனுக்கு போய்விட்டது
இந்த விவகாரத்தை முனியப்ப ராஜ் சொல்லாமல் வேறு சிலர் மூலம் முத்துக்குமாருக்கு தெரிய வர அவனுக்கு மூக்கு சிவந்துவிட்டது . இவ்வளவு நாள் கூடவே சுத்துனோம் நம்மிடம் முனியப்பராஜ் இதை சொல்லாமல் மறைத்துவிட்டானே என்பதுதான் அவன் தரப்பு நியாயம். முனியப்பராஜ் பக்கமோ ஊருக்கு போய் வந்த பின் கல்லூரிக்கு போக வேண்டி வந்ததால் இதுபற்றி பேச முடியவில்லை என்பது அவன் தரப்பு நியாயம். ஆனாலும் முத்துக்குமாருக்கு சமாதானம் ஆகவில்லை
பல சமயங்களில் பல நட்புகள் முறிந்து போவது இப்படித்தான் . எதிர் தரப்பின் கோணங்களில் பிரச்னையை அணுகினால் நாட்டில் பல வரலாறுகள் மாறியிருக்கும் . ஆனால் முத்துக்குமாரின் வயது அதற்கு இடம் கொடுக்கவில்லை .
இது நடந்த பின் முனியப்பராஜ் ஒருநாள் என்னைப்பார்க்க வர அன்று முத்துக்குமாரும் என் அறையில்; இருந்தான் . அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் ஆளுக்கொரு திசையில் பேசாமல் இருவரும்
நான் முத்துக்குமாரை சமாதானப்படுத்தும் விதமாக முனியப்பரஜிடம் சினிமாவில் என்ன ஆகப்போகிறாய் உன் லட்சியம் என்ன என கேள்விகள் கேட்க அவனோ இயக்குனராக ஆவது இல்லாவிட்டால் படாலாசிரியாரவாது என தெளிவில்லாமல் சொதப்ப அதுவே எனக்கு சாதகமாக அமைந்தது
இப்படி என்ன ஆவப்போகிறோம் என்பதில் கூட தெளிவில்லாமல் எதை நம்பி சினிமாவுக்கு வரப்போகிறாய் என கேட்டேன் . தொடர்ந்து
சினிமா சூழலை எடுத்துச் சொல்லி உன்னை உன் அப்பா அம்மா நம்பி வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்கள் நீ ஒழுங்காக கல்லூரிக்கு போகாமல் இப்படி சினிமா வாய்ப்பு தேடுவது நியாயமா என கேட்டேன்
நான் இதை முத்துக்குமாருக்காக மட்டும் கேட்கவில்லை உண்மையில் என் உள்ளுணர்வில் முனியப்பராஜ் மிகச்சிறந்த வழக்குறைஞ்ருக்கான் தகுதி இருப்பதை உணர்ந்திருந்தால் தான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்
முத்துக்குமார் தலையை குனிந்தபடி எதுவும் பேசாமல் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான்
முனியப்பராஜோ இல்லைண்ணே சினிமாவில் நான் எப்படியும் டைரக்டரா ஆயி ஜெயிச்சுடுவேண்னே என்றான்
இன்று அந்த ,முனியப்பராஜ் சென்னை உயர்நீதிம்ன்றத்தில் பல ஜூனியர்க்ள் புடை சூழ மிகப்பெரிய அட்வகேட் என பெயர் எடுத்துவிட்டார் இப்போதும் எனக்கும் நண்பர் இயக்குனர் வீரபாண்டியனுக்கும் நெருங்கிய நண்பர்
ஆனால் அன்று அவர் என் முன் சினிமா தான் தன் லட்சியம்க் கனவு என வாதிட்டார்
சரி அப்ப நான் உன்கிட்ட மூணு கேள்வி கேட்குறேன் மூணுத்துக்கும் பதில் சரியா சொல்லிட்டா நீ சினிமாவுக்கு லாயக்கு . இல்லாட்டி நீ வக்கீல் படிப்பையே தொடர்ந்து படிச்சி வக்கீலா ஆயிடணு,ம்
வேறு யாராவது இருந்தால் இதை பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் ஆனால் முனிய்ப்ப்ராஜ் கொஞ்ச நாள் பழகினாலும் ஒரு முரட்டு விசுவவாசியாகவும் அண்ணன் என அழைக்கும் பாசத்தில் சற்றும் குறைவில்லாதவராகவும் இருந்தார்
முன்பே நானும் முத்துக்குமாரும் ஏதோ படம் பரக்க முடிவு செய்திருந்த படியால் அப்போதைக்கு பேச்சை முடித்துக்கொண்டு உடனே அறையை விட்டு கிளம்பி மவுண்ட்ரோடுக்கு பேருந்தில் ஏறினோம்
பேருந்து ஜெமினி மேம்பால்ம் அருகே சென்ற போது எனக்கும் முனியப்பராஜுக்கும் இருக்கை கிடைத்து அமர்ந்தோம் .
அண்ணே மூனூ கேள்வி கேக்கறேன்னு சொன்னீங்களே என்னன்ணே
அவன் கேட்டதும் அத்தனை நேரமாய் மூளையை குடைந்து நான் யோசித்து வைத்திருந்த முதல் கேள்வியை கேட்டேன்
( தொடரும்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *