சுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்

இன்று நடிகர் சங்க தேர்தலில் ஒரு அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் அணி.
ஆனால் பலருக்கு யார் இந்த சங்கரதாஸ் அவர் பழைய சினிமா நடிகரா அல்லது பங்காரு அடிகள் அல்லது காஞ்சி சங்கரச்சாரி போல இவரும் ஒரு சாமியாரா ?
இவருக்கும் சினிமாவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன தொடர்பு இதுதான் கேள்வி
உண்மையில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு கிடையாது. ஆனால் நடிப்புக் கலைக்கும் நாடக கலைக்கும் தமிழ் கலை வரலாறுக்கும் அவர்தான் பிதாமகன் என்றால் மிகையில்லை
அவரைப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன் தமிழ் நாடகத்தின் ஆரம்பகாலத்தை கொஞ்சம் பார்ப்போம்
கூத்துதான் 19 நூற்றாண்டின் தமிழர் கலை வடிவம் :
பாட்டு, கச்சேரி, பரதம் என சாஸ்திரிய கலைகளுடன் வில்லுப்பாட்டு , கூத்து, பாவைக்கூத்து, கணியன் கூத்து, குறவைக்கூத்து, பொம்மலாட்டம், காவடியாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, என பல்வேறு கலைகளை மட்டுமே பொழுது போக்காக கண்டு வந்த தமிழகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேடை நாடகம் எனும் அற்புத கலையை கண்டடைந்தது .
வெகு காலமாகவே இந்தியா முழுக்க பார்சி மற்றும் பாரசீக நாடகங்கள் ஒரு ஈர்ப்பை உருவாக்கின.
அதன் பின் புலம் மற்றும் கண்ணை பறிக்கும் உடையலங்காரம் ஆகியவை உண்டாக்கிய பாதிப்பில் மராத்தி, பாவகீத நாடக குழுக்கள் பல தென்னிந்திய நகரங்களில் அவ்வபோது முகாமிட்டு நாடகங்களை நடத்தி வந்தன . அதன் பாதிப்பில் உருவாக்கம் கண்டது தமிழ் நாடகங்கள்.
அதுவரை கூத்துகளாவே கிராமங்களில் இரவு முழுக்க வெட்ட வெளியில் மண் தரையில் உட்கார்ந்து பார்த்து வந்த மக்கள், நாற்புறம் மறைக்கப்பட்ட அரங்கத்தினுள் நாற்காலியில் அமர்ந்து பார்த்தபோது தாங்கள் தகுதி உயர்த்தப்பட்டதாக மகிழ்ந்தனர். அரிச்சந்திரன், சத்தியவான் சாவித்ரி,வள்ளித்திருமணம், இரணியன் வதம் போன்ற புராண பாத்திரங்கள் பாடுவதையும் ஆடுவதையும் நிறுத்தி வசனங்கள் பேசத்துவங்கிய போது . மெய் மறந்து ரசிக்க துவங்கினர். இந்த நாடக உலகை வளர்த்த அதன் ஆரம்ப கால முக்கிய தூண்கள் இரண்டுபேர் அவர்கள்
20ம் நூற்றாண்டின் தமிழ் கலச்சார மரபுக்கு வித்திட்ட அந்த மகான்கள் சங்கரதாஸ் சுவாமிகள் மற்றும் பம்மல் சம்மந்த முதலியார்.
இவர்கள் இருவரைத்தொடர்ந்து தமிழ் நாடக மேடைக்கு வசீகரத்தையும் பெரும் ரசிகர்களையும் தன் கந்தர்வக்குரலாலும் நடிப்பாலும் உருவாக்கிக்கொண்ட மகத்தான கலைஞர் எஸ்.ஜி.கிட்டப்பா
சங்கர தாஸ் சுவாமிகள்
தமிழகம் முழுக்க இந்த நாடக கலையை பரவாலக்கியதில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இவர் தான் கூத்தை நாடகவடிவமாக தமிழுக்கு மாற்றி தந்த முதல் கலைஞர்.
22-05-1867ம் ஆண்டில் தூத்துக்குடி காட்டுநாயக்கன் பட்டி கிராமத்தில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் சிறுவயதிலிருந்தே தந்தையிடம் இராமாயாணம் கற்று தேர்ந்தார். அவர் தந்தை தாமோதர பண்டிதர், ஒரு தலைசிறந்த இராமயண காத காலட்சேபம் செய்பவராக இருந்த காரணத்தால் அவர் கதா காலஏட்சபங்களுக்கு கூட்டம் அதிகமாக கூடியது .
தந்தையை போல இவரும் இராமாயண கதை சொல்ல ஆர்வம் காட்ட தந்தை முதலில் தமிழை இலக்கண சுத்தமாக கற்றுக்கொள், என அறிவுறுத்தி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் மாணவராக தமிழை படிக்க சேர்த்து விட்டார்.
அது போலவே தமிழை இலக்கண சுத்தமாக பயின்ற சங்கரதாஸ் சாமிகள் கவி புனையும் ஆற்றலையும் கைவரப்பெற்றார். இவரது இந்த ஆற்றலை கண்டு வியந்த இராமுடு ஐயர் மற்றும் கல்யாண ஐயர் ஆகியோர் தங்கள் போடவிருந்த நாடகத்தில் அவரையும் சேர்த்துக்கொள்ள நாடக கலையின் மீதான ஆர்வம் அவருக்குள் நெய்யூற்றிய நெருப்பாய் சரசர வென தீப்பற்றிக்கொண்டது.
ஆனால் அப்போது நாடகம் அவ்வளவாக பரவாத காலம் . காரணம் நாடகத்திற்கான திரைக்கதை வடிவம் எதுவும் எழுத்து பூர்வமாக இல்லை.
தமிழில் அப்போது கூத்தாக நடைபெற்று வந்த வள்ளி திருமணம் , அரிச்சந்திரன், இரணியவதம் போன்ற கதைகள் எல்லாமே கர்ண பரம்பரை வாய்மொழி கதைகளாக மட்டுமே இருந்து வந்தன.
இச்சூழலில் தான் அதுவரை கேட்டறிந்த கதைகளை நாடக பிரதிகளாக மாற்றி அவர் செய்த சாதனை தமிழ் நாடகதுறைக்கு ஓர் அழுத்தமான அடித்தளத்தை உருவாக்கி தந்தது.
அன்று அவர் போட்ட பாதைதான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாடக உலகை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொடி கட்டி பறக்க வைத்தது. மட்டுமல்லாமல் மலாயா, சிங்கப்பூர் பர்மா, சிலோன் என தமிழர் வாழும் பகுதியெல்லாம் சென்று நாடக தமிழை வளரசெய்தது. கடும் உழைப்பாளியான சங்கரதாஸ் சுவாமிகள். ஒரே இரவில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஒரு முழு நாடகத்துக்கான திரைக்கதையை வசனங்கள் ,பாடல்களுடன் இதர குறிப்புகளையும் எழுதி முடிக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்.
இயல்பில் முரட்டுதோற்றம் கொண்டவராதாலால் புராணங்களில் எமன் சனீஸ்வரன் போன்ற முரட்டு பாத்திரங்களை மைய பாத்திரங்களாக்கி நாடகங்களை புனைந்து கொண்டார். கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதிய சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்தில் சுய ஒழுக்கம் மற்றும் முறையான உடற் பயிற்சிகளை நெறிப்படுத்தினார்.
1910ல் சமரச சுத்த சன்மார்க்க நாடகசபாவை துவக்கினார்.
அதுவரை சமூகத்தில் கூத்தாடிகள் என அழைக்கப்பட்டு வந்தவர்களை ராஜா பார்ட் , ஸ்த்ரீ பார்ட் , என மரியாதையாக அழைக்கும்படியான மதிப்பீட்டை உருவாக்கினார் .
காயாத கானகத்தே.. .. ஞானப்பழத்தை பிழிந்து .. போன்ற காலத்தால் அழியா பாடல்கள் இவரால்தான் இயற்றப்பட்டன.
நாடக கலைஞர்களிடையே இருந்த ஒழுங்கீனங்கள் அவருக்கு பிடிக்கவில்லை . வளர்ந்த நடிகர்களை அவரால் தன் கைக்குள் கொண்டுவர முடியவில்லை,
இவர் உருவாக்கிய நெறிமுறைகள் தான் பிற்பாடு பல நாடக கம்பெனிகள் நடிகர்களை மாத சம்பளத்தில் ஒப்பந்தம் செய்து, அவர்களை குருகுலம் போல ஓரிடத்தில் தங்க வைத்து பயிற்சிகளை ,மேற்கொள்ள வைத்து ஒரு முறைமையை பின்பற்ற நெறிகளை உருவாக்கி தந்தது.
கட்டுக்கோப்பும் ஒழுக்கமும் நேரம் தவறாமையும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் மட்டுமே தான் இயற்றும் புராண நாடகங்களில் ஒருவன் நடிக்க முடியும் என கருதிய சங்கரதாஸ் சுவாமிகள் கையோடு மதுரை தத்துவ மீனோலசனி வித்துவ பாலசபை என்ற புதிய நாடக சபாவை துவக்கினார் . இந்த பால சபாக்கள் தான் பாய்ஸ் கம்பெனி என அழைக்கப்பட்டது.
அக்காலத்தில் நாடகங்களில் பெண் வேஷம் கட்ட ஆள் இல்லாத காரணத்தால் ஆண்களே பெண் வேஷமும் கட்டினர்.
இந்த ஸ்த்ரீ பார்ட்டில் இருவர் புகழ்பெற்று விளங்கினர்,
ஒருவர் வள்ளி வேடத்தில் புகழ்பெற்று விளங்கிய வள்ளி வைத்திய நாதய்யர்,
இன்னொருவர் அல்லி வேடத்தில் புகழ்பெற்ற அல்லி பரமேஸ்வரய்யர்.
இந்த இருவருக்குமென பிரத்யோகமாக பல ரசிகர்கள் இருந்தனர்.
இவர்களுக்கு அடுத்ததாக இந்த ஸ்த்ரீ பார்ட்டில் பெயரெடுத்தவர் டி.திருவனந்தபுரம் கண்ணுசாமிப்பிள்ளை
இந்த கண்ணுசாமிப்பிள்ளைக்கு நான்கு பையன்கள்
டி.கே .சங்கரன்,டி. கே. முத்துசாமி,டி.கே. சண்முகம்,டி. கே.பகவதி ஆகியோர் .
தன் பிள்ளைகளை நாடகத்தில் சேர்த்து கலைத்தாய்க்கு அர்ப்பணிக்க விரும்பிய கண்ணுசாமிப்பிள்ளை அவர்களை சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனோலசனி வித்துவ பால சபா எனும் பாய்ஸ் கம்பெனிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டார்.
அக்காலத்தில் சென்னையில் பல பாய்ஸ் கம்பனிகள் இருந்தன.
ஒரு கம்பனியில் திறமையான சிறுவர்கள் இருந்தால், அவர்களை இன்னொரு பாய்ஸ் கம்பெனி கடத்திக்கொண்டு அதிக சம்பளம் கொடுத்து பணியமர்த்துவது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.
சங்கரதாஸ் தன் பாய்ஸ் கம்பெனியை அழைத்துக்கொண்டு சைதாப்பேட்டையில் தங்கி நாடகங்கள் போட்டுகொண்டிருந்தபோது,
டி.கே.சகோதரர்களின் திறமையை பார்த்த தொ. ப கிருஷ்ணசாமி பாவலர் தன் பாய்ஸ் கமபெனிக்கு தந்தையான கண்ணுசாமி பிள்ளையுடன் கடத்திக்கொண்டு போனார்.
இந்த தொ.ப.கிருஷ்ணசாமி பாவலர் யார் என்றால் மதுரை பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவரும் நாடு போற்றிய தமிழறிஞருமான தொ.ப. மீனாட்சிசுந்தரம் அவர்களின் மூத்த சகோதரர்.
பிற்பாடு டி.கே.எஸ் சகோதரர்களின் அம்மையார் சீதையம்மாள் அறிவுறுத்தியதன் பேரில் சகோதரர்கள் மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகளிடமே வந்து சேர்ந்தது வரலாறு.
இந்த நால்வரில் ஒருவரான டி கே சண்முகம்தான் அவ்வையார் வேடம் போட்டு அனைவரையும் கவர்ந்த காரணத்தால் அவ்வை சண்முகம் என பெயர் பெற்றார்.
சங்கரதாஸ் சுவாமிகள் எமன் வேடம் போட்டால் எமனே நேரில் வந்தது போல பலரும் கதி கலங்கி அலறுவர் . ஒருமுறை பார்வையாளரில் இருந்த கர்ப்பிணி பெண் இவரது எமன் வேடத்தை கண்டு அலறி, கர்ப்பம் கலைந்து மயக்க முற்றார்.
அது முதல் அவர் எமன் வேடத்தின் மேடையில் தோன்றுவதற்கு முன்பாக பார்வையாளர்களில் யாரேனும் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் எழுந்து வெளியே சென்றிவிடும்படி ஒருவர் அறிவிப்பு செய்து எச்சரித்து அவர்களை வெளியேற்றியபின்தான் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் தோன்றுவார் .
ஒரு நாள் கோவில் பட்டி நாளாட்டின் புதூரில் நள தமயந்தி நாடகத்திற்காக உடல் முழுக்க கரிபூசிய நிலையில் சனிபகவான் வேடம் போட்டிருந்த அவர் அதே தோற்றத்தில் நாடக கொட்டகையின் பின்புறம் சிறுநீர்கழிக்க செல்ல இருட்டில் அத்தோற்றத்துடன் அவரை பார்த்த பெண் அதே இடத்தில் உயிரைவிட்டாள்.
தன்னுடைய கலை இப்படி அப்பாவி பெண்ணின் உயிரை பறித்துவிட்டதே என மனம் வெதும்பிய சுவாமிகள் பின் நாடகத்தை விட்டு சாமியார் கோலம் பூண்டு தமிழ் நாடு முழுக்க கோயில் கோயிலாக திரிந்தார் . பிற்பாடு கயா காசி என சுற்றி இலங்கை கண்டி கதிர் காமம் என சுற்றி திரிந்தார் 13-11-1922ல் மறைந்தார்.

விரைவில் வெளிவரவிருக்கும் தமிழ் சினிமா வரலாறு (1915-1947) நூலிலிருந்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *