ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்

(ம.அரங்கநாதன் படைப்புகள் எனும் த்லைப்பில் நற்றிணை பதிப்பகம் வெலீயிட்டுள்ள நூல் குறித்த விமர்சனம்)

மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறுகதைகளில் அவர் சற்று பலம் கூடியவராகவும் கலையம்சம் கூடிவரப்பெற்றவராகவும் காணப்படுகிறார். ஒருவேளை சிறுகதைகள் மட்டுமே மொத்தமாக தனித்தொகுப்பாக கொண்டுவந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.என்றபோதும் ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளனின் தார தம்மியம் எத்தகையது என மதிப்பிட பிற்பாடு ஆய்வாளர்களுக்கு வசதியான வகையில் இப்படி ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்த நற்றிணை பதிப்பகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது என்னையே நான் உற்றுப் பார்ப்பதை போல உணர்கிறேன். என் மனக்கிற்றில் யாரோ எட்டிப் பார்ப்பது போல, காரணம் சில சமயங்களில் அவரை என் தந்தையாக உணர்ந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த புதிதில் கிட்டதட்ட மூன்று நான்கு ஆண்டுகள் தினசரி ம.அரங்கநாதனை சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
அந்த ஞாபகங்களை பகிராமல் புத்தகம் குறித்து மட்டுமே விமர்சனம் எழுத என்னால் முடியவில்லை.
இத்தனைக்கும் இதற்கு முன்பே அவர் இறந்தவுடன் அவருக்காக நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் எனக்கும் அவருக்குமான உறவு குறித்து எழுதியிருந்தாலும் இந்த கட்டுரையிலும் அந்த உணர்வு என்னை மீறி எழுத வைக்கிறது. .

மாம்பலம் ரயில் நிலையம் அருகில் சாந்தி காம்ப்ளக்ஸ். இப்போது அது ஜெயச்சந்திரன் துணிக்கடையாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூன்றாவது மாடியில்தான் முன்றில் புத்தக கடை இருந்தது.
அக்காலங்களில் தினமும் என் பத்திரிக்கை வேலை முடிந்து மாலை அவர் முன்றில் புத்தகக் கடைக்கு வருவதும் உரையாடுவதும் வழக்கம்.

அவர் வீடும் என் அறையும் அப்போது பழவந்தாங்கலில் அடுத்தடுத்த தெருவிலிருந்த காரணத்தால் இரவு எட்டு எட்டரைக்குமேல் கடையடைத்து விட்டு மாம்பலம் ரயில் நிலையம் வந்து பழவந்தாங்கல் வரை ஒன்றாக ரயிலில் பயணிப்போம்.அப்போது அவர் தொடர்ந்து சிகரட் பிடிப்பார். சார்மினார் சிகரட். வயது வித்தியாசம் பாராமல் எனக்கும் ஒரு சிகரட்டை நீட்டுவார். நான் பல சமயங்களில் மறுத்துவிடுவேன்.

கடையில் விட்ட உரையாடல் ரயில் பயணத்திலும் தொடரும். உலக இலக்கியம், சினிமா, இலக்கிய அரசியல்கள் என அனைத்தும் பேசுவார். அவரது ஆங்கில இலக்கிய பரிச்சயம் மற்றும் பழைய ஹாலிவுட் சினிமாக்கள் குறித்த துல்லியமான அறிவு எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.

மார்லன் பிராண்டோ, கிரேட்டா கார்போ, பிரெட் ஆஸ்டர், ஜிஞ்சர் ரோஜர்ஸ் என பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களைப் பற்றி தான் பார்த்த அனுபவங்களையும் சொல்லுவார். எரோல் பிளின், ஜேம்ஸ் டீன் ஆகியோர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்.

இந்த மொத்த தொகுப்பின் பல கதைகள் அந்த காலத்தில் அவர் எழுதியவை பஃறுளியாற்று மாந்தர்கள் நாவலும் கூட அக்காலத்தில் எழுதப்பட்டதே. நாவல் வெளியாகும் முன்பே எனக்கு ஒரு பிரதி தந்து அதை படித்து அபிப்ராயம் சொல்லுமாறு கொடுத்தார்.

நான் அப்போதுதான் கல்லூரி படிப்பு முடிந்து சென்னை வாழ்க்கைக்குள் நுழைந்த காலம். ஆனாலும் அவர் என்னையும் என் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மதித்து அவர் ஒவ்வொரு கதை எழுதிய பின்னும் கையெழுத்து பிரதியிலும் அச்சு பிரதியிலுமாக கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்பார். எனக்கு அவருடைய கதைகளில் அப்போது சில விமர்சனங்கள் இருந்தன. முதலாவதாக அவருடைய கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற ஒரே பாத்திரமே திரும்ப திரும்ப வருவது எனக்கு பிடிக்கவில்லை. அதை அவரிடம் நேரிடையாகவே சொன்னேன். இதர கதைகளின் நம்பகத்தன்மை, வாசக ஈர்ப்பு போய் முத்துக்கறுப்பன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பும் அந்த பாத்திரத்தின் மீதான ஈர்ப்புமாக மட்டுமே கதை முடிந்து போய்விடுகிறது என்றும் கதையின் உள்ளடக்கத்தை அது பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்வேன். அந்த வயதில் அவர் எனக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார் . ஆனால் மொத்தமாக படிக்கும் போது என் அக்கால அபிப்ராயம் தவறு என்றே எண்ணத்தோன்றுகிறது.

இப்போது மொத்த கதைகளையும் வாசித்தபின் முத்துக்கறுப்பன் என்கிற பாத்திரம் நம் மனதில் ஒரு நிழலுருவமாக அழுத்தமாக பதிவதை உணர முடிகிறது. கதைகளில் எங்கும் முத்துக்கறுப்பன் தோற்றம் குறித்து விவரணைகளில்லை. ஒரு கதையில் திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் இன்னொரு கதையில் கிழவனாகவும் மற்ற கதையில் நடுத்தர வயதுடையவராகவும் வருகிறாரே தவிர்த்து எங்கேயும் விவரணைகளில்லை. மாறாக ஒரு குணச்சித்திரம் நமக்குள் அருவமாக பதிகிறது. கதைக்குள் அந்த அருவத்தின் நிழல் உண்டாக்கும் சலனங்கள்தான் அவருடைய ஒட்டுமொத்த கதைகளின் புதிர்த்தன்மைக்கு ஆதாரம்.

தமிழ் நவீன இலக்கிய சூழலில் மிகவும் தனித்தன்மை மிகுந்த கதையுலகம் ம.அரங்கநாதனுடையது. அவருடைய கதைகள் எளிமையானவை. மொழி இலகுவானது. வாசகனோடு நேரடியாக உரையாடக்கூடிய தன்மை கொண்ட கதைகள் . என்றபோதும் அவருடைய கதைகள் எளிதில் வசப்படாத அருவத்தன்மையும் கொண்டவை.

வழக்கமான வடிவ பரிசோதனைக்கதைகள் மட்டுமே இத்தகைய அரூப உள்ளடக்கத்தை கைக்கொண்டிருக்கும். ஆனால் ம.அரங்கநாதன் கதைகள் தெளிவான எளிமையான 60,70 களின் பாணியில் கதையை சொல்லி அருவமான அல்லது நம்மை மிகவும் யோசனையில் ஆழ்த்தக்கூடிய முடிவைக் கொண்டிருப்பவை.

பெரும்பாலும் அவர் எந்த கதையையும் நேரடியாக சொல்பவரில்லை, கதையை குறிப்பால் உணர்த்துகிறார். எது கதை என்பதை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு தெளிவற்ற நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் அதுதான் அவர் பயன்படுத்தும் உத்தி.
தன்னுடைய சிறுகதைகளில் வாசகன் கதையை இதுதான் என கண்டுவிடக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் அவர் ஈடுபடுவதுதான் அவருடைய தனித்தன்மை.

பொதுவாகவே சிறுகதைகளின் வடிவம் என்பது அதன் இறுதிவரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இறுதியில் சொல்லி சொல்லாமல் நிறுத்துவது எழுத்தில் ஒரு சாகசம். சில பண்பட்ட எழுத்தாளர்களுக்கே அது சாத்தியப்படும். ஒரு வெற்றிடத்தை முடிவில் விட்டுச்செல்லும் கதைகள் நம் மனதில் ஆழத்தேங்கி விடுகின்றன. கதை அதுகாறும் எதைச்சொல்ல வருகிறதோ அதை இறுதியில் ஒன்றுமில்லமால் செய்வது அல்லது அதை கடந்து வேறொன்றைச்சொல்லி நம்மை யோசிக்க வைப்பது அல்லது அதை குறிப்பால் உணர்த்தி வாசகனுக்குள் புதிர்த்தன்மையை உருவாக்குவது அல்லது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சிக்குள் வாசகனை ஆழ்த்துவது போன்ற முடிவுகளை தமிழின் பெரும்பாலான நல்ல கதைகள் கைக்கொண்டு வருகின்றன. இதை சரியாக செய்பவை மட்டுமே சிறந்த கதைகள்.

முடிவை திறமையாக கையாள்வதில் ஓ ஹென்றி, காப்கா, சதாத் ஹசன் மாண்டோ மூவருமே அதி மேதைகள். இதனாலயே சிறுகதை உலகின் முடிசூடா மன்னர்கள் என்ற பெயரையும் வரித்துக்கொண்டவர்கள். தமிழில் இவர்களைப் போல முடிவில் செறிவான தொழில் நுட்பத்தை கைக்கொள்ளும் சிறுகதை எழுத்தாளர் என்றால் அசோகமித்ரனை சொல்லமுடியும். வெறும் கதையாக இல்லாமல் செய் நேர்த்தியாக செதுக்கி வாசகனை ஓரிடத்தில் நிற்கச்செய்து விட்டு காணாமல் போகக்கூடிய எழுத்து அவருடைய பாணி.

(அக நாழிகை பொன் வாசுதேவனும் நானும் பாண்டிச்சேரியில் அவருடைய இல்லத்தில் 2010ல் சந்தித்தபோது)

அசோகமித்ரனுக்குப் பிறகு அந்த லாவகம் முழுமையாக கைகூடப்பட்ட எழுத்து ம.அரங்கநாதனுடையது. தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தன், கு.பா.ரா, மௌனி ஆகியோருக்குப் பின் ஆதவன், வண்ணநிலவன் வண்ணதாசன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் ஆகியோரிடம் சிறந்த நுணுக்கமான விவரணைகள், உள்ளுணர்வுகள், காட்சி பதிவுகள் அழுத்தமான பாத்திரங்கள், தனித்த வாழ்வனுபவங்கள் ஆகியவை சிறப்பாக கொண்டிருந்தாலும் சிறுகதையின் இறுதியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் கதையை முதலிலிருந்து வாசிக்க தூண்டும் வடிவம் ம.அரங்கநாதனுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவருடைய புகழ்பெற்ற கதையான சித்தியை எடுத்துக்கொள்வோம். எதேச்சையாக ஒரு மைதானத்தில் ஓட்ட பயிற்சிக்கு வருகிறான் ஒரு இளைஞன். அங்கு காவலர் மூலமாக பெரியவர் ஒருவர் அறிமுகமாகிறார். அவர் முன்னாள் விளையாட்டு வீரர். நாடே அறிந்தவர் விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.தேசத்தின்மேல் மிகுந்த பற்று வேறு. அவருக்கு இவனை கண்டதும் பிடித்துப்போகிறது. அவர் அவனுக்கு பல உத்திகள் பல பயிற்சிகள் கற்றுக்கொடுத்து மிகப்பெரிய வீரனாக உருவாக்குகிறார். அவனும் பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறான். நாடே அவனை திரும்பி பார்க்கிறது.
கடைசியில் ஒலிம்பிக் போட்டியில் அவன் பெயர் அறிவிக்கபோவதற்கு முந்தின நாள் பத்திரிக்கையாளர்கள் அவனை சுற்றி பேட்டி எடுக்கின்றனர்.

அவர்கள் அவன் இந்த இடத்தை அடைய அவன் பட்ட சிரமங்களைப் பற்றி சுவாரசியமான பதில்கள் அல்லது நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் வரும் என எதிர்பார்க்க, அவனோ எனக்கு எதுவும் தெரியாது ஓடத்தெரியும் ஓடினேன்… ஓடிக்கொண்டிருந்தேன் என்ற தினியிலேயே பதில் சொல்கிறான்.
இறுதியாக ஒலிம்பிக்கில் நம் தேசத்தின் எதிர்காலம் எப்படி என்பதுபோல் கேட்க பதிலுக்கு அவனோ எனக்கு தெரியாது என்னால் சொல்ல முடியாது எனக்கு ஓடமட்டுமே தெரியும்
என்பது போல சொல்ல அதுவரை உற்சாகத்துடன் அருகில் நின்ற பெரியவர் கோபத்துடன் கதவை அடைத்துவிட்டு காரில் ஏறி செல்கிறார்.

அதோடு கதையும் முடிகிறது.

யோசித்து பாருங்கள்… இந்த கதையில் யார் நாயகன். அந்த இளைஞனா பெரியவரா… கதை இளைஞனுடையதாக இருந்தாலும் கதையை முடிப்பது பெரியவரின் செயலே…
இந்த கதை மூலம் அவர் சொல்ல வருவது என்ன ? இது வாசகனுக்கு விடும் சவால். வெறுமனே இந்த கதையை பரிசோதனை முயற்சி என சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. கதையின் இறுதியில் அந்த முதியவர் பாத்திரம் எதனால் அப்படி கோபப்பட வேண்டும் என்பதை யோசிக்கும் வழியில் உங்களுக்கான கதையின் இறுதி முடிச்சு உள் முகமாக சுருட்டப்பட்டு மறைந்து கிடக்கிறது.

காப்காவின் ஜட்ஜ்மண்ட் கதையின் இறுதிபோல ரஷ்யாவில் வசிக்கும் நண்பனுக்கு தன் காதல் திருமண நிச்சயத்தை கடிதம் மூலமாக தெரிவிக்க போகும் முன் அப்பாவோடு உரையாடுகிறான். அப்பா அவனுக்கு தகவல் சொல்லக்கூடாது என்கிறார். இறுதியில் அவன் ஒரு பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான்
இறுதியில் அவன் தற்கொலை போலத்தான் சித்தி கதையில் முதியவர் கோபத்துடன் காரில் ஏறிச்செல்வதும் கதை அங்கு முடியவில்லை. ஆனால் இரண்டிலும் இறுதி சம்பவம் உண்டாக்கும் அதிர்ச்சி கதையை மீண்டும் வாசிக்க கோருகிறது.
காப்கா கதையில் அப்பாவும் மகனும் எந்த இடத்தில் தற்கொலை செய்யுமளவிற்கு முரண்படுகிறார்கள் என வார்த்தையில் தேடினால் கிடைக்காது.

அது போலத்தான் சித்தி கதையிலும் இளைஞனுக்கும் முதியவருக்குமான முரணுக்கு என்ன காரணம் என யோசிக்க வைக்கிறார்.சித்தி கதையில் இரண்டு பார்வை கோணங்கள் ஒளிந்திருக்கின்றன.

ஒரு வகையில் பார்த்தால், அந்த இளைஞன் தன் காரியத்தை கடமையை சரியாக செய்தாலே பலன் அதுவாக கிட்டும் என நினைப்பவன். அவனிடம் முஸ்தீபுகள் இல்லை, பெரிய இலட்சியங்கள் இல்லை… பார்ஸ்ட் கம்ப் பட நாயகனை போல ஓடிக்கொண்டேயிருக்கிறான், வெற்றி அவன் பின்னால் இயல்பாக வருகிறது.

வாழ்வின் முழு பக்கத்தையும் அறிந்த ஒருவனுக்கு மட்டுமே இத்தகைய ஞானம் சாத்தியம். கடைசியில் அவன் பேட்டியில் பேசும்போது பெரியவர் இத்தனைக்கும் காரணமான தன்னை அவன் குறிப்பிடவில்லையே என கோபித்துக்கொண்டு போவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அதே சமயம் அவன் சுயநலம் கொண்டவனாக, பெரியவரால் தனக்கு உயர்வில்லை தன் உழைப்பு மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

இது எல்லாமே நம்முடைய தேர்வு… வழக்கமாக வரும் முத்துக்கறுப்பன் இல்லாமல் இக்கதை எழுதியதும் இந்த இரட்டை தன்மைக்கு காரணம். ஒருவேளை முத்துகறுப்பன் பேர் யாருக்கு வருகிறதோ அவன் பக்கம் நியாயமாக இருக்கும். காரணம் அவர் பெரும்பாலான படைப்பாளிகளைப் போல தன்னிலையை உயர்வாக எண்ணி எழுதக்கூடியவர்.

பெரும்பாலும் உறவுச்சிக்கல்களை அல்லது தனிமனித ஆன்ம அனுபவங்களை சார்ந்திருக்கும் இவரது கதைகளில் கோஷங்களோ பிரச்சாரங்களோ சமூக அவலங்களோ காணப்படுவதில்லை. சொல்லப்போனால் கதைக்காக பெரிய சிக்கல்களையும் அவர் சொல்வதில்லை. பல கதைகள் துண்டு துண்டான சம்பவங்கள் அதை நாம்தான் கோர்த்து புரிந்துகொள்ளவேண்டும். .படித்துவிட்டு வெறுமனே பக்கத்தை புரட்டவும் முடியாது . எத்ற்காக இந்த சம்பவங்களை அடுக்கினார் .

இவற்றுக்குள் மையச்ச்ரடு என்ன திரும்பவும் நம்மை கதைக்குள் தேடவைப்பார் அதுதான் அரங்கநாதன் செய்யும் வித்தை
பொதுவாக அரங்கநாதன் கதைகள் பசு பதி பாசம் சைச சித்தாந்த நெறிக்குள்ளேயே உழலுபவை என்ற பரவலான கருத்து உண்டு அவர் ஒரு பேட்டியில் இதை வைதீக மரபின் எதிர்ப்பு அரசியல் என்பார். கால்ம் காலமாக் வைதீகம் நமக்குள் திணிக்கப்பட்டு வருகிறது அதை தமிழ்ர்களுக்கு மட்டுமே உரித்தான் சைவ சித்தாந்த மரபின் மூலம் எதிர்ப்பதில் என்ன த்வறு இருக்க முடியும் கூறுவார் .

காடன் மலை எனும் கதை .. அதில் வரும் முத்துகறுப்பன் போளுர் வரை வந்து காணாமல் போகிறான். மலை திருவண்ணாமலை தான் என்பதை யூகித்து அறியமுடியும் அல்லது பரவத மலையாகவும் இருக்கலாம். திருவண்ணாமலை என ஏன் நான் சொல்கிறேன் என்றால் ம.அரங்கநாதன் அடிக்கடி ரமணர் பற்றி சொல்வார். திண்டிவனம் வரை வந்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புதிர்த்தன்மையோடு கதைகளில் சொல்வது போல விவரிப்பார் …
காணாமல் போவது, தோன்றுவது, தோன்றி மறைவது போன்றவை அவர் கதைகளில் பல இடங்களில் காணக்கிடப்பவை.தென்னகம் என்றாலே அனைவரும் தெற்கு திசை தென் திசை என்றுதானே நாம் நினைத்திருப்போம் ஆனால் ஐயன் மீர் சர்று பொறுங்கள் கதையில் தென் என்றால் தென்படுதல் தோன்றி மறைதல்,அவன் தோன்றி மறைந்த இடம், காட்சியளித்த இடம் அதனால் தென்னகம் என புது விளக்கம் தருகிறார்.

இந்த மொத்த தொகுப்பில் என்னை மேற்சொன்ன இரு கதைகள் தவிர்த்து சிறிய புஷ்பத்தின் நாணம், ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூரும் ,மெய்கண்டார் நிலையம் வீடுபேறு பனை, (இதிலும் முத்துகறுப்பன் இல்லை) அஞ்சலி, போன்ற கதைகள் வடிவரீதியாகவும் உள்ளடக்கரீதியகாவும் என்னை பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக அஞ்சலி எனும் கதையில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே. அவை ஒரு விமர்சன எழுத்தாளன் இறப்பதற்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகள். இரண்டிற்குமான வித்தியாசம்தான் கதை.

நல்ல வேளை நான் எழுதிய இரண்டு கட்டுரைகளும் அவர் இறப்பிற்கு பின்தான்… முன்பாக எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன் .. என்ன செய்ய முத்துகறுப்பன் என்னை எழுத அனுமதிக்கவில்லை.

நன்றி: நம் நற்றிணை
ஜூன் 2018

8 Comments

 1. Yiimp Pool

  Great article. Good to understand for everyone.

  Reply
  1. ajayan bala (Post author)

   நன்றி

   Reply
 2. joker123 download

  At period it came out it was a scary movie and this time it’s very,
  very tame. All soldiers, even a condemned one, are
  your property of Caesar, and will undoubtedly be turned onto Caesar. https://joker.vin/index.php

  Reply
 3. joker123 download

  At period it came out it was a scary movie and this time it’s very, very tame.
  All soldiers, even a condemned one, are your property of Caesar, and will undoubtedly be
  turned onto Caesar. https://joker.vin/index.php

  Reply
 4. russian escorts in gurgaon

  Many ladies aare working as female escort service. https://www.toprussianescort.com/

  Reply
 5. russian escorts in gurgaon

  Manyy ladies are working as female escort service. https://www.toprussianescort.com/

  Reply
 6. Pingback: Google

 7. Justin

  Great post.

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *