டூலெட்டைத் தொடர்ந்து ஞானச்செருக்கு – அஜயன் பாலா

மாறும் தமிழ் ரசனை – தலையெடுக்கும் தன்னாட்சி சினிமாக்கள்

              புகழ்பெற்ற சினிமா கோட்பாடு எனும் நூலை எழுதிய பேலபெலாஸ் எனும் அறிஞர் இப்படித்தான் சொல்கிறார் ” என்னதான் சினிமா தரமாக எடுத்தாலும் மக்களின் ரசனை மாறினால்தான் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் “
இது நம் தமிழ் சினிமாவுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தக்கூடிய உண்மை. நானும் கடந்த இருபது வருட காலமாக தமிழ் சினிமாவுக்கும் உலக சினிமாவுக்குமான இந்த பார தூர இடைவெளி குறித்து பலமுறை யோசித்துவிட்டேன். அட ஐரோப்பிய நாடுகள் வேணாம்… குட்டி நாடுகளான ஈரான், கொரியா, திபெத் ஏன் இலங்கையிலிருந்து கூட உலக அங்கீகாரம் பெற்ற சினிமாக்கள் உருவாக்கப்படும்போது தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்த தடை… எது இங்கே உலக சினிமாக்கள் உருவாகாமல் தடுக்கிறது. இரண்டாயிர வருட இலக்கிய பெருமை உள்ள மொழி, இசை, சிற்பம் மற்றும் கட்டிடக்கலையிலும் பெரும் உச்சம் கொண்ட ஒரு சமூகம் ஏன் சினிமாவில் மட்டும் உலக ரசனையில் ஒத்துப்போகாமல் விலகி இருக்கிறது என யோசித்துள்ளேன்.

ஹீரோயிசம் தான்

உலகம் முழுக்க இரண்டுவித்மான கதை சொல்லல்தான் இருக்கிறது
ஒன்று இராமாயணம் இன்னொன்று மகாபரதம்
நம்மூரை பொறுத்தவரை ஹீரோயிச துதி பாடும் ராமாயண பாணி சினிமாக்கள்தான் அதிகம்

நடுகல் வைத்து வழிபட்ட சமூகம் அல்லவா அதன் தொடர்ச்சியாக ஹீரோக்களை கைதட்டி வரவேற்பதில் ஆபத்பாந்த்வன் அனாதரட்சகர்களை எதிர்பார்த்து காத்திருப்பதிலும் ஒரு சுவை பிடிபட்டு பாகவதர் காலம் தொட்டு சிம்பு தனுஷ் வரை அவர்களுக்கு குடை பிடித்து கொணடாடி போஸ்டர் ஒட்டி பாலூற்றி வழிபடுகிறது
நம், சினிமாக்கள் கடைத்தேறாமல் போனதற்கு முக்கிய காரனம் இந்த நாயகபிம்பங்கள் தான்

உலக சினிமா அல்லது கலை சினிமா இந்த பிம்ப கட்டமைவை மறுக்கிறது அவன் முகத்தை காட்டாமால் அவன் முதுகுக்குப்பின் பயணிக்கிறது . அவன் எலும்பைகடிப்பதை காட்டாமல் அவன் எங்கே துப்புகிறான் என்பதை விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது . காட்சிகள் மூலம் வெறியூட்டி அடிமைப்படுத்தாமல் அவனை உணரவைக்கிறது. படைப்பு ரீதியாக வழக்கமான உணர்ச்சியை தூண்டும் திரைக்கதை கட்டமைப்பை தவிர்த்த புதிய காட்சி அனுபவத்தை உருவாக்க பிரயத்தனப்படுகிறது

இப்படியாக தமிழ் சினிமாவில் சில அத்திபூத்த அதிசயங்கள் சமீபமாக பிம்ப வழிபாட்டை மறுதலித்து உருவாக்கம் பெற்று அவை மக்கள் மத்தியில் வெற்றியும் பெற்று வருகின்றன.
வெற்றி மாறனின் விசாரணை.
குற்றங்களை தடுக்கவேண்டிய காவல் நிலையங்களில் இழைக்கப்படும் அதிகார வர்க்கத்தின் குற்ற நிழல்களை காட்சியாக கூறி அதிர வைத்தது.
அதுவரை கைக்கெட்டா கனியாக இருந்த உலக சினிமா என்ற கனவை முதலில் தொட்டுப்பறித்து தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டிய திரைப்படம் விசாராணை.

வெனிஸ் திரைப்படவிழாவில் மனித உரிமைகளுக்கான பிரிவில் சிறந்த பரிசைப் பெற்ற இப்படம். உலக சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு அ போட்ட முதல் திரைப்படம். . அதே சமயம் இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் அழுத்தமான காட்சிகளின் வழியாக பார்வையாளனுக்குள் இருண்ட உலகையும் அதன் பயங்க்ரத்தையும் பார்வையாலனுக்குள் உருவாக்கியதில் இப் படம் மிகப்பெரிய வெற்றி .இதுவே இதன் உலகத்தரத்துக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

உலக சினிமா அரங்கில் இதன் தொடர்ச்சியாக டூலெட் இன்று அடுத்த பாய்ச்சலை செய்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்று முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கு தேர்வாகி கிட்டதட்ட இருபது விருதுகளை அள்ளிகுவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை இப்படியான அதிசயம் நடந்ததில்லை. மட்டுமல்லாமல் சமீபமாக வெளியாகி திரையரங்கிலும் இது ஓரளவு வெற்றிபெற்றுள்ளது என்பதுதான் நாம் அனைவரும் கவனிக்க வேண்டியது.பிம்பங்களைத்தவிர்த்த காட்சி மொழி விவரணை மற்றும்ஒலிப்பதிவின் கலாபூர்வம் ஆகியவை இதற்கு உலக சினிமா அங்கீகாரத்தை உருவாக்கித் தந்தன

இது உடனே நேரடியாக நடந்துவிட்டதாக கருத முடியாது. விசாரணைக்கும் டூலெட்டுக்கும் இடையில் வந்த தமிழின் மூன்று முக்கிய சினிமாக்கள் தமிழர்களின் ரசனையை பெரிதும் மாற்றியுள்ளது.

அதில் முதலாவது படம் ஜோக்கர். தமிழ் சினிமாவின் ரசனையை மாற்றிய மிக முக்கியமான திரைப்படம். ஒரு அரைப் பைத்தியம் என கருதக்கூடிய பாத்திரத்தை மையமாக வைத்துக் கொண்டு சமூக பிரச்சனைகளை சாட்டையடியாக பேசிய இப்படம் பராசக்திக்கு பிறகு நிகழ்ந்த தமிழின் முக்கிய சினிமா. சீரான திரைக்கதை நேர்த்தியான காட்சிமொழி என பல விஷயங்களில் ஜோக்கர் தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வு. ஆனால் இது திரைக்கதையின் நகர்வை மட்டுமே நம்பி காட்சிவழி நகர்த்தலை பின்னாள் தள்ளியிருந்தது

அடுத்து கடந்த வருடம் வந்த மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் இரண்டும் தமிழ் சினிமாவின் முக்கிய திருப்பம்.
இதில் மேற்கு தொடர்ச்சி மலை தமிழ் சினிமாவில் புதிய ரசனை மாற்றத்தை உரத்துச் சொன்ன படம். வழக்கமான பொழுதுபோக்கு சினிமாக்களால் மழுங்கடிக்கப்பட்ட பார்வையாளன் இந்த நிதான காட்சி வழி கதை சொல்லும் தனமையை ஏற்றுக்கொண்டு சினிமாவை உயிர்ப்பித்தது அதிசயம். . தமிழ் சினிமாவின் மகத்தான ரசனை மாற்றம் எனலாம். அடுத்து வந்த பரியேறும் பெருமாள் மக்கள் அரசியலை வலி நிறைந்த குரலுடன் பேசியது. தொழில் நுட்ப நேர்த்தியுடன் சமூகத்தின் சாதிய வன்முறைகளை தோலுரித்துக்காட்டி அதிர வைத்தது.

இந்த படங்கள் போட்டுத் தந்த ரசனை மாற்றம் எனும் பெரிய காரியம் மூலமாக இன்று டூலெட் தமிழ் சினிமாகவும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.டூலெட்டின் இன்னொரு சிறப்பு, தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற முதல் தன்னாட்சி திரைப்படம்.

முந்தைய சினிமாக்கள் தமிழ் சினிமாவின் வணிக கட்டமைவுக்குள் உருவாக்கப்பட்டன. தனுஷ் ஏஸ் ஆர் பிரபு விஜய் சேதுபதி மற்றும் ரஞ்சித் ஆகிய வணிக சினிமாவின் ஆளுமைகள் துணையுடன் தயாரிப்பு மற்றும் வழக்கமான வர்த்த்க வெளியீட்டு சூழலுக்குள் உருவாக்கப்பட்டன.

ஆனால் டூலெட் திரைப்படம் தயாரிப்பாளர் எனும் வியாபார நிச்சயமற்ற பின்புலத்துடன் உருவாக்கப்பட்ட சினிமா.. . ஒரு செடிபோல சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்படும் சினிமாவே தன்னாட்சி சினிமா .திரைப்பட விழாக்களின் வெற்றிமூலம் மக்களிடத்திலே அவை கொண்டு செல்லப்படும் போது இன்னும் அவை முழுமைத் தன்மையை அடைகின்றன.
பலர் இன்னமும் குறைந்த முதலீட்டில் எடுக்கும் படங்கள் எல்லாமே தன்னாட்சி படங்கள் என தவறாக கற்பிதம் கொண்டிருக்கின்றனர். உள்ளடக்கம் தான் அதைத் தீர்மானிக்கும் . தன்னாட்சி சினிமா என்பது மைய நீரோட்ட வணிக சினிமாவின் விதிகளை உள்ளும் புறமுமாக விலக்கி கொண்டவையாக இருக்கவேண்டும் என்பது விதி .

அவ்வகையில் தமிழில் பல தன்னாட்சித் திரைப்படங்கள் உருவாக்கப்ப்ட்டாலும் அவற்றின் காட்சி மொழி இல்லாமல் எதார்த்த பின்புலத்தை மட்டும் சித்தரிக்க முயன்று தோற்றுப்போகின்றன.
அவ்வகையில் டூலெட் தமிழ் சினிமாவின் முதல் அங்கீகாரம் பெற்ற தன்னாட்சி சினிமா எனலாம். அதனையடுத்து இப்போது ஞானச்செருக்கு எனும் திரைப்படம் அதே பாதையில் உலக நாடுகளின் பல விழாக்களில் பங்கேற்று வெனிசூலாவில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என நான்கு விருதுகளையும் கல்கத்தாவின் பியாண்ட் எர்த் 2019 சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

ஒரு படைப்பாளிக்கும் அதிகாரத்துக்குமான சமரில் தன்னை வீழாது காக்கும் ஒரு படைப்பாளியின் கதையை நேர்த்தியான காட்சிமொழியுடன் நறுக்குத்தெறிக்கும் படக்கோர்வையுடன் அசத்தியிருக்கிறார் ஞானச்செருக்கு இயக்குனர் தரணி ராசேந்திரன். படத்தின் மையக்கதை பற்றி இதற்குமேல் சொல்ல விருப்பமில்லை.

படம் தீவிரமான அரசியலை பேசக்கூடிய படம் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
வழக்கமான கலைப்படத்தின் நிதான கதை சொல்லல் தன்மையிலிருந்து விலகி விரைவு காட்சிமொழியுடன் கூடிய திரைப்படம் இது.

இதில் நடித்திருக்கும் ஓவியர் வீர சந்தானம் கடந்த வருடம்தான் உயிர் நீத்து தமிழ் ஓவிய உலகை அதிர வைத்தார். இறப்பதற்கு முன்பே முழுமையாக டப்பிங் வரை பாக்கி இல்லாமல் பணியை முடித்துக் கொடுத்திருக்கிறார் என்பதே ஒருவகை ஆச்சர்யம்தான்.
வீர சந்தானத்தின் நடிப்பு பல இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கிறது. அடடா… இப்படி ஒரு நடிகனை இழந்துவிட்டோமே என நம்மை வேதனைப்படுத்தும் ஆழமான அர்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.

இதில் அவருடன் ஓவியர் விஸ்வம், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தயாரித்து இயக்கிய சென்னையைச் சேர்ந்த பெரிய பின்புலமில்லாத தரணி ராசேந்திரன், தமிழ் சினிமாவை இன்னும் ஒரு அங்குலம் உயர்த்துவார் என உறுதியாக நம்புகிறேன்.
தொடர்ந்து இச் சரடு காப்பாற்றப்பட்டால் தமிழ் சினிமா உலக அரங்கில் மிகப்பெரிய அத்தியாயத்தை துவக்கி தமிழர்க்கு பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை

இந்த பயணத்தின் தொடர்ச்சியாக எனது புதிய திரைப்படத்தின் வேலையையும் துவக்கி இருக்கிறேன் . நானே எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பு எனும் பெரும் சுமையையும் தோளில் தூக்கிக்கொண்டேன் . 

ஆர்வமும் விருப்பமும் இருக்கும் நண்பர்கள் கைகோர்க்கலாம் . தமிழ் சினிமாவின் உலகத்தரத்துக்கு எனது படம் அடுத்த பாய்ச்சலை உருவாக்கித்தரும் என்ற நம்பிக்கையை மட்டும் உங்களுக்கு என்னால் உத்தரவாதம் தரமுடியும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *