6. நா.முத்துக்குமார் எனும் நட்பின் பேரிலக்கணம்


73 அபிபுல்லா சாலை
பச்சையப்பன் கல்லூரி காலத்தில் நா,முத்துக்குமாரின் கால்கள் வகுப்பறை வாசல்களை விட கவியரங்க வாசல்களை நோக்கித்தான் அதிகம் விரைந்தன.
ஒருமுறை அவனே என்னிடம் இப்படி சொன்னான் ,கவியரங்கத்தில் கவித்துவம் வெற்றி பெறாது பரிசுகளுக்கு கைதட்டல்கள் தான் அங்கு அளவுகோல் ‘
தனக்கு சாதகமான கருத்தை ஆப்ரிக்க கவிஞன் அன்றே சொன்னான் என ஆரம்பித்து கொடுக்கப்பட்ட தலைப்புக்கு தலைகீழாக எதையாவது சொல்லி அதிர்ச்சி கொடுத்தால் கைதட்டல் நிச்சயம்
ஒரு சில மேடைகளிலேயே இந்த டெம்ப்ளேட் வித்தையை அவன் கண்டுபிடித்தான்
மற்றவர்களுக்கு எப்படியோ அவனுக்கு மட்டும் இது வெற்றியை வாங்கிக்கொடுத்தது. அதற்கு காரணம் கொஞ்சம் அசலான கவிதைச் சரக்கும் அவன் வாசிப்பில் எப்போதும் தனித்திருக்கும்
ஒருமுறை கல்லூரி கவிதைப்போட்டியில் பலரும் பக்கம் பக்க்மாக கவிதை எழுத மூன்றே வரியில் முதல் பரிசு பெற்றவன்
பல சமயங்களில் கவியரங்க மேடைகளில் ஏறும் வரை என்ன வாசிப்போம் எனத் தெரியாமலே ஏறி முதல் பரிசு பெற்ற அனுபவங்களை சிரிக்க சிரிக்கச் சொல்வான்
இதர நண்பர்கள் இவன் கைவசம் எதுவும் எழுதாமல் வந்திருப்பதைக்கணடு முதல் பரிசு நமக்குத்தான் என அக மகிழ்ந்திருக்க கடைசியில் அவன் முறை வரும்போது மேடையேறி மனதுக்குள் ஏற்கனவே எழுதியதை வாசித்துவிட்டு சிரிப்புடன் கைதட்டல்பின்னணியில் இவன் இறங்கும்போது அவர்கள் முகம் அட்ட கோணத்தில் ஆகியிருக்கும் .
ஆனாலும் வெளியில் வந்தால் அனைவரது முகத்திலும் நகைப்பும் நட்புமாக டீ ஆவி பறக்கும்
முனியப்பராஜ் ஜெயந்தி அப்ரார் அஹ்மது செந்தில் என சென்னையின் வேறு வேறு கல்லூரி மாணவர்களான அவர்களை தமிழும் கவிதையும் ஒன்று சேர்க்க முத்துக்குமாரின் நட்பு வட்டத்தில் ஒன்று சேர்ந்த்னர்
அவர்கள் ஆக்கபூர்வமாக சில காரியங்கள் செய்ய முடிவெடுத்து உருவாக்கிய அமைப்புதான் சிருஷ்டி…
இந்த சிருஷ்டி அமைப்பில் ஒருவன் தமிமுன் அன்சாரி .
அவன் அப்பா திருவல்லிக்கேணியில் ஒரு அச்சகம் நடத்தி வந்தார்.
இதற்கு முன் முத்துக்குமார் புத்தகம் போட பல பதிப்பகங்கள் ஏறி இறங்கி சோர்ந்திருந்த நேரம்
அப்போதுதான் நண்பன் அன்சாரி முத்துக்குமார் கவிதை தொகுப்பு பற்றி கேள்விப்பட்டதும் புத்தகம் தங்கள் அச்சகம் பற்றிக் கூறி எதற்கும் தன் அப்பாவிடம் வந்து பேசு என அழைத்தான் .
ஆயிரம் பிரதிக்கு 20,000ம் ஆகுமே என முத்துக்குமாருக்கு அன்சாரியின் அப்பா அதிர்ச்சி கொடுத்ததும் அவ்வளவு பணத்துக்கு என்னசெய்வது என முத்துக்குமார் உடன் வந்த நண்பன் முனியப்பராஜுடன் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அருகில் வந்த அன்சாரி நீ 6000 ம மட்டும் ரெடி பண்ணு மத்தபடி அப்பாகிட்ட நான் பேசிக்கறேன் என ஆறுதல் வார்த்தை சொன்னான்
அப்போதைக்கு 6000ம் கூட பெரிய தொகை என்றாலும் சிருஷ்டி நண்பர்கள் உதவ முன் வந்தனர்
இடைப்பட்ட நேரத்தில் தான் அவன் வாழ்க்கையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது
ஒரு நாள் அந்த மந்திர வாசலுக்குள் அவன் கால் வைத்தான்
அந்த வாசலின் முகவரி 73 , அபிபுல்லா சாலை – சென்னை 17
தமிழ்த்தாய் தனக்கென சென்னையில் தேடிக்கொண்ட முகவரி
அண்ணன் அறிவுமதியின் அலுவலகம்
உள்ளேன் ஐயா எனும் திரைப்படத்தை இயக்க அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு அதன் தயாரிப்பாளர் உருவாக்கித்தந்த அலுவலகம்
கிட்டத்தட்ட இருபது வருட காலம் அந்த அலுவலகம் இயங்கியது .படம் உருவாகவில்லை .ஆனால் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் பல பாவலர்கள் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் அந்த திருவறையிலிருந்து உருவானார்கள்
அத்தனை பேரும் சாமான்யர்களல்ல சாதனை மனிதர்கள்
பழனி பாரதி யுகபாரதி என தமிழகத்தில் புதிய பாரதிகளாக திரைத்துறையில் ஜொலித்த பலருக்கும் அதுவே வேடந்தாங்கல்
அந்த வரிசையில் அன்று முத்துக்குமாரும் நண்பர்களின் அறிமுகத்தின் பேரில் எதேச்சையாக 73, அபிபுல்லா சாலைக்கு சென்றிருந்தான் .
தூர் கவிதை அவனுக்கு முன்னால் அறிவுமதி அண்ணனிடம் சென்றுவிட்ட படியால் அவனும் அவருக்கு தம்பியானான்
கவிஞர்களென்றாலே ஞானச்செருக்கு மிக்கவர்கள். ஒருவரை ஒருவர் ஏற்க மட்டார்கள். அதுவும் சினிமாத்துறையா சொல்லவே வேண்டாம் என்றெல்லாம் நம் தமிழ்ச்சமூகத்தில் வழக்காறுகள் உண்டு
அதைத்தலைகீழாக மாற்றியது அண்ணன் அறிவுமதி அவர்களின் தாயுள்ளமும் தமிழ்ப்பற்றும்.
முத்துக்குமாரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட அவரது இதயம் தம்பி கவலைப் படாதே நம்ம சாரல் பதிப்பகம் மூலமாவே உன் கவிதைத் தொகுப்பை வெளியிடலாம் எனக் கூறியதோடு கையிலிருந்த சொற்ப பணத்தையும் கொடுத்து முதலில் தொகுப்பை அச்சுக்கு அனுப்பு மத்ததை பாப்போம் என நம்பிக்கை யூட்டினார்
அண்ணனோடு அச்சமயம் உடனிருந்த கவிஞர் நந்தலாலா தமிழ்பற்றாளர் தேவ நேயன் ஆகியோரும் அடுத்தடுத்து உதவிக்கரம் நீட்டி இன்ப அதிர்ச்சிகள் கொடுத்தனர்.
இதுதான் கலை வாழ்க்கை.
எப்ப மழை வரும் எப்ப வெயில் வரும் எதுவும் சொல்ல முடியாது .
அன்று முத்துக்குமாரின் வாழ்வில் அடுத்தடுத்து மழை .
திக்குமுக்காடிப்போனான் . தொடர்ந்து அண்ணனே முன்னுரைக்கு இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிட,ம் ஒரு அறிமுகக் கடிதம் எழுதி அவனிடமே கொடுத்தனுப்பினார்.
மறுநாள் சாலிக்கிராமத்தில் பாலுமகேந்திரா அவர்களின் வீட்டில் அவ்ன் அவர் முன் அமர்ந்திருக்க அவரோ அவன் கொடுத்த கவிதைகளை அமைதியாக வாசித்துக்கொண்டிருந்தார் .

வழக்கமாக அவன் கவிதைகளை படிக்க ஆரம்பித்தாலே அட அருமை என யாராக இருந்தாலும் உடனுக்குடன் பாரட்டத் துவங்குவார்கள். காரணம் .பட்டாம்பூச்சி விற்பவனில் பக்கத்துக்கு பக்கம் ”வெடி‘ சரவெடியாய் வெடிக்கும்.
ஆனால் பாலுமகேந்திரா அவர்களிடமோ எந்த சலனமும் இல்லை ,
முதல் முறையாக அவன் தன் கவிதைகளுக்கு எந்த ஒரு வியப்புமில்லாத அனுபவத்தை எதிர்கொள்கிறான் .
”தம்பி, முன்னுரை எழுதிட்டு அறிவுமதிக்கிட்ட சொல்றேன் வந்து வாங்கிட்டுப்போ. ”அவ்வளவுதான் .
முத்துக்குமாருக்கு வெளியில் வந்த போது எதையோ இழந்தார் போல் ஒரு தளர்ச்சி.
ஒரு வேளை அவருக்கு பெரிசாக பிடிக்கலையோ! எழுதுவாரா? இல்லை திருப்பிக்கொடுத்துவிடுவாரா? சந்தேகம் கலக்கத்தை கொடுத்தது.
ஆசான் எப்போதும் அப்படித்தான் . எதையுமே திரைக்கதையில்லாமல் செய்யமாட்டார்
உண்மையில் அவருக்குள்ளும் அவன் கவிதைகள் பெரும் அலைகளை எழுப்பியது . ஆனால் அதை எப்போது எங்கு எப்படி வெளிப்படுத்த வேண்டும் என அப்போதே முடிவெடுத்து விட்டார் .
இரண்டு நாட்கள் கழித்து நா. முத்துக்குமார் நாடறிந்த முத்துக்குமார் ஆகப்போகிறான் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் .
காமராஜர் ஹால் பெப்சி படைப்பாளி போர் உச்சத்துக்கு சென்று படைப்பாளிகள் சங்கம் புதியதாக உதயமாகப்போகும் மேடை.
ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் மேடையிலும் பார்வையாளருமாக கூடியிருந்த ஒரு மகத்தான நாள்.
தமிழ்த் திரையுலகின் இந்த பிரச்னைக்கு ஊற்றுக்கண்ணே பாலு மகேந்திரா அவர்களின் ராமன் அப்துல்லா படப்பிடிப்புதான்.
அதனால் மேடையில் அவர் பேச வந்த போது மொத்த கண்களும் காதுகளும் அவருக்காக காத்திருக்க ….
அவரோ நான் உங்கள் முன் ஒரு கவிதை வாசிக்கப்போகிறேன் எனக்கூறி…
நா. முத்துக்குமாரின் தூர் கவிதையை முழுவதுமாக வாசிக்க அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது . அந்த இரைச்சலினூடே தொடர்ந்து ஒலிவாங்கி முன் இதை எழுதியவன் நா. முத்துக்குமார் எனும் இளைஞன் என் உதவியாளன் எனச்சொல்ல கைதட்டல் சத்தம் இன்னும் கூடியது .
(தொடரும்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *