தாண்டவராயன்- என் முதல் சிறுகதை

(1994 விருட்சம் இதழில் வெளியான என் முதல் சிறுகதை இது – )

கடைசியில் மட்டும் சற்று கோணலாக குடைக்கம்பி போல் வளைந்திருக்கும் நெருக்கிக் கோர்த்தார்போல வீடுகள். பாதிக்குமேல் குடிசைகளேயானாலும் முறுக்கித் தெறிக்கும் கம்பிரம். இவையெல்லாம் தாண்டவராயன் தெருவிறகான தனித்துவங்கள் ஆனாலும் அங்கே எப்போதும் நிலவும் தாளஅசைவோடொத்த சில சப்தங்களும் ,கமழும் விதவிதமான வாசனைகளும் வீதிப் புழுதியில் புதியவன் பாதமிறங்கு முன்பே ஆளை கிறங்கடிக்கும். விழிகள் மலங்க ஆச்சர்யபடுதும். அதற்காகவே அத்தெரு வழியே வீணே சுற்றித்திரிவர் அனேகம் .இதனால்தானோ என்னவோ அவர்களிடம் தனித்தொரு கர்வம் மிகுந்திருந்தது. தங்களை ஒவ்வொருவரும் தாண்டராயன் எனவே விளித்துக் கொள்வர்.
வழககமாக மணி ஐந்தரைக்கு ஆறரைக்கும் இடையிலான நேரத்தில்தான் சூர்ய கிரணங்கள் மண் துகளை ‘சோதிக்கத் துவங்கும். இருட்டு நிழல்களாய் ரூபம் பெற்று காட்சிகள் யாவும் மெல்ல வண்ணமுறும். ஆச்சர்யம்! அன்று நேரம் ஆறரையைக் கடந்தும் இருட்டு விலகவில்லை. அடிவானத்திலும் அதற்கான அறிகுறி இல்லை. ஆரம்பத்தில் இதை பெரிது பண்ணாமல் அவரவர் தம் காலை கடன்களை துவக்கிவிட்டிருந்தனர். நேரம் ஆக ஆக வெளிச்சம் வராதது குறித்து அவர்களுக்குள் ஏகப்பட்ட ஆச்சர்யமும் குழப்பமும். ஸ்திரீக்கள் ,தூங்கும் புருஷர்களின் காதில் கிசுகிசுத்தனர். புருஷர்கள் கடிகாரமும் கையுமாய் அரைத்தூக்கத்தில் எரிச்சலுடன் வாசலுக்கு வந்தமர இருட்டு எக்ஸிபிஷனானது.
இருட்டு தன் காலில் கட்டை விரல் மடித்து காலத்தை எட்டி உதைத்தது கடிகாரத்தின் வினாடி முள் மட்டும் ஏழினை கடந்து இரண்டு முறை அசைந்துவிட்டது காலண்டர் படபடத்தது கயிறறுந்து கீழே வீழ இதுநாள் வரை ஞாயிறிலும் திங்களிலும் கொக்கியிட்டு தொங்கியவர்களுக்கு குழப்பமோ குழப்பம் பெருங்குழப்பம். இவர்களின் கோபத்தில் இரண்டொரு கடிகாரங்களும் சுக்கல் சுக்கலாயின. தத்தம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு நான்கு வீட்டிற்கொன்றாய் கும்பல்கள் ஆங்காங்கே முளைத்தன. அவர்களின் பார்வை அடிவானத்தைக் குதறி சிவப்பு காணத்துடித்தது. ஆனாலும் இருட்டு சற்றும் தளர்வதாய் தெரியவில்லை. ஒரு வைராக்கியத்தோடு மேலும் மேலும் என இறுக்கி கிடந்தது. பீதி பரவிட விழிகள் பிதுங்கி ஆச்சர்யம் துக்கம் ,குழப்பம் , கேள்வி ,கேள்விகள் கேள்வியை குடையை நிலவரம் கலவரமானது.
உதறலெடுக்கும் குரலில் மிகமிக மெதுவாக பேசிக்கொண்டனர்.கூடுமானவரை அவர்கள் சத்தம் இல்லாமல், அப்படியாகச் சத்தம் செய்வது யாருக்கோ எதற்கோ கோபமுட்டிவிடும் பாவனையில் ரகசியமாய் பேசிக்கொண்டனர்.
அவர்களுள் ஒரு பயம். இந்த இருட்டுடன் தாண்டவராயர்களின் இறுதி மூச்சு நிற்க்கப்போவது போன்றதொரு பயம் . ஒரு வயதான கிழவரின் குரல் மட்டும் சற்று சத்தமாகக் கேட்டது. தன் தாத்தா பிறப்பதற்க்கு முன் இதுபோல் ஒரு முறை நிகழ்ந்ததாகவும் ஆனால் இருட்டு எட்டு மணிக்கெல்லாம் விலகிவிட்டதாகவும் சொன்னார்.
இபோது பெண்களும் சின்ன சின்ன கும்பல்கள் போடலாயினர். இருட்டில் மெல்லத் தடவிப் பேசி கண்ணாடி வளையல்கள் சப்திக்க மெலிதாகச் சிரித்தனர், அவர்களுக்கு இருட்டின் சுரனை இன்னும் உரைக்கவில்லை.
தபதபவென யாரோ ஒடிவரும் சத்தம். வந்த திசை நோக்கி இருட்டில் அத்தனை பார்வையும் சுழல ஒடிவந்தவன் நிதானித்து பின் ’ஒ’வென குரலெடுத்தான். .குரலின் விஷயம் நொடியில் சூழலைச் சூடுபடுத்தி பரபரப்பாகிவிட்டது. அதுவரை அமைதியாக இருந்த தெரு முழுக்க ஒலக்குரல்கள்,ஆட்டிற்கு ஆடு அலறிட தெருவெங்கும் மரண ஒலம்.
அவன் குரலின் விஷயம் இதுதான்.தாண்டவராயன் தெருவிற்கு மட்டுமே இத்தகைய மோசமான நிலையென்றும் மற்ற தெருக்களெங்கும் வழக்கம்போல விடியல் நிகழ்ந்து வெளிச்சம் பரவிக்கிடப்பதாகவும் தெரிவித்தான்.
சற்றே வயதான பெண்மணிகள் “ அய்யோ “ என்றலறி வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக் கொண்டனர். துக்கம், கோபம், வெறி, மூர்க்கம் யாவும் ஒன்றெனத் திரண்டு அடித்தொண்டையைத் தாக்க சிதறிய கசிவுகள் உரத்த குரல்களாகி அகண்டத்தை அதிரவைத்தன. நரம்புகள் அறுபட உடலை முறுக்கி முஷ்டியை உயர்த்தி அடிவானம் நோக்கி கூச்சலிட்டனர்.
இருட்டு அசையவில்லை. அடுத்த கணம் சிதறிக் கிடந்த கும்பல்கள் யாவும் ஒரிடம் நோக்கி அவசரமாகக் கூடினர். அனல் தெறிக்கப் பேசினர். இரண்டொருவர் தேம்பித் தேம்பி அழுதனர். மூச்சு முட்ட இன்னும் சில கணப்பொழுதுகளில் தாங்கள் அனைவரும் இறக்கபோவது போன்ற பயம் பரவ அடுத்து என்ன செய்வதென்றறியாது குழம்பி கிடந்தனர்.
நாம் உணர்ச்சிகளை மூட்டை கட்டி ஒரம் போட்டுவிட்டு ஆகவேண்டிய காரியம் பற்றி சிந்தித்தாகவேண்டும்.
”யாரும் பயப்படத் தேவையில்லை.இயற்கையின் மரபு மீறல்கள் இப்போதெல்லாம் மிகச்சாதாரணமாகிப் போன விஷயம். இதில் பயப்பட ஒன்றுமில்லை. தாண்டவராயர்களை எக்காலத்திலும் எவராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நாம் அதிர்ச்சியுறவோ ஆவேசப்படவோ இந்த இருட்டில் எதுவும் இல்லை. ஒன்று மட்டும் உறுதி. இந்த இருட்டினால் நமது உயிருக்கு ஆபதொன்றுமில்லை.இந்தக் கட்டதில்தான் நாம் நிதானிக்க வேண்டும். நாம் உணர்ச்சிகளை மூட்டை கட்டி ஒரம் போட்டுவிட்டு ஆகவேண்டிய காரியம் பற்றி சிந்தித்தாகவேண்டும்.
சற்றே வாய்ப்பிளந்து வானம் பார்த்தவாறு ஆழ்ந்து யோசிக்கிற தோரணையிலிருந்து அவனை கூட்டத்தினர் தெரிந்துகொண்டதும் மெல்ல விலகி அவனை சுற்றிவட்டத்தை அமைத்துக் கொண்டனர்.

இப்போது நம்முன் இருக்கு பிரச்சினை இருட்டு இருட்டைப்போக்க வெளிச்சம் வேண்டும். மாற்று வெளிச்சம்.இப்படியாக பேசியதோடு நில்லாமல் அவன் ஒருவனை அழைத்து கரண்ட் விளக்கு போடும் பண்டாரத்தை அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டான். பண்டாரம் எப்படி எப்போது அங்கு வந்தான் என யாருக்கும் தெரியவில்லை .பண்டாரத்தை எதிர்நொக்கி அவர்கள் காத்துக் கொண்டிருக்கிற போதே பண்டாரம் அங்கிருந்தான். ஒருவேளை பண்டாரத்தை அழைத்துவரச் சென்றவனே பண்டாரமாகி அங்கு நிற்கிறானோ என்பதாகவும் சிலர் சந்தேகித்தனர்.அவனது பேச்சில் அர்த்தமிருப்பத்தாக முணுமுணுத்த சிலர் அவன் சொல்வதை கவனமாக கேட்கத் தொடங்கினர்.. எல்லோருடைய பார்வையும் அவனது மூடிக்கிடந்த வாயிலே நிலைக்குத்தி கிடந்தது.அவனை ஒரு தெய்வம்போல் பாவித்த அவர்கள்,தங்களுக்கு வெள்ளிச்சம் ஈந்து அவன் நிகழ்த்தப் போகும் அற்புத நொடியைக் காண ஆவலுடன் காத்துக் கிடந்தனர்.
இப்படியே நாங்கள் எத்தனை நேரம்தான காத்திருப்பது .உங்களை நாங்கள் இப்போது கடவுளாகத்தான் காண்கிறோம். தாண்டவராயர்களின் மானமும் மரியாதையும் (முழுக்க) முழுக்க தங்கள் வசம்தான் இருக்கிறது .மாற்று வெளிச்சமான கரண்ட் விளக்குகளை எரிய வைத்து நமக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த அவமானத்தைத் தகர்தெரிய வேண்டும்.உடனே கரண்ட் விளக்குகளை எரியச் செய்யுங்கள்.
கூட்டத்தினர் அனைவரும் மிகுந்த பயத்துட்டன் கடவுளைப்போல் அவனை பாவித்து மெளனித்து நிற்க ,ஒருவன் மட்டும் துணிச்சலாக அவன் அருகே சென்று பொருத்தப்படாதிருந்த அவனது சட்டையின் மேல் பொத்தான்கள் இரண்டையும் பொருத்திவிட்டு திரும்பி வந்து பழைய நிலையில் பவ்யத்துக் கொண்டான்.
இப்படியே நாங்கள் எத்தனை நேரம்தான காத்திருப்பது .உங்களை நாங்கள் இப்போது கடவுளாகத்தான் காண்கிறோம். தாண்டவராயர்களின் மானமும் மரியாதையும் (முழுக்க) முழுக்க தங்கள் வசந்தான் இருக்கிறது .மாற்று வெளிச்சமான கரண்ட் விளக்குகளை எரிய வைத்து நமக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த அவமானத்தைத் தகர்தெரிய வேண்டும்.உடனே கரண்ட் விளக்குகளை எரியச் செய்யுங்கள்.
பண்டாரம் அவனை நோக்கித் திரும்பினான். பின் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
”இது இயற்கை சம்பந்தப்பட்ட விஷயம் .இதில் தலையிட எனக்கேதும் உரிமையில்லை. மேலும் எனக்கேதும் உரிமையில்லை மேலும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகளின்படி தினமும் காலை ஐந்து மணிவரைதான் கரண்ட் விளக்குகளை எரிய வைத்தல் வேண்டும். என்னால் இதனை மீற முடியாது.”

என்ன சொல்கிறீர் ! நீர் எங்களுக்கு கடவுளல்லவா !”
வார்த்தைகள் அகண்ட வெளியில் தெறித்தன பயத்தில் அலறினர். அவர்களின் கடைசி நம்பிக்கையும் இடிந்து நொறுங்குவதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மூச்சு முட்டி முட்டி சாவைத் தொட்டுவிடுவது போன்ற பயத்திலிருந்து தாண்டவராயார்கள் பண்டாரத்தை நெருங்கிச் சூழ்ந்தனர்.
பண்டாரம் சற்றே அவர்களிடமிருந்து விலகி முதுகைக் காண்பித்தவாறு திருபிக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.
உங்களது நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. இருட்டைக்காட்டிலும் மிகமிக மோசமான மாறுதல்கள் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உங்கள் மீதான பேரன்பின் உச்சத்திலிருப்பதால் ஒரு சில விஷயங்களை என்னால் மறைக்க முடியவில்லை.

சற்று நேரம் மெளனித்த பண்டாரம் பின் மீண்டும் “ஒன்று தெரியுமா, இங்கே இருட்டு இல்லை, வெளிச்சம் விரவிக்கிடக்கிறது .ஆனால் உங்களது கண்களிரண்டும் கட்கத்தின் மயிர்களுக்கிடையை புதைந்து கிடக்கின்றன . செவிகளிரண்டும் முதுகுப்புறத்திலும்,மூக்கு வலது முழங்கைக்கு சற்று மேலாகவும்,வாய் வயிற்றில் தொப்புளிருக்கும் இடத்திலும் மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றன. மொத்ததில் தலையெனும் சதைப் பிண்டமற்ற வெறும் முண்டங்களாகத்தான் இங்கே நீங்கள் நின்று கொண்டிருக்கிக்கிறிர்கள்.

இதை கேட்டதும் கிலி, கிலியென பீதி பரவிட தாண்டவராயர்கள் தத்தமது தலை இருந்த இடம் நோக்கி கைகளை உயரே வீசி தடவிப் பார்க்க விரல்கள் வெற்றிடத்தில் அலைந்து ஈரப் பிசுபிசுப்பை உணர்ந்தன. அதிர்ச்சியில் அவர்கள் “ஆ” வென்றலறிய போது அத்தனை பேரின் தொப்புள்களிலும் வாய் பிளந்தது .இவையனைத்தையும் காணாமல் திரும்பிகொண்டிருந்தப் பண்ட்டாரம் துக்கம் மேலிட மேலும் பேசிக்கொண்டேயிருந்தான். அவனது பேச்சின் சப்த்தம் பிரயோஜனமற்ற வெளியில் மெல்ல கரைந்தது கொண்டிருந்தது.

என்னால் உங்களை, உங்களின் இந்த மோசமான நிலையை எளிதில் மாற்றிவிட முடியும். என் வீட்டுத் தோட்டத்திலிருக்கும் நெட்டிலிங்க மரத்தடியிலிருந்து சில வார்த்தைகள் பேசினால் போதும் ,உடன் இந்தச் சூழல் நொடியில் மாற்றிய அமைக்கப்பட்டு விடும். உங்களது புலனுறுப்புகள் யாவும் சதைப்பிண்டத்தில் ஒட்டிக்கொள்ள கருத்த மயிர்களுடன் மீண்டும் தலை அதன் இடத்தில் தோன்றும். வெளிச்சப் பிரவாகத்துடன் மிண்டும் பழைய நிலைக்கு தோன்றும். வெளிச்சப் பிரவாகத்துடன் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவீர்கள். ஆனால் உணவு பற்றாக்குறையால் நீங்களனைவரும் இரண்டே நாட்களில் இறக்க நேரிடும் அபாயம் அதில் இருக்கிறது.
இது ஒரு தற்காலிக மாற்றமே .மீண்டும் உங்களுக்கு போதிய உணவு கிடைக்கிற வரை உங்களின் நிலை இப்படித்தான் இருந்த்தாக வேண்டும்.
பண்டாரம் துக்கம் தோய்ந்த குரலில் நொடிகொருதரம் மூக்கை உறிஞ்சுகிற சப்தத்துடன் ஒரு குழந்தையைப் போல் மிக மெதுவாக பேசிக் கொண்டேயிருந்தான். என்ன நினைத்தானோ சட்டென் அவர்களை நோக்கி திருப்பினான்.
எனக்கு இது முன்னமே தெரியும்.தெரிந்தாலும் இதை எப்படி உங்களிடம் சொல்வது, நீங்கள் இதை எப்படி எதிர்கொள்வீர்களோ என்கிற பயத்தில்தான் சொல்லாமல் விட்டேன். இது தான் நான் உங்களுக்கிழைத்த குற்றம் என சொல்லிக்கொண்டே தடால் என தரையில் விழுந்து கதறியழுதான்.

பின் வெகுநேரம் அழதவாறே ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான். ஆனால் தாண்டவராயர்கள் அனைவரும் எதையும் கேட்கிற நிலையில் இல்லை . அவர்கள் மெல்ல மெல்ல தீவிர சிந்த்னையில் மூழ்கிக் கொண்டிருந்தனர். காற்று மட்டும் வீசிக்கொண்டேயிருந்தது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *