ஒரு பாய் பெஸ்டியின் இதயம் – சிறுகதை-அஜயன் பாலா

இன்பாக்ஸில் மெசேஜை இன்னொருமுறை பார்த்தான் . ப்ரொபைல் போட்டோவில் விராட் கோலியின் முகத்தை வைத்திருந்ததால் சட்டென அவனால் நவாஸின் ஐடி என்பதை ஊகிக்க முடியவில்லை அடிக்கடி அந்த பெயரை நோட்டிபிகேஷனில் பார்த்தபோது வேறு யாரோ ஒரு நவாஸுதீனாகத்தான் இருக்கும் என நினைத்தான் .

ப்ரொபைலுக்கு சென்று போட்டோக்களை பார்த்தான் . வசுமதியின் போட்டோ ஒன்று கூட இல்லை. “பய பக்கா சேஃப் “என நினைத்துக்கொண்டே முக நூலின் உள்பெட்டி மெசேஜை இன்னொருமுறை பார்த்தான்

”ஹாய் சிவா 18 த் அப் திஸ் மே மீ அண்ட் வசுமதி ப்ளான் டு விசிட் சென்னை . வி ப்ளான் டு ஸ்டே அட் யுவர் ஹோம் . ஜஸ்ட் டூ டேஸ் விசிட் “

வசுமதி இந்த வீட்டுக்குள் வரப்போகிறாளா .அவனால் அந்த அதிர்ச்சியிலிருந்து சட்டென வெளிவர முடியவில்லை. இன்னும் 48 மணி நேரம் வசுமதி இங்கு வரப்போகிறாள் . மனதில் டிக் டிக் … முள் சப்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது . கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது.
நினைத்தபோது வசுமதியின் கதைகள் தேக்கிய கண்கள் மின்னலாய் வெட்டியது .. உணர்ச்சிகளை கண்களில் ஆழமாகக் காட்டுவாள் அதில் பல அர்த்தங்கள் புனைவுகள் மடங்கி மடங்கிக் கிடக்கும் . அதற்கு வார்த்தைகளில் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது. அவள் உலகமே தனி. அந்த உலகத்தினுள் பல ரகசியக் கதவுகள் இருக்கும்.

எந்த ஒரு காரியத்தையும் மிக பொறுமையோடு நிதானமாக அழகாக நறுவிசாக செய்வாள். மொட்டை மாடி கொடியிலிருந்து உலர்ந்த துணிகளை எடுக்கும் போது கூட க்ளிப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து பிளாஸ்டிக் குவளைக்குள் போட்டு துணிகளை சுருக்கமில்லாமல் தடவித் தடவி மடித்து அடுக்கி வைக்கும் அந்த நிதானத்தின் அழகை நீங்களும் என்னைப் போல இன்னொரு மொட்டை மாடியில் நின்று பார்க்கவேண்டும்.

லதாவுக்கு வேறு வசுமதிக்கும் தனக்குமான கதை அரைகுறையாக தெரியும். வர வேண்டாம் ஏதாவது ஹொட்டலில் ரூம் போடலாம் இல்லை வேறு நண்பர்கள் வீட்டுக்கு பார்க்கலாம் என ஏதாவது மெசேஜ் அனுப்பி எஸ்கேப் ஆகலாமா .. சே பத்து வருடம் கழித்து வரப்போகும் தோழியிடமும் அவள் கணவனிடமும் இப்படி எழுதுவது சரியாக இருக்குமோ ஒருவேளை எல்லாவற்றையும் காலம் மறக்கடித்துவிட்டிருக்கும் என்ற நினைப்பில் அவள் வர முடிவு செய்திருக்கலாம்..

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ப்ளஸ் டூ பருவம் அப்போது அவன் வீடு திருவல்லிகேணி பரமேசுவரி கோயில் தெரு. அது ஒரு முட்டுத்தெரு. அதனால் அதுதான் அவர்களுக்கு ஒவல், சின்னச்சாமி சேப்பாக்கம் எல்லாம். ஞாயிற்றுக் கிழமையானால் தெருவில் கலவரம்தான். கூச்சலும் இரைச்சலுமாக இருக்கும் . சந்து முனையில் இருக்கும் லட்சுமணன் வீட்டைத் தரையொடு கடந்தால் போர் பறந்து கடந்தால் சிக்சர் . பவுலிங் எல்லாம் கிடையாது. ஒன் பிட்ச் கேம்.. த்ரோ தான். மாங்காய் அடி. புல் டாஸ், யார்க்கர் போடக்கூடாது. ஷாட் பால்தான் ஒரு முறை கீழே விழுந்து பந்து எகிற வேண்டும். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்துகொண்டே பெரிசுகள் ஜாலியாக கலந்து டேய் ஓட்றா ஓட்றா புடிடா அவுட் போன்ற கமெண்ட்ரிகள் எழும் . பந்து பட்டு எதுவும் உடையாமல் யாருக்கும் அடிபடாத வரை எல்லாம் ஷேமம்.

இப்படி முட்டு சந்து கிரிக்கட் ஆடும் போதுதான் வசுமதி இவனுக்கு அறிமுகம் . ஆரஞ்சு சுடிதாரில் தொத்தலாய். வாளிப்பாய் பூசியும் பூசாமலும் இப்படித்தான் என சொல்லமுடியாத கச்சிதம் . எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் சரியாக அமைந்தால் என சொல்வார்களே அது போல. அன்றுதான் அவர்கள் குடும்பம் நெய்வேலியிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து வந்த நாள் . கடற்கரைக் காற்று என்றாவது ஒருநாள் அதிகமாக வீசி உடம்பைத்தழுவி ரம்யத்தைகூட்டும். அன்று அப்படியான நாள். காலை பத்துமணிக்கே சிலுசிலுவென இருந்தது. மிதமான சூரிய வெளிச்சம் . பாத்திரம் பண்டங்களுடன் மெயின் ரோடில் வந்து நின்ற டெம்போவின் முன்புற கதவை திறந்து கொண்டு வசுமதி இறங்கினாள் .அதை முதலில் சிவாதான் பார்த்தான் .அப்போது எதிரே பிச்சு மணி கையை ஆவேசமாக சுழற்றிக்கொண்டு தனக்கு எதிர் முனையிலிருந்து பந்து வீசியதையோ அந்த பந்து க்ரீசுக்கு ஒரு அடிக்கு முன் பிட்சில் குத்தி இவனை நோக்கி எகிறியதையோ அதை இவன் மட்டையை சுழற்றி அடிக்க அந்த பந்து அவள் வீட்டுமுன் சாமன்களை இறங்கிக்கொண்டிருந்த லாரியின் கண்ணாடியை பதம் பார்த்த்தையோ எதுவும் இவன் மனசு சட்டென உள்வாங்கவில்லை. வசுமதி மட்டுமே அவன் கண்ணுக்குத் தெரிந்தாள். அந்த இடத்தில் தனியாக நிற்பது போலவும் உணர்ந்தான்.

அதன் பின் லாரிக்காரன் சண்டை பிடிக்க வர வசுமதியின் அப்பாதான் கண்ணாடிக்கும் சேர்த்து வாங்கிக்கோ எனக்கூறி அவன் கோபத்துக்கு தண்ணி ஊத்திவிட்டார். இதில் தான் எல்லோரும் அவர்களிடம் சரண்டர் ஆனோம் . ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஆளுக்கொரு கைபிடித்து விடுங்க சார். நாங்க பாத்துக்கறோம் என நாங்களும் எங்கள் பங்குக்கு பதில் அன்பை செலுத்தினாலும் தெருவுக்கு வந்த புதுசாய் வந்த தேவதையும் ஒரு காரணம் .
வசுமதியின் தம்பி வேதகிரியை அப்பீலே இல்லாமல் அன்றே டீமில் சேர்த்துக்கொண்டோம் . எங்களுக்கு இரண்டு வருஷம் இளையவர். ஆனால் அது மாதிரி யாரவது பேசிவிட்டால் பார்ட்டி மூட் அவுட் ஆகிவிடும் . வயித்து வலிடா என கழண்டு கொள்வான். இதனாலாயே அது தெரியாமல் வாடா போடா ப்ரண்ட்ஸ் ஆக்கிக்கொண்டோம். அடிக்கடி அவள் அப்பாவும் எங்களுடன் கிரிக்கட்டில் கலந்துகொள்வார் . டெபுடி தாசில்தார். வீட்டு வாசலில் கவர்மண்ட் ஜீப் வந்து தினமும் ஏற்றிப்போகும். ஜாலி பேர் வழி வண்டியேறும் போது ஒரே ஓவர்டா என கெஞ்சி கேட்டு பேட்டை பிடுங்கி கொண்டு பந்து போடச் சொல்வார் .

கேங்கில் பிச்சுமணி தவிர ராஜேஷ் வல்லரசு .. கோமதி( நாயகம் ) பினாக பாணி எல்லோரும் ஒரே வகுப்புதான் எல்லோரும் ஹிந்து ஸ்கூல் கோமதி முஸ்லீம் ஸ்கூல் .பிச்சுமணி அஞ்சாம் வகுப்போடு படிப்பை கட் பண்ணிவிட்டு அவன் அப்பாவோடு சைக்கிள் கடையை கவனிக்க போய்விட்டவன். ஞாயித்துக்கிழமை கிரிக்கட் ஆடுவது மட்டுமல்லாமல் அடிக்கடி பீச்சுக்கு போவது மெரீனாவில் ஸ்விம்மிங் பூலுக்குப் போய் ஆட்டம் போட்டு வருவது எல்லாம் இவர்களுடன் தான் . அப்போதுதான் அனைவரும் செக்ஸ் புத்தகம் படிக்க ஆரம்பித்த சமயம் . தெரு முனையில் இருக்கும் பத்மா எலக்ட்ரிகல்ஸ் பால் பாண்டி தான் எங்களுக்கு புக் சப்ளை. பீச்சில் எடுத்துக்கொண்டு போய் படித்துவிட்டு கொண்டுவந்து கொடுப்போம் . ஒருமுறை வல்லரசு பால் பாண்டியிடம் வாங்கிய டெபோனீர் புத்தகத்தை ஸ்கூல் விட்டு வரும்போது திரும்ப கொடுக்க புத்தகப்பையில் திணிக்க அது கெமிஸ்ட்ரி ரெக்கார்ட் நோட்டின் நடுவில் பதுங்கியிருக்கிறது . இது தெரியாமல் ப்ராக்டிகல் பீரியட்டில் ரெக்கார்ட் நோட் டை வல்லரசு ஸ்டைலாக சப்மிட் பண்ணப்போக லேபில் ஒவ்வொரு நோட்டாக பிரித்து மார்க் போட்டுக்கொண்டிருந்த டீச்சர் கையில் அந்த புத்தகம் சிக்கிவிட டீச்சர் அதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவனை உடனே லேபை விட்டு வெளியே வரச்சொல்லி விட்டு எப்படி டீல் பண்ணுவது எனத்தெரியாமல் ஹெட்மாஸ்டரிடம் புகார் செய்ய அவர் ஹாலில் வைத்து பிரம்பால் அடிக்க விவகாரம் பள்ளி முழுக்க வெட்ட வெளிச்சமாகிவிட்டது .

மறுநாள் அவன் அப்பாவை வரவழைத்து ஹெட் மாஸ்டர் எச்சரிக்க அன்று இரவே அவன் எங்கள் எல்லோரையும் போட்டுக் கொடுக்க அன்று எல்லோருக்கும் வீட்டில் பட்டி டிங்கரிங் பார்த்தார்கள் . கடைசியில் பால் பாண்டி அண்ணன் கடை அடித்து நொறுக்கப்பட்டது . அத்தோடு புத்தக வாசிப்பும் நின்று போனது. பிறகு சில மாதங்கள் கிரிக்கட்டுக்கும் அவன் வரவில்லை . விளயாட்டும் அவ்வளவு சுரத்தில்லை. வல்லரசு ப்ளஸ் ஒன்னில் முதல் மார்க் வாங்கியதும்தான் மீண்டும் கேங்கில் சேர்ந்தான் . பிறகு வழக்கம் போல கல்லி கிரிக்கட் களைகட்டியது
புத்தக வாசிப்பு நின்றுவிட்டதால் பொழுது வேறுபக்கம் திசை திரும்பியது. ஏரியாவில் ஆளாளுக்கு ஒரு பிகரை செலக்ட் செய்து பிரித்துக்கொள்வோம் . டேய் உன் ஆளை பாத்தியா என் ஆள் தியேட்டருக்கு போறாடா என்பது போல உரிமையுடன் பேசிக்கொள்வோம் ஆனால் உண்மையில் அந்த பெண்களுக்கெல்லாம் எங்களை யார் என்றே தெரியாது பெரும்பாலும் அவர்கள் அக்கம் பக்கத்துத் தெருவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் . அவர்கள் தெருவில் ஓரிரு டீன் வயது ப்பெண்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் இவர்கள் ரசனைக்கு இல்லை எல்லாம் பலப்பம் வகையறா. வல்லரசு அவர்களுக்கு அப்படித்தான் பேர் வைத்திருந்தான்

இப்படியான சூழலில் தான் வசுமதி குடும்பம் மூட்டைமுடிச்சுகளுடன் வந்திறங்கியது ஆளாலுக்கு அவரவர் வீட்டின் மொட்டை மாடி மற்றும் ஜன்னல் வழியாக அந்த வீட்டை நோட்டம் விடுவோம் எப்போதாவது ஒருமுறை வசுமதி வெளியில் வருவாள் உடனே யாரிடமாவது செல்போனை கடன் வாங்கி என் வீட்டு நம்பருக்கு வல்லரசு போனில் தகவல் சொல்வான். அவனுக்கு எதிர்த்த வீடு. அதான் முதல் தகவல் அறிக்கை சின்சியராக செய்வான். நான் மொட்டை மாடிக்கு புத்தகத்தோடு ஓடுவேன் அவன் வஞ்சனையில்லாமல் இன்னும் பிச்சுமணி ராஜேஷ் எல்லோருக்கும் சொல்லிவிடுவான் போல . மாடிக்கு போனபின் தான் ஆளாலுக்கு சின்சியராக படிப்பதை அக்கம்பக்கம் மாடிகளில் வசிப்பவர்கள் எங்களை பார்த்து ஆச்சர்யப்படுவர் .

ப்ளஸ் டூ பாஸாகி நான் பிகாம். நியூ காலேஜிலும் வல்லரசு கோமதி இருவரும் எஸ் ஆர். எம் மில் என்ஜீனியரிங்கிலும் பினாகபாணி லா காலேஜிலும் ராஜேஷ் லேப் டெக்னீஷியன் கோர்சிலுமாக பிரிந்தோம் . வசு வுக்கு டெண்டல் காலேஜில் சீட் கவர்மண்ட் கோட்டாவில் கிடைத்து விட்டது . வேதா ஸ்வீட் பாக்சோடு வீட்டுக்கு வந்தான்

ஆளுக்கொருபக்கம் தினப்படி வாழ்க்கை பிரிந்தலௌம் சனி ஞாயிறுகளில் முட்டு சந்துகிரிக்கட் மட்டும் தொடர்ந்தது .
அப்போது காத்தாடி சீசன் . வேதகிரி வீட்டின் மொட்டை மாடியில் காத்தாடி களை கட்டியது . நான் அவசரமாக படியேறிக்கொண்டிருந்த நேரம் வசுமதி கொடியில் துணிகளை எடுத்துக்கொண்டு பின் வெளிச்சத்தில் பாதி சில் ஹவுட்டில் படிகட்டில் இறங்க நான் அவசரமாக மேலே ஏற குறுகிய படிகட்டுகளின் திருப்பத்தில் இருவரும் கடக்க அந்த குறை வெளிச்ச நெருக்கத்தில் அவளிடம் ஒரு வாசனை இதயத்தில் நெருப்பு. கழுத்தில் ஈரம் . தோளில் மச்சம் .. இறங்கிக்கொண்டே மேல் நோக்கி ஒரு பார்வை ஒரு சிரிப்பு முல்லை அவிழ்வது போல

அவர்கள் வீட்டு ஹாலைப் போலவே எல்லோருக்கும் இதயமும் பெரிசு .. நாங்கள் ஒரு கேங்காக அடிக்கடி டிவியில் கிரிக்கட் பார்க்க அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்வது வேதகிரி வீட்டைத்தான் காரணம் சொல்லத் தேவையில்லை . அவன் தான் வாங்கடா எங்க வீட்ல ..என ஆரம்பிப்பான் ஆரம்பத்தில் பிகு பண்னி கடைசியில் டேய் உங்க வீட்லதான் டிவியும் பெரிசு பளிச்சென தெரியும் என வேதகிரியின் அழைப்பை ஏற்போம் . வீட்டில் அவர்கள் குடுமிபோட்ட தாத்தா பாட்டி பெரிய புகைப்படத்துக்கு அடுத்ததாய் எம்ப்ராய்ட்ரியில் ஒரு அழகான ராஜஸ்தான் பெண் ஓவியம் நீல பின்னணியில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும் வசுமதியின் கைவண்ணம் . அது போல சின்ன சின்ன அலங்காரப்பொருட்களால் வீட்டை உயிரூட்டமாக்கி வைத்திருப்பாள்

அவள் அம்மா தான் பாசத்தோடு டீ காபி சில சமயம் முறுக்கு அடை எல்லாம் சுட்டுத்தருவார் . எப்போதவாது வசுமதி அவளுக்கான அறையை விட்டு வெளியே வரும் போது அவள் நடக்கும் அழகும் முடியை கையால் கோதிவிடும் அழகும் கன்னத்தில் குழி விழ சிரிப்பதும் பரவசத்தில் ஆழ்த்தும்

கொஞ்ச நாளில் வீட்டில் டிவி பார்க்கும் போது வசுமதியும் எங்களுடன் கிரிக்கட் பார்க்க ஆரம்பித்தாள். அப்படியே எங்களுடன் அரட்டையிலும் கலந்துகொள்வாள் அவளும் நானும் கங்குலி ரசிகர்கள் . ஆனால் டீமில் பலரும் சச்சின் டிராவிட் தோனி என பிரிந்திருந்தார்கள் எங்களுக்குள் சண்டை வரும் போதெல்லாம் அவளும் ஆவேசமாக களமிறங்குவாள் . ஒருமுறை நான் ஏதோ பேச அதை அமோதிக்கும் விதமாக அவள் கையை உயர்த்த நான் என்ன செய்வது என தெரியமல விழிக்க வேதகிரி டேய் அவ கையை தட்றா என அவனே பாஸ் போர்ட் விசா எல்லாம் குடுத்தான் . அதன்பின் ஒரு கட்டத்தில் வசுமதி எல்லோரையும் டேய் வாடா போடா தான். ஏண்டி வளர்ந்த பசங்களை இப்படி மண்டையில அடிச்சா மாதிரி பேர் சொல்லி கூப்பிட்ற அவள் அம்மா இப்படி சொன்னபோதுதான் அவள்…. ம்மா எல்லாரும் ஒரே வயசும்தாம்மா அவங்களே கண்டுக்க மாட்டானுங்க நீ வேற எதுக்கு லெக்சர் போட்ற, என்பாள் .
அப்படியே கேரம் செஸ் என அவர்கள் வீட்டில் எங்கள் அட்டகாசம் தொடர்ந்தது . எப்போதவாது அவர்கள் வீட்டுக்கு சொந்தக் காரர்கள் வந்துவிட்டால் எங்களுக்கு செம கடுப்பாக இருக்கும் வேதகிரி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான்

துவக்கத்தில் சின்னப்பெண்ணாக இருந்தவள் காலேஜ் ரெண்டாம் வருஷத்திலிருந்து பேச்சில் செய்கையில் முதிர்ச்சி . நாங்களும் முன்பு போல வீட்டுக்கு போவதில்லை தெருவில் கிரிக்கட் ஆடும் போது வாசலில் இருந்து பார்ப்பாள் . ஆனால் எப்போதும் எனக்கு சப்போர்ட் செய்வாள் . டேய் ஓட்ற ஓட்றா எனக்காக கத்தி உற்சாகப்படுத்துவாள் .. நான் எப்போதாவது அவுட் இல்லை என போங்காட்டம் ஆடினாள் அவள் ஜட்ஜாக மாறி எனக்கு சப்போர்ட் செய்வாள் .

ஒருமுறை வேதகிரி வீட்டின் மொட்டை மாடியில் மாஞ்சா போட்டுக்கொண்டிருந்தோம் டேய் வேதகிரி வேதகிரி . கீழேயிருந்து வசுவின் குரல் . பினாக பாணி நூலை வரிசையாக இழுத்து அப்படியும் இப்படியுமாக கட்டிக்கொண்டிருக்க நூலை பதமாக ஒரு கையால் சொம்பிலிருந்து கொடுத்துக்கொண்டிருந்த வேதகரியின் இன்னொரு கை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்த சொம்பினுள்ளே கரைசலில் நூலுருண்டை குதித்துக்கொண்டிருந்தது . நானோ நூலில் ஒட்டியிருக்கும் பிசுறுகளை அழித்துக்கொண்டே வந்தேன் . வேதகிரி வசுவிடம் ‘இருடி வரேன் என்றவன் என்னிடம் திரும்பி டேய் டேய் கீழே பாருடா என சொல்ல நான் கேஷூவலாக கீழே பார்க்க அதிர்ச்சி .

கீழே தோட்டத்தில் துளசி மாடத்தின் அருகே எண்னைய் வழியும் முடியை இறுக்கி கொண்டை போட்டு பாவாடையை மார்புவரை கட்டி தோளை துண்டால் மறைத்தபடி கைகளால் காபந்து பண்ணிக்கொண்டே அண்ணாந்து பார்த்த வசுவுக்கும் அதிர்ச்சி . சட்டென உள்ளே ஓடிவிட்டாள் . பின் மறைந்த படி டேய் வீட்ல சீயக்காய் இல்லை வேதகிரியை கொஞ்சம் வாங்கிட்டு வர சொல்லேன் . வேதகிரி கைமுழுக்க மாஞ்சா பாதியில் விட்டு போகமுடியாது. கெஞ்சுவது போல என்னைப் பார்த்தான் . நானே கடைக்குப் போய் புலி மார்க் சீயக்காய் பொட்டலம் வாங்கிக்கொண்டு போய் அவள் அம்மாவிடம் கொடுத்தேன் . உள்ளேயிருந்து தேங்க்ஸ் குரல் மட்டும் கேட்டது.

துணிச்சல் தான் வசுமதியின் ப்ளஸ்.. எந்த ப்ராக்கட்டுக்குள்ளும் அவளை அடைத்துவிட முடியாது.

ஒருமுறை அவர்கள் கேங்காக விஜய் படம் பார்க்க தேவி தியேட்டருக்கு கிளம்ப அவசரமாய் பிச்சுமணியை முன்னதாக டிக்கட் எடுக்க அனுப்பும் போது அவள் தனக்கும் சேர்த்து டிக்கட் போடச்சொல்ல அனைவருக்கும் ஷாக் . வேதகிரிக்கு அவள் வருவதில் துளியும் இஷ்டமில்லை நீ வந்தா நான் வரமாட்டேன் என் அடம்பிடிக்க கடைசியில் அவள் அம்மா இவனிடம் தான் நீ பாத்துக்கப்பா அவளுக்கு இந்த ஊர்ல ப்ரெண்ட்ஸ் யாரும் செட் ஆகலப்பா நீங்கதான் அவளுக்கும் பிரண்ட்ஸ் அக்கா மேல துளிகூட பாசம் இல்லாத பய. என மகனை கடிந்துகொண்டு வசுமதிவை எங்களிடம் ஒப்படைத்தார். எல்லோரும் கும்பலாக போய் படம் பார்த்து செம அரட்டை . வேதகிரி ஏன் அக்காவை ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்பதை அப்போதான் பார்க்க முடிந்தது . டைட்டில் போட்டதிலிருந்து அவள் போட்ட விசிலில் நாங்கள் அனைவருமே மிரண்டு போனோம் . ஒரு கட்டத்தில் வேதகிரி அவளோடு சண்டை போட அவள் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்கு அதுவாக அமைந்தது. வல்லரசு படத்தையா பார்த்தான் எங்கள் இருவரையுமே அடிக்கடி திரும்பிதிரும்பி பார்த்துக்கொண்டிருந்தான் . இரண்டு முறை அவள் கை என் கையோடு உரசியதை என் மன டைரியில் ரகசியமாக எழுதி வைத்துக்கொண்டேன்.

முத வருஷம் அவர்கள் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு எங்களையும் அழைத்திருந்தாள் .. வீட்டில் கல்யாணம் மற்றும் விசேஷத்துக்கு மட்டும் போட அனுமதிக்கும் பாரின் டிஷர்ட் ஜீன்ஸோடு போயிருந்தேன் . முன்பு தியேட்டருக்கும் இதே டீ ஷர்ட் தான் அதைப்போட்டாலே எனக்குள் ஒரு மிதப்பு வரும் அப்புறம் பார்த்தால் டீம் எல்லோருமே கலக்கல் டிரஸ்தான். கல்லூரியில் அவள் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாள் . அங்குமிங்குமாக ஓடினாள் . ஸ்மார்ட்டான பசங்களுடன் அடிக்கடி பேசி வெறுப்பேற்றினாள் .எங்களுக்கு குடிக்க கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிக்கொண்டு வந்து தந்தாள் . பாத்ரூமுக்கு வழிகேட்டபோது கூடவே வந்தாள் வரும்போது வேண்டுமென்றே உரசினாள் .. ஒரிடத்தில் நிறுத்தி கைப்பையிலிருந்து எதையோ எடுத்தாள் பைவ் ஸ்டார் சாக்லட் .. சுத்தும் முற்றும் பாத்து வாங்கி வைத்துக்கொண்டேன். யாருக்கும் கொடுத்துடாத என்று கண்ணடித்தாள் . அதன் பிறகு டீமை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொண்டேன் . அவள் வீட்டுக்கும் போவதில்லை . சனி ஞாயிறு கிரிக்கட் ஆடுவதும் காலப்போக்கில் கட் ஆகியது

சனிக்ககிழமை அவள் ரெகுலராக போகும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு என்னையும் அழைப்பாள். இருவர் மட்டும் தான் . அவள் ஒவ்வொரு ஸ்டெப்பாக வைத்து அழகு நடை நடப்பதை பார்க்க அத்தனை அழகு . ஒவ்வொருமுறையும் லவ்வை கன்பார்ம் பண்ண ஏதவாது கேட்கலாம் என வாயெடுத்தால் கரெக்டாக பேச்சை மாற்றி விடுவாள்

ஒரு நாள் ஆயுத பூஜை. மார்கட் முழுக்க வாழை மரங்கள் கட்டுகட்டாய் ரெண்டு பக்கமும் தொங்கிக்கொண்டிருக்க கூட்ட நெரிசலினூடே ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து வந்தார்கள் இருவரும்… வானம் மூட்டமாக இருந்த்தால் சூழலே ரம்மியம் .லேசான தூறல் வேறு. பண்டிகை நாளுக்கென்றே ஒரு அழகு கூடுமே அதுவும் வேறு . ஆட்களோடு மோதி இடித்துக்கொண்டு மார்க்கட்டின் இருபக்க கூச்சலுக்கு நடுவே ஸ்லோ மொஷனில் அவள் வாச்னையை பிடித்துக்கொண்டே புடவை உரச நடந்து போன அந்த நாள் இருக்கே அது மாதிரி ஒரு பீல் சினிமாவில் நாவலில் கூட படிக்கவில்லை.

ஒவ்வொரு கடையாக அவள் ஏறி இறங்க உடன் பையை பிடித்துக்கொண்டு உடன் மனதையும் பாரமேற்றி அவள் பின்னால் நடந்துகொண்டிருந்தான் .

வழியிலிருந்த பேக்கரியில் இருவரும் அமர்ந்து ஒரு ஸ்பாஞ்ச் கேக்கை ஆர்டர் பண்ணி பிய்த்து சாப்பிடும்போதுதான் அவள் என்னிடம் கேட்டாள்

‘உனக்கு ட்ரீம் பெட் யாரு ”?
-அப்படீன்னா ?
”கனவுக்கன்னி”
-சிம்ரன் தான்
-ஏன் உன கனவுல நாங்கல்லாம் வரமாட்டமோ சினிமா நடிகைல்லாம் மட்டும்தான் வருவாங்களா ?

சே யார் சொன்னா நீயும் வருவ !
அப்படியா எப்படி எப்படி… வந்து என்ன என்ன பண்ணுவ ?
ஓபனா கேட்டா எப்படி?
-”ச்சும்மா சொல்லு கனவுதான நேர்ல சான்சே இல்ல”,
அவன் அந்த கனவை துணிந்து சொன்னான் . அதில் பாதிகற்பனை

‘அப்ப டெய்லி என்ன மேட்டர் பண்ற”
ஏய் சத்தமா பேசாத ,
ம் என்கிட்ட இதுவரைக்கும் நீ நேரா லவ்வு கூட சொல்லலை,ஆனா என் அனுமதியில்லாமயே கனவுல எல்லாத்தையும் பண்ற
இவன் அசடு வழிவதை பார்த்து
”இனி எங்கூட பேசற வேலையே வச்சிகாத”
-அவளது திடீர் கோபம் அவன் எதிர்பார்த்ததுதான் எப்போது எந்த பக்கம் திரும்புவாள் என அவளை கணிக்கவே முடியாது

சட்டென பையை தூக்கிக்கொண்டு கிளம்பினாள்
அது நடிப்பா அல்லது ஒரிஜினலா எதையும் கண்டுபிடிக்க வே முடியாது

அவள் போகட்டும் என அமைதியாக் இருந்தவன் .. பில்லை கொடுத்துவிட்டு அவள் பின்னால் ஓடிவந்து பையை வாங்கிக்கொண்டான் .முதலில் மறுத்தவள் பின் அவன் இழுத்ததும் பையை கொடுத்தாள்

“ஏன் இப்படி ஆம்பளை பசங்க எல்லாருமே பர்வர்டா இருக்கீங்க ?

அவன் அமைதியாக நடந்தான்

அன்னைக்கு எங்கம்மா கிட்ட படத்துக்கு போவும் போது சிஸ்டர் மாதிரி பாத்துக்குவோம்னே

அப்பதான் உங்க வீட்டுக்கு நான் அடிக்கடி வர்றதை உங்கம்ம கண்டுக்க மாட்டாங்க

அப்ப உங்க குடும்பத்துல சிஸ்டர்னா இப்படிதான் கனவு காண்பீங்களா

அவன் அப்படியே சிலை போல நின்றான்

ஏன் நின்னுட்ட

”நீ ரொம்ப ஓவரா பேசற ..அப்புறம் ஏன் என் வாயை கிளறுன, நான் தான் சிம்ரன் சொன்னேன்ல்லா அதோட விட்டுட்டு போலாம்ல நாங்கல்லாம் கனவுல வரமாட்டமோன்ன்னு ஏன் கேட்ட ”

”வேணும்னுதான் கேட்டேன் … உன் மனசுல நான் சிஸ்ட்ரா இல்லை லவ்வ்ரான்னு ஒரு டவுட்டு அன்னைக்கு நீ அம்மாகிட்ட அப்படி சொன்னதுலருந்து ,

-இவன் அமைதியாக் உடன் நடக்க ஆரம்பித்தான்.
இருவருக்குமான அமைதியில் காதல் இருப்பதாக அவன் நம்பினான் ஆனால் அடுத்த நொடியே அதில் இடி விழுந்தது
”நான் இப்படி ஓபனா பேசறேன்னுதான் என்னை பத்தி இஷ்டத்துக்கு கணக்கு போடற”

இல்ல அப்படி இல்லை வசுமதி இது லவ் ..அன்னிக்கு நான் லெட்டர் கொடுத்தப்ப லவ் லெட்டரா அது இதுன்னு காமடி பண்ணி என்னை வெறுப்பேத்திட்ட உன் பிரண்டு முன்னாடி வெறுப்பேத்திட்ட அதனாலதான் நான் உன்னை வெறுப்பேத்த தான் சிஸ்டர்ன்னு சொன்னேன் ( சோல்ல மறந்துவிட்டேன் இடையில் ஒருநாள் துணிச்சலாய் லெட்டர் கொடுக்கப்போய் பல்பு வாங்கிக்கொண்டேன் .ஹி..ஹீ )

”தோ பார் உன்னை எனக்குப் புடிக்கும் ஆனா அது காதல் லவ் அது இதெல்லாம் இல்லை. நீ அழகா படம் போட்ற நான் லவ் பண்ற ஒருத்தன் கிட்ட இருக்கவேண்டிய எல்லாமே உங்கிட்ட இருக்கு .
ஆனா அதை இன்னும் நான் முடிவு பண்ணல. ஆனா அதுக்காக நமக்குள்ள இருக்கிற ப்ரண்ட் ஷிப்பை கெடுத்துக்க விருப்பம் இல்லை மாட்டிக்க வேணாமேன்னுதான் வெறுப்பேத்தினேன் . ஆனா அதுக்கு முன்னாடி அவசரப்பட்டு சிஸ்டர்ன்னு சொன்னல்ல அதனால்தான் கோவப்பட்டேன்

மேற் சொன்ன இந்த சம்பாஷணையிலேயே உங்களுக்கு எல்லாமே தெரிந்தெருக்கும் வசுமதி யார் என்ன யோசிக்கிறாள் என்று .. என்னை குழப்புவதெற்கென்றே கடவுள் படைத்த அதிசயப் பொரூள். தெரியாத்தனமாய் அவளை அழுத்தமாய் காதலித்துவிட்டேன். நெய் ஊற்றி ஊற்றி எரியவைத்தாள் . அதனால் சட்டென அவளை விட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ச்சீ சீ இந்த பழம் புளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆறு மாசம் அவளை பார்க்கபோகவில்லை. வீடே கதி
வேதகிரியும் போன வருஷமே திருவண்ணாமலையில் இஞீனியரிங் கிடைத்து ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டதால் வசுவின் வீட்டுக்கு போவது சுத்தமாக நின்று போனது .
வல்லரசு கூட கேட்டான் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னாடா ப்ரச்னை .

வீட்டில் புதுசாக வாங்கிக்கொடுத்த பைக் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுத்தது. ரூட்டை திருப்பினேன். பானு எங்க தெருதான் புதுசாய் வந்து ரெண்டு வருஷம் ஆகியிருந்தது. பைக்கில் போகும் போதும் வரும் போதும் பார்வைகள் பாக்கெட்டில் விழுந்தன. ஒருநாள் வீட்டுக்குள் நுழைந்த போது அலமாரியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தாள் . அம்மா அறிமுகப்படுத்த பாத்துருக்கேன் என சொல்லி சிரித்தேன். சுஜாதா புக்ஸ் கேட்டா நீயும் அடிக்கடி அவர்புக்தான படிப்ப அதான் வீட்டுக்கு வாம்மான்னு கூப்பிட்டு வந்தேன் ..அம்மா காபி கொண்டுவந்து அவள் கையில் கொடுத்துவிட்டு சொன்னாள் . அப்புறம் செல் போன் நம்பர் வாங்கி பேச ஜோக்குகள் மெசேஜ்கள் பறக்கத்துவங்கின

நான் ஒரு மாங்கா வசுவை ப்பற்றி அவளிடம் எதுவும் கேட்கவில்லை . ரெண்டும் க்ளோஸ் பிரண்டு போல
ஒரு நாள் பானுவின் மெசேஜில் பட்டாம் பூச்சிகள் .. உன்னை எனக்கும் ரொம்ப பிடிக்கும் சிவா ……. இத்யாதி இத்யாதி எதுவோ பெரிசாக சாதனை செய்தார் போல உள்ளுக்குள் லல்ல்லா பரவசம்… அப்போதே அப்பவே ஐ டூ லவ்யூ சொல்லியிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் .ஆனால் ஒரு கெத்துக்காக நாளைக்கு சொல்கிறேனே என மெசேஜில் சொல்ல பரவயில்லை இதெல்லாம் அவசரப்பட்ற விஷயமில்லை … பானு ரொம்ப மெச்சூர்டாக பேசி என்னை கவிழ்த்தாள்.

அடுத்த நாள் பானுதான் இனிமே என புல் பார்மில் இன்றே முட்டு சந்தில் ஒரு முத்ததுடன் துவங்கலாம் என முடிவெடுத்து அந்த ராசி டி ஷ்ர்ட்டை போடப்போய் பின் தயங்கி மனசு ஏற்க மறுத்து ..மாலையில் வழக்கம் போல ஏரியாவில் லவ் சாட் நடக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அவளை வரச்சொல்லிவிட்டு அப்படியே பீச்சுக்கு அழைத்துப் போய் கடலை போடும் கனவுடன் பைக்கை உதைத்தேன் . அங்கு போன போது அதிர்ச்சியோ அதிர்ச்சி பானுவுடன் அன்று வசுமதியும்…… எனக்கு ஷாக் நல்ல வேளை அந்த ராசி டீ ஷ்ர்ட் போடவில்லை

தோழிக்கு உண்மையாக இருக்கும் பொருட்டு பானு விவரத்தை உடைத்திருப்பால் போல பானுவையும் என்னையும் இணைத்து வைப்பதாக ஆரம்பத்தில் பானுவுக்கும் கைகுலுக்கி வாழ்த்து சொன்னதால் பானுவும் அவளை அழைத்து வந்ததாக சொன்னாள். ஆனால் என்னைப் பார்த்த வுடனேயே என் கையை பிடித்து தனியாக அழைத்து போய் ..டேய் லூசு நீ என்னை ட்ரை பன்றதுக்காக அவ கூட க்ளோசா பழகறது தெரியாம அவள் தப்புதப்பா நெனச்சிகிட்டு அவளை உங்கூட சேத்து வைக்கச்சொல்லி புலம்பறா

நீங்க க்ளோஸ் பிரண்டா எனகெப்படித் தெரியும் கத்த வேண்டும் போல இருந்தது. உள் மனசு கத்தியது ஆனால் எதுவும் பேச முடியவில்லை மாங்கா முழுசாய் முழுங்கியவனைப்போல வசமாக மாட்டிக்கொண்டேன்.
ஆறு மாசத்துக்கு முன் வரை உருகி உருகி காதலித்த பெண்ணிடம் இல்லை உண்மையிலேயே பானுவை நானும் .. எப்படி .. சொல்ல முடியும்

சைக்காலாஜி வசுமதிக்கு அத்துபடி நான் சொல்ல மாட்டேன் என நன்கு தெரிந்துதான் இந்த கிடுக்கி பிடி

என்னை ட்ரை பண்றதுக்குதான் அவகிட்ட க்ளோஸா பழகினேன்னு அவகிட்ட நீயே உண்மைய சொல்லு ..
இரண்டவாது குண்டை போட்டாள்
இல்லை வசுமதி .. நான் அப்புறம் சொல்லிக்கறேன்

இல்லை இப்ப இப்பவே சொல்லு நான் வசுவை ட்ரை பண்ணதான் உங்கிட்ட க்ளோசா பேசறேன்னு என் கண்ணு முன்னாடியே சொல்லிடு
ஆஞ்சநேயர் கோவில் பாதி இருட்டில் அவள் என்னை நிர்பந்திக்க உண்மையில் அப்போது நான் அவளை பதிலுக்கு துணிந்து அப்ப நீ என்னை லவ் பண்றன்னு சொல்லு என பதிலுக்கு கொக்கி போட்ருக்க வேண்டும் கேட்டிருக்க வேண்டும் துணிச்சல் இல்லை . வசு விஷயத்தில் நான் ஒரு காதல் கொண்டேன் தனுஷ்

தைரியம் வரவில்லை .. என்ன இருந்தாலும் மனசுக்குள் மங்காத்தாவாக வாழும் தெய்வம் அல்லவா என் வசுமதி .

பானு அங்கே பயத்துடன் காத்திருக்க என்னோடு வசுமதியும் வருகிறாள்

நான் மவுனம் காத்த சைக்கிள் கேப்பில் அவளே ஆரம்பித்துவிட்டாள் நான் சொன்னேன்ல்ல இவனை நம்பாதேன்னு பானுவிடம் அப்படியே கவிழ்த்தாள் நான் வசுமதியை அதிர்ச்சியுடன் பார்க்க அவளோ டேய் தைரியமா எங்கிட்ட சொன்னதை பானுகிட்டயும் சொல்லு

நான் தயங்க வசுவே பானுவிடம் சொல்லிவிட்டாள்.
அவன் மனசுல அப்படியெல்லாம் இல்லையாம் பானு .. தலைவர் என்னை ட்ரை பண்ணத் தான் உங்கிட்ட க்ளோசா பழகியிருக்காரு நீயும் அதை நம்பிட்ட எனச் சொல்ல பானுவின் முகத்தை பார்க்க வேணுமே என் முகத்தில் பானுவின் எச்சிலை முழுமையாக உணர முடிந்தது . கைக்கு கிடைத்த பழம் கைதவறி மண்ணில் விழும் அவலத்தை கண்முன்னே பார்க்க நேர்ந்த்து.

அடுத்த நாள் பானுவை சமாதானப்படுத்த சாயந்திரம் ஆஞ்சநேயர் கோவிலில் காத்திருந்த போது வரவே இல்லை பின் இரண்டு வாரம் கழித்து போனபோது யாரோ செந்தில் முருக வேலுடன் வந்திருந்தாள் .. என்னை பார்த்தவுட்ன் அவனுக்கு ..அறிமுகப்படுத்திவிட்டு மீசை வைக்காத சிவா உன் முகத்துக்கு மீசை அசிங்கமா இருக்கு ஷேவ் பண்ணிடு வரட்டா, என சொல்லிவிட்டு போனாள் .

மறுநாள் காலை நானும் மீசையை ஷேவ் பண்ணப் போக அப்போதுதான் அவள் சொன்னதன் உள்குத்து எனக்கு உறைத்த்து

வசுமதி இப்படி என்னை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் பண்ணியவள் ஆனால் அடிக்கடி எஸ் எம் எஸ் மட்டும் வரும் ஹாய் என்ன பண்ற .. வீட்டுக்குவா .. அம்மா வரச்சொன்னா .. என்றபடி ஆடம் காட்டினாள்.

பானு விவகாரத்துக்குப் பிறகு இனி ரெண்டில் ஒண்ணுதான் லவ்வா இலையா இந்த ப்ரண்ட் ஷிப் மண்ணாங்கட்டி இதெல்லாம் வேணவே வேணாம் என நினைத்து ஒதுங்கியிருந்த சமயம் ஒரு நாள் என்னை பீச்சுக்க்கு அழைத்தாள் . தனியாக வரச்சொன்னாள் . சரி பாக்காமல் இருந்த்தால் அவளுக்குள் காதல் வந்துவிட்டது என நானும் ராசி டி ஷர்ட்டை உடுத்திக்கொண்டு பைக்கை உதைத்தேன். மனசில் திரும்ப வச்சு உண்மையிலே செம பொண்னுதான் … ச்சே அந்த கண்னு முழி… நல்ல வேளை பானுகிட்டருந்து எஸ்கேப் என என்னை நானே தேற்றிக்கொண்டு சென்றேன் .

காந்தி சிலை பக்கம் காத்திருந்தால் . ஒரு லெட்டரைக் கொடுத்துப் படிக்க சொன்னாள் . ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக ஒரு லவ் லெட்டர் . அது யாரோ அவளுக்கு எழுதியது .அதில் ஒரு வரி ஆங்கிலத்தில் இப்படி இருந்தது . நீ லவ்வே பண்ணாட்டாலும் கவலையில்லை அடுத்த ஜென்மத்துலயாவது உன் வயித்துல ஒரு குழந்தையா பொறக்கணும்னு ஆசைப்படறேன் . இந்த வரி எனக்கே ஷாக் ஆக இருந்தது .
யார் இவன் ?
-தெரியாது தெரிஞ்சா ஏன் உங்கிட்ட ஏன் கொண்டாரப்போறேன் ? எனக்கென்னவோ உன் மேலதான் டவுட்

-சே நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்குதான் நல்லா தெரியுமே

-சரி சரி ஆரம்பிச்சுடாத போர் சரி இப்ப இவன் யாரு எனக்கு தெரிஞ்சாவனூம் யாரோ நவாஸ் னு போட்ருக்கு முஸ்லீமா
ஆமாம்
அப்ப உனக்கு தெரியும்னு சொல்லி
ஏய் பேர் நவாஸ் முஸ்லீமான்னு உலகமே ஆமான்னுதான் சொல்லும் லூசா நீ
சரி அப்ப நீயே கண்டுபுடி எனக்கு அவன் யாருன்னு தெரிஞ்சாவணும் நாலு அறை விட்டு எதுக்குநீ இப்படில்லாம் எழுதினானு கேக்கணும்

ரெண்டு நாள் அலைச்சலில் நவாஸ் சிக்கினான் . வசுமதி தினசரி காலேஜ் செல்லும் வழியில் கார் மெக்கனிக் ஷெட்டில் வேலை. ஷெட்டுக்கே சென்று நவாஸ் யாரு எனக்கேட்டபோது காருக்கு கீழே ஸ்பேனருடன் வெளிப்பட்டது ஒருமுகம்
அதிர்ச்சியாக இருந்தது . முகம் முழுக்க அம்மை தழும்பு
நான் தான் நவாஸ் கார் எங்க ?\
இல்லை நான்.. நான்.. உன்னைதான் பாக்கணும் “
இருங்க வரேன்

ரெண்டு நிமிடத்தில் சட்டை மாட்டிக்கொண்டு அவசரமாய் பட்டன் போட்டபடி வந்தான் .

வசுமதிக்கு லெட்டர் போட்டவன் நீதானே
அவனுக்கு அதிர்ச்சி

இருவரும் ஒரு டீக்கடையில் அமர்ந்தோம் டீயை அவன் உறிஞ்சிக்குடிப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒரே ஒரு தடவை நெரா பாத்து அவகிட்ட மன்னிப்பு கேட்டா மேட்டர் முடிஞ்சிடும் இல்லாட்டி. அவ அப்பாகிட்ட சொல்லி பொலீஸ் வரைக்கும் போயிடுச்சின்னா அப்புறம் ப்ரசனை பெரிசாயிடும் கொஞ்சம் முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு சிரித்தபடி சொன்னேன்

அவன் அதற்கெல்லாம் அசந்த மாதிரி தெரியவில்லை
நீங்க யார் சார் வசுமதிக்கு அண்ணனா
அடப்பாவி இப்படி ஒரு கேள்வி கேட்பான் என எதிர் பார்க்கவில்லை
ப்ரண்டு ‘
ம்
அவன் தலையாட்டிக்கொண்டு சார் லவ் லெட்டர் குடுக்கிறது தப்புன்னு சட்டம் எதுவும் இல்லை புடிச்சிருந்தது குடுத்தேன் வேணும்ன நேரா வரேன் அப்பயும் சொல்றேன் புடிச்சா ஒகே சொல்ல சொல்லுங்க என அவன் தைரியமாக பேசிவிட்டு
நாயர் கணக்கு எழுதிக்கோ அவர் டீயும் செத்து ”. எழுந்து போய்விட்டான்

இது தேவையா என்பது போல கடை சுவர்க் கண்ணாடியில் என் முகமே என்னைக்கேட்டது

அதன் பிறகு வசுமதி தொந்தரவு செய்யவே எல்லாவற்றையும் சொல்லி மோசமான ஆளா இருப்பான் போலருக்கு எதுக்கு வம்பு விட்டுத்தொலை எனக் கூறினேன்

பத்து நாள் கழித்து எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது இருவரும் ஒரு பைக்கில் போவதை பீச் ரோட்டில் பார்த்து அதிர்ந்து போனேன்
அபபடியென்றால் அவனிடம் வசுமதி செட்டிலா ..? அதுவும் அம்மை வார்த்த முகம் மெக்கானிக்…. ரிலிஜியன் வேற …ஆஞ்ச நேயர் கோவிலுக்கு இவனை எப்படி கூப்பிடுவா … இவ ரசனையே வேற ஆச்சே எப்படி இது சாத்தியம் ? ஒண்ணுமே புரியலை..

வேறு சில நபர்கள் மூலமாகவும் இது உறுதியாக இனி அவள் எக்கேடோ கெட்டு போகட்டும் என்று வசுமதியை முழுவதுமாக நினைவிலிருந்து துடைத்தெறிந்தேன்
ச்சே போயும் போயும் இவளுக்காக போய் அவனை மிரட்டி பல்பு வாங்கி இதுதான் பெண்களை நம்பாதேன்னு பாட்டா எழுதிவச்சானுங்க .. நமக்கெல்லாம் பானு தான் .. இப்ப இன்னொரு பானுவுக்கு எங்க ஓடறது மனதே சரியில்லை
ஒரு நாள் வசுமதி அம்மா போன் செய்து உனக்கு தெரியுமா . இந்த அநியாயம் எனச் சொல்லி அழுதாள் அவனைப்போய் கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றா . உன் கூடதானே க்ளோசா இருந்தா நான் கூட உன்னை போயி சந்தேகப்பட்டேன் என்றவர் உடன் அடுத்து சொன்ன வார்த்தை தான் எனக்கு தாங்க முடியாத துக்கத்தை கொடுத்தது. அட்லீஸ்ட் உன்னைன்னு சொல்லிருந்தாகூட ஏத்துக்கிட்ருப்பேன் ? எப்படிப்பா எனக்கு மனசே ஆறல என அவர் அழுத போது எனக்கு உண்மையில் இதற்கு அழுவதா சிரிப்பதா என்று எதுவும் விளங்காத விளக்கெண்னய் நிலை. மென்று விழுங்கி ஆமாம்மா என எதுவும் தெரியாதவன் போல பேசினேன் .

வசுமதியைபற்றி எனக்கு நன்றாக தெர்யும் ஒரு முடிவை எடுத்து விட்டாள் அப்புறம் உலகமே எதிர்த்தாலும் அவளைத் தடுக்க முடியாது
ஆறு மாதம் கழித்து நாவாசுக்கும் அவளுக்கும் திருமணம். இருவரும் என்னைத் தேடி விட்டுக்கு வந்து அழைப்பு தந்தனர் .. திருமணத்துக்காக அவள் முஸ்லீமாக மாறீவிட்டதாக சொன்னாள். பேர் கூட ஷரின் . பேர் எப்படி என சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள் . நான் அவன் முகத்தை பார்த்தேன் . பேர்ல என்ன இருக்கு வசுமதி வாழ்க்கை சந்தோஷமா இருந்தா ஓகே தான் என நெஞ்சுபொறுக்காமல் பேச்சுக்கு சோல்லி மழுப்பினேன் . உடனே அவள் நவாசிடம் திரும்பி பாத்தியா இவன் இப்படித்தான் எப்பவுமே ஒரு பாசிட்டிவ் திங்கிங்

எனக்கென்ன ஆச்சர்யம் என்றாள் அவனுக்காக இப்படி அவள் இறங்கிப்போகும் அளவுக்கு அவனிடம் அப்படி எதைக்கண்டு விட்டாள் . அந்தஸ்து பணம் படிப்பு வேலை அறிவு எதிலுமே அவன் அவள் ஈடுக்கு இல்லை

நான் கல்யானத்துக்கு போகவில்லை ரிசப்ஷனுக்கும் போகவில்லை இரவு அவளிடமிருந்து போன் வந்தது . ஏன் வரவில்லை கத்துவாள் என எதிர்பார்த்தேன் ஆனால் அவளோ ரிசப்ஷன் எப்படி அருமையாக நடந்தது அவனும் அவளும் சேர்ந்து டான்ஸ் ஆடியது பாட்டு பாடியது என எது எதுவோ சொல்லி வெறுப்பேற்றிவிட்டு இன்னைக்கு பர்ஸ்ட் நைட் அதான் உங்கிட்ட சொல்லிட்டு ரூமுக்குள்ள போவலாம்னு என்றாள் . தூக்கி வாரிப்போட்டது

இப்ப சொல்லுங்க ப்ரோ வசுமதியை நான் எப்படி எடுத்துக்கறது ஏன் அவ என்னை கடைசி வரை நிரகாரிச்சா. இல்லாட்டி கடைசி வரைக்கும் மதிச்சா உரிமை எடுத்துகிட்டா .. இதுல எந்த புள்ளியில எங்க ரிலேஷன்ஷிப் அவளை பொறுத்தவரைக்கும் நான் பாய் பெஸ்டியா காண்பிச்சுகிட்டா ஆனா அது உண்மையில்லைன்னு எனக்கு எனக்கு மட்டும்தான் தெரியும் உண்மையில என்னை அவ லவ் பண்ணா லவ் பண்ணா இதை நான் யாருக்கிட்ட சொல்வேன்

இதோ பத்து பதினைஞ்சு வருஷம் போயிடுச்சி இன்னும் ரெண்டு நாள்ல அவ வரப்போறா

அவ கிட்ட இதைகேக்கலமா கேட்டு என்ன ஆவப்போவுது ஒண்னுமில்ல ஆனா ஏன் என்னை நீ காதலிக்கலை இல்ல கல்யாணம் பண்ணிக்கலை இல்லை ஏன் என்னை ஒப்புக்கு சப்பானியா மாத்துன இப்படி ஏதாவது ஒன்னை கேகணும் \
கேட்டதான் மனசு ஆறும்

இரண்டு நாட்களுக்கு பிறகு காலை ஆறுமணிக்கு அவன் கார் ஏர் போர்ட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் ஒரு பேப்பரில் சுருட்டப்பட்ட பொதி .அதனுள் அந்த ராசி டி ஷர்ட் .

2 Comments

 1. Ganesh

  This short story reminds me Shakespeare’s quote which is “love’s reason’s without reason”. But அவ்வயதின் குரூரங்களில் சிக்கும் சிவாக்களே சபிக்கப்பட்டவர்கள்.
  Every character has portrayed very well. And ‘வசுமதி’ the name itself has intense. தமிழ் சினிமாக்களில் வரும் வில்லிகளுக்கு உண்டான பெயராகக் கூட கருதலாம். Just like that என்று வாசித்துவிட்டு கடந்து போக முடியவில்லை. Cruelty of vasumathi and frustration of siva made me depressed.
  It is so horrible to come to his house and she acting like as if nothing had happened. But we could admit one thing as if u have that guts we can succeed in love like nawas. பானுக்களும் பாவப்பட்டவர்களே. Over-all this writing & characterisation thrown me into deep thinking.

  Reply
  1. ajayan bala (Post author)

   thanku ganesh good review

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *