ரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டர்


இருட்டு அழுக்கு வியர்வை கொஞ்சம் கலை-
இரண்டாம் உலகப்போருக்குப் பின் குற்றவுணர்ச்சியாலும் அவமானத்தாலும் தலைகவிழ்ந்து கிடந்த ஜெர்மானியர்களுக்கு கலையும் சினிமாவும் இரண்டாவதாக தள்ளப்படட்தில் வியப்பேதும் இல்லை.
இச்சூழலில் அவர்களது மனோநிலையை சித்தரிக்கவும் உள்முகமான சில தர்க்க உடைப்புகளை நிகழ்த்தவும் ,சுய விசாரணையை மேற்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு தேவை இருந்தது. புனிதம் ஒழுக்கம் எனும் பெயரில் குடும்பங்களில் கட்டப்படும் இறுக்கம் ஒன்றிணைகிறபோது மைய ஆட்சியாளர்களை அது பேரதிகாரத்திற்கு அழைத்து செல்கிறது. அந்த பேரதிகாரத்தை எதிர்க்கவேண்டுமானால் ஆதாரமான குடும்பங்களின் புனித்ததை ஒருவன் உடைக்க வேண்டிய அவசியமாகிறது. அதுநாள் வரை விதிக்கப்பட்டிருந்த ஒழுக்க விதிகளை உடைக்கிறபோது புனிதங்களும் உடைபடுகின்றன. பாஸ்பைண்டரின் படங்கள் இதைத்தான் செய்தன . அதன் பொருட்டு அவரது கேமாரா இருட்டை தேடி அலைந்தது. சமூகத்தின் உண்மையான முகத்தை அந்த இருட்டில் வெளிச்சமிட்டுக் காட்டி அதன் அழகியலை பொதுவெளிக்கு கொண்டுசென்றார். இதனாலேயே அவரது படங்களீல் களவானிகளும்,, பாலியல் தொழிலாளர்களும், ஓரினசேர்க்கையாளர்களும் நாயகர்களாகவும் நாயகிகளாகவும் சித்தரிக்கபட்டனர்.
ரெய்னர் வெர்னர் பாஸ்பைண்டர் அமெரிக்கா ஜெர்மனிக்குள் ஊடுருவிய இரண்டாம் உலக்ப்போரின் இறுதி நாட்களில் 1945ம் ஆண்டு ஜெர்மனியில் பவாரியா எனும் பகுதியில் பிறந்தவர் .பெற்றோர் இருவரும் மருத்துவராக இருந்தனர். அதிலும் அவர்களது மருத்துவ மனைக்கு பெரும்பாலும் பாலியல் தொழில் செய்பவர்கள் அதிகமாக வந்த காரணத்தால் பாஸ் பைண்டருக்கு இயல்பாக அவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்புகள் கிடைத்தது. இது சமூகத்தின் பொதுபார்வையிலிருந்து அவரை விலக்கி தனித்த சிந்தனைகளுக்கு வழி சமைத்து கொடுத்த்து. பின் பெற்றோரின் விவாகரத்துக்கு பிறகு தாயிடம் வளரத்துவங்கிய பாஸ் பைண்டர் வளர்க்கப்பட்டது பெரும்பாலும் அவர்கள் விட்டு குடித்தனக்கார்ரகளாலும் தெரு புழுதியாலும்தான். காரணம் அவரது அம்மாவுக்கு உண்டான காசநோய். சிகிச்சைக்காக அவரது தாயார் பல நாட்கள் அவரை விட்டு பிரிய நேர்ந்ததுதான் இதற்கு காரணம். இதனாலயே அவர் பள்ளி பாடத்தைக் காட்டிலும் வாழ்க்கை பாடத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்..
அம்மாவின் இரண்டாவது கணவருக்கும் இவருக்கும் ஒத்துப் போகவில்லை. பைண்டரின் முரட்டு சுபாவம் காரணமாக அவரது தாயாருக்கு பெரும் ப்ரச்னை .புதிய கணவருடன் நேரத்தை இனிமையாக்கிக்கொள்ள அவருக்கு அப்போது தெரிந்த ஒரே வழி சினிமா .தேவைப்பட்ட நேரத்தில் மகனை அருகிலுள்ள சினிமா தியெட்டருக்கு காசுகொடுத்து அனுப்பி வைத்தார். இப்படி தவிர்க்கவே முடியாமல் சினிமா அவர் வாழ்க்கைக்குள் நுழைந்துகொண்ட்து.
வீட்டில் கிடைக்காத அனபும் மகிழ்ச்சியும் அவருக்கு சினிமாவில் கிடைத்தது..பாஸ் பைண்டர் பள்ளி படிப்பு முடிந்ததும் கொஞ்ச காலம் நாடகத்தில் நடிப்பு பயிற்சி மேற்கொண்ட பாஸ் பைண்டர். இக்காலத்தில் அவர் பல வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒரு உதவி இயக்குனராக திரைக்கதை ஆசிரியராக , அரங்க வடிவமைப்பாளராக , சப்த ஒழுங்கமைப்பாளராக என கிடைக்கும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இத்தோடு தனியாக நாடகங்களை எழுதி இயக்கவும் செய்தார். பிரெக்ட் அவரை மிகவும் பாத்திருந்தார். அக்காலத்தில் ஐரோப்பவை ஆக்ரமித்திருந்த இருத்தலியல் குறித்த தத்துவ விவாதம் அவரை மிகவும் பாதித்த்து. தொடர்ந்து அது நாடகம் மட்டுமல்லாமல் அவரது படங்கள் அனைத்திலும் மிகபெரிய தாக்கத்தை உண்டாக்கியிருந்த்து.
பின் தான் முதலில் எழுதிய parlell நாடகத்தை அப்படியே 8 எம் எம் சினிமாவாக எடுத்து அதைக்கொண்டே பெர்லின் சினிமா கல்லூரிக்குள்ளும் நுழைந்தார். .
தன் 1965 ல் 21ம் வயதில் திஸ் நைட் எனும் குறும்படத்துடன் துவங்கிய அவரது வாழ்வு 1982 ல் 37ம் வயதிலேயே இறக்கும் வரை 40திரைப்படங்களை இந்த உலகிற்கு கொடுத்து அத்துனை இளம் வயதிலேயே முடிவை எழுதிக்கொண்ட்து.
இந்த நாற்பது திரைப்படங்களில் முதல் மூன்று குறும்படங்களுக்கு பிறகு 1969ல் அவர் இயக்கிய முதல் முழு நீள படம் ”லவ் ஈஸ் கோல்டர் தேன் டெத் (LOVE IS COLDER THAN DEATH)“. இப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் தோல்விப்படமாக அமைந்தது. வெறுமனே கேங்க்ஸ்டர் படமாக அல்லாமல் அதை வடிவரீதியாக பரிசோத்னை அணுகுமுறையுடன் படமாக்கிய விதம் அவர்மேல் குறைந்த வெளிச்சத்தை விழச்செய்த்து.
இந்த முதல் படம் முதல் 1974ல் அவர் இயக்கத்தில் வெளியான நோரா ஹெல்மர் (NORA HELMAER)வரையிலான முதல் பதினெட்டு திரைப்படங்களில் அவருக்குள் ஒரு அவசரமும் கட்டயாமும் இருப்பதை காண முடியும் . காரணம் அவர் வெகுகுறைவான பட்ஜெட்டில் துரிதமாக படமெடுப்பதை சவாலாக மேற்கொண்டிருந்தார். பெரும்பாலான படங்களில் அவரே படத்தின் அனைத்து காரியங்களையும் செய்தார். பண உதவி செய்யும் அரசாங்கத்திற்கு நஷ்டம் வராமல் எடுத்த காரணத்தால் அவர்களின் பாராட்டை தொடர்ந்து தக்க வைக்க வேண்டிய அவசரம் தரம் பற்றிய அவரது கவலையின்மைக்கு காரணமாக அமைந்தது. இன்னொரு பக்கம் பிரெஞ்சு நியுவேவ் படங்கள் குறிப்பாக கோதார்த்தின் படங்கள் அவருக்குள் பெரிதும் பாதிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தன. ப்ரெக்ட் டின் நாடகங்கள் மட்டுமல்லாமல் அவர் இங்கமர் பெர்க்மன் , மைக்கேல் ஏஞ்சலோ ,ஆண்டோனியோனி மற்றும் பெலினி போன்ற இயக்குனர்களின் அழுத்தமான பார்வைகள் வேறு அவருக்குள் தீவிரமாக வேலை செய்த்து.
இவற்றின் பலனாக 1974ல் அவர் எழுதி இயக்கிய (ALI FEAR EATS THE SOUL)அலி : பியர் ஈட்ஸ் தி சவுல் எல்லைகளை கடந்து உலக சினிமா ரசிகர்கள் முன்பு கொண்டு நிறுத்தியது. அந்த வருடம் பிரான்சின் கேன்னஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களுக்கான சிறந்த பட விருதை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த்து.
64 வயதான தனிமையில் வாடும் ஜெர்மன் பெண் எம்மி 30 வயது கட்டுமஸ்தான் மொராக்கோ இளைஞன் அலியை ஒரு மது விடுதியில் சந்திக்கிறாள்.மகன் மகளால் கைவிடப்பட்ட அவளது தனிமையின் துயரத்தோடு அலியின் விரல்கள கைகோர்க்க அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நடனமாட துவங்குகிறது..தொடர்ந்து அலியை அவள் தன் அபார்ட்மண்ட்டுக்குள் அழைத்துவரத் துவங்க அக்கம் பக்கம் கண்களில் உஷ்ணம் .இதற்கு தீர்வாக அலியை எம்மி திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். அதற்கு மகன் மருமகள் ஆகியோரிடமிருந்து கடும் எதிர்ப்பு. அலியின் உடற்கட்டின் மேல் உன் அம்மாவுக்கு இந்த வயதில் காமத்தை பார் , என மருமகள் திட்டுகிறாள். ஆனாலும் எதிர்ப்பை மீறி எம்மி அலியை கைப்பிடிக்கிறாள். இருவரும் ஒன்றாக வாழத்துவங்க இருவரது கலாச்சாரமும் ஒத்துபோக துவக்கத்தில் மறுக்க இருவரும் எப்படி அதை கடக்கிறார்கள் என்பது மீதி திரைக்கதை. அவர் எடுத்த படங்களிலேயே மிகவும் குறைந்த பட்ஜெட் படம் இது. மொத்த படப்பிடிப்பும் 15 நாளில் முடித்து அனைவரையும் ஆச்சர்யபடவைத்தார். இத்தனை பெருமையை இப்படம் கொண்டிருந்தாலும் தங்களது ஜெர்மானியத்தன்னமையை விட்டுக்கொடுக்காத ஜெர்மானியர்களின் ஈகோ இந்தப்படத்தை ஏற்கவில்லை வெறுத்தனர். உள்ளூரில் விலை போகாதவர் என ஜெர்மானிய பத்திரிக்கைகள் அவரது திரைப்பட விழா அங்கீகாரத்தை கேலி செய்தன.
மேலும் அவரது படங்கள் அனைத்துமே சமூக அமைப்புக்கு எதிராகவும் கேள்வி கேட்பதாகவும் இருந்தன. பெரும்பாலான திரைப்படங்கள் ஓரினசேர்க்கையை மையமாக மொண்டிருந்தன . மட்டுமல்லாமல் இனவெறி , அரசின் வன்முறை ,தீவிரவாதம் என கடுமையான விமர்சன பார்வைகளை கொண்டிருந்த்தால் ஜெர்மானியர் இவரை சிறந்த இயக்குனராக அங்கீகரிக்க மறுத்தனர். ஆனால் அதே சமயம் வின்சண்ட் கேன்பி எனும் விமர்சகர் கோதார்த்துக்கு பிறகு உண்மையை பேசும் உலக சினிமாவின் சிறந்த இயக்குனர் என வானளாவ புகழ்ந்தார்.
பாஸ் பைண்டரின் தொடர்ந்த படங்களில் Fox and his Friends (1974), WChinese Roulette (1976,) Women in New York (1977,) Berlin Alexanderplatz (1979-80) Lola (1981, ) Querelle (1982, )
ஆகிய திரைப்ப்டங்கள் மிகவும் குறிப்பிட்த்தக்க படங்களாக அமைந்த்ன.
இவற்றூள் பெர்லின் அலெக்ஸாண்டர் திரைப்படம் தொலைக்காட்சிகாக எடுக்கப்பட்டதாக இருந்தாலும் பிற்பாடு 15 மணிநேர படமாக திரையரங்கிலும் வெளியிடப்பட்டது. இப்படம் நியூயார்க்கில் ரிலீசான போது மூன்று இரவுகள் தொடர்ந்து பார்வையாளர்கள் வந்து திரைப்படத்தை கண்டு களித்தனர்.
வாழ்ந்த 37 வருட்த்துக்குள் மூன்று திருமணங்களைகடந்த இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது பட்த்தை போலவே மிகவும் கொபம் கொந்தளிப்பு பிரிவு துக்கம் என பலவேறு உணர்ச்சிகளை உள்ளடக்கியது.
அவரது இறுதி திரைப்ப்டமான கொரில்லா படப்பிடிப்பு நடக்கும்போதே
ரோசா ல்க்ஸம்பர்க் பற்றிய அடுத்த படத்துக்கான திரைக்கதையில் ஈடுபட்டு அத்ற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கும் போது ஜூலியன் என்ற பெண் அவரை சந்திக்க காலையில் அபார்ட்ன்மண்டுக்குள் வந்தாள் திறந்த கதவு வழியாக அவள் அபார்ட்மண்டுக்குள் நுழைந்து படுக்கையறைக்குள் நுழைந்தபோது பாஸ் பைண்டர் கீழே இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார். உதட்டுக்கிடையில் சிகரட் புகைந்துகிடக்க கடைவாயில் ஒழுகிய ரத்தம் அவர் மாராடைப்பால் இறந்து போனதை அறிவுறுத்தியது.
நன்றி : அஜயன் பாலா எழுதி நாதன் பதிப்பக வெளியீடாக வந்த உலக சினிமா வரலாறு நவீன யுகம் பாகம் -3 நூலிலிருந்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *